பக்கங்கள் செல்ல

cross tab2

Sunday, July 28, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் குறித்தும் அதன் எழுத்தர்கள் குறித்த வரலாற்று குளறுபடிகள் குறித்தும் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் இன் ஷா அல்லாஹ் அடுத்ததாக லூக்காவின் படியான சுவிஷேசம் குறித்து பார்க்க இருக்கிறோம். புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் கிரேக்க மொழியியலில் பெரிதும் பண்பட்ட வடிவத்தை லூக்காவின் படியான நற்செய்தி நூல் தாங்கி நிற்பதாக கிறித்தவ உலகத்தால் கூறப்படுகிறது. இப்படி கிறித்தவ உலகத்தால் சிலாகித்து கூறப்படும் லூக்காவின் படியான நற்செய்தியின் ஆசிரியரின் வரலாற்று தரவுகளையும், புதிய ஏற்பாட்டின் தரவுகளையும் ஒப்பிட்டு அதன் நிலையை இந்த கட்டுரையில் விரிவாக விளக்க இருக்கிறோம்.

 

🎯யார் இந்த லூக்கா?


    இந்த சுவிஷேசத்தின் ஆசிரியர் லூக்கா என்பது கிறித்தவ உலகின் நம்பிக்கை. ஏனைய நற்செய்தி நூல்களை போலவே இந்த நூலிலும் இந்த நூலின் ஆசிரியர் தன்னை எந்த இடத்திலும் வெளிக்காட்டவில்லை. ஆனால் ஏனைய நற்செய்தி நூலில் இருந்து இந்த நூல் ஒரு வேறுபாட்டை கொண்டுள்ளது. உதாரணமாக மத்தேயூவின் படியான நற்செய்தி நூல் மத்தேயூ எனும் ஏசுவின் சீடரால எழுதப்பட்டது என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. அந்த கூற்றின் அவல நிலையை நாம் சென்ற தொடரில் விரிவாக கண்டிருந்தோம். கிறித்தவர்களின் அத்தகைய பூச்சு வேலைக்கெல்லாம் இடம் தராதவாறு இந்த நூலின் ஆசிரியரே இந்த நற்செய்தி நூலை தாம் விசாரித்துதான் எழுதியதாக சுயவாக்குமூலம் அளித்துள்ளார்.
    மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.  (லூக்கா 1:1-4)

    மேலும் இந்த ஆசிரியர் குறித்து கிறித்த உலகம் இன்னொரு நம்பிக்கையையும் கொண்டுள்ளது. அதாவது இந்த லூக்காதான், அப்போஸ்தல நடபடிகள் என்ற நூலையும் இயற்றியதாக கூறிவருகிறது. அதற்கு ஆதாரமாய் பின்வரும் வசனம் முன்வைக்கப்படுகிறது

    தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். (அப்போஸ்தல் நடபடிகள் 1:1-2)

    எனவே இவ்விரு நூல்கள் குறித்து ஒன்றாக இந்த கட்டுரையில் கண்டுவிடுவோம். “இந்த சுவிஷேசத்தை எழுதிய லூக்கா, பவுலிற்கு நெருக்கமான துணைவர் ஆவார்” என்பது இந்த சுவிஷேசத்தின் ஆசிரியர் குறித்து கிறித்தவ உலகம் கூறிவருவதாகும். லூக்கா என்ற பெயரானது Loukanos (=Latin Lucanus)-லூக்கன், Loukianos (=Lucianus)-லூக்கியான், Loukios or Leukios(=Lucius)- லூகி, Loukillios (=Lucilius)- லூகிலி போன்ற இலத்தின் பெயரின் கிரேக்க சுருக்கமாகும்.( P.No. 42, The Gospel According to LUKE, Introduction, Translation, and Notes by JOSEPH A. FITZMYER, SJ. ). உதாரணமாக அப்போஸ்தல நடபடிகள் 15:40ல் பவுலின் கூட்டாளிகளில் ஒருவராக “σιλαν- சிலா” என்பவர் அறியப்படுகிறார். அவரே பவுலின் கடிதங்களில் ஒன்றான 1 தெசலோனிக்கேயர் 1:1ல் “σιλουανος – சில்வான்” என்று அறியப்படுகிறார். பின்வரும் வசனங்ககளில் குறிப்பிடப்படும் கிரேக்க பெயர் சுருக்கம் கொண்ட லூக்கா என்பவர்தான் இந்த சுவிஷேசத்தின் எழுத்தாளர் என்று கிறித்தவ உலகம் கூறி வருகிறது.

📜பவுலின் கடிதங்களில் லூக்கா

என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள். எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (கொலோசெயர் 4:10-14)
    ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். (2 தீமோத்தேயு 4:10-11)
    கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும், என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (பிலேமோன் 1:23-24)

📜அப்போஸ்தல நடபடிகளில் பவுலின் துணைவராக லூக்காவின் ஆசிரியர்- "நாம் பத்திகள்"

    துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி, அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம். ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.(அப்போஸ்தல நடபடிகள் 16:11-14)
    இவர்கள் முன்னாகப் போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். (அப்போஸ்தல நடபடிகள் 20:5-7)
நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். (அப்போஸ்தல நடபடிகள் 28:16)

    மேற்குறிபிட்ட வசனங்களில் "நாங்கள்", "எங்கள்" போன்ற வார்த்தை பிரயோகங்கள் அப்போஸ்தல் நடபடிகளை எழுதியவர் பவுலின் கூட்டாளிகளில் ஒருவர் என்பது கிறித்தவர்களின் வாதம் 

🎯புதிய ஏற்பாட்டின் தரவுகளும் அதில் இருக்கும் சிக்கல்களும்:

    லூக்கவின் படியான சுவிஷேசத்திலும், அப்போஸ்தல நடபடிகளிலும் எந்த இடத்திலும் “லூக்காவாகிய நான்” என்ற சொற்றொடர் எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. யாருக்கு எழுதுகிறோம் என்பதை தெளிவாக பதிபித்தவர், யார் எழுதுவது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

📜லூக்கா என்ற பெயரை கொண்டிருக்கும் இருவர்: 


    முன்சென்ற கட்டுரைகளில் நற்செய்தி நூல்களின் ஆசிரியர் குறித்த தகவல்களில் எப்படி குளறுபடிகள் இருந்தனவோ அதே நிலைதான் இந்த நற்செய்தி நூலிற்கும். கிறித்தவர்கள் கூறிவருவது போல ஒரே ஒரு லூக்காதான் பவுலின் துணைவராக இருந்தாரா என்றால் அதுதான் இல்லை. பவுலிற்கு லூக்கா கிரேக்க பெயர்சுருக்கம் கொண்ட துணைவர்கள் இருவர் இருந்ததாக பவுலின் கடிதங்கள் கூறுகின்றன. அதில் ஒருவர் யூதரல்லாதவர். மற்றவர் யூதர்.

📜யூதரல்லாத லூக்கா:

    என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள். எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (கொலோசெயர் 4:10-14).
    அதாவது கொலோசெயர் 4:10-14ல்  குறிப்பிடப்படும்  பவுலின்கூட்டாளிகளில் அரிஸ்தர்க்கு, மாற்கு,யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் ஆகியோர் மட்டுமே விருத்தசேதனம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. அதாவது யூதர்கள் என்று கூறுகிறது. லூக்காவும், தேமாவும் அந்த லிஸ்டில் இல்லை. அதாவது அவர்கள் யூதரல்லாதவர் என்று கூறப்படுகிறது  கொலோசெயர் 4:10-14ல்.

📜யூத லூக்கா:

ασπαζονται υμας τιμοθεος ο συνεργος μου και λουκιος και ιασων και σωσιπατρος οι συγγενεις μου

Timothy, my fellow worker, greets you, as do Lucius, Jason, and Sosipater, my fellow Jews.

என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.(ரோமர் 16:21)
    மேலே குறிப்பிடம் படும் λουκιος- லூகி தன் இனத்தான் என்று பவுல் அடையாளப்படுத்துகிறார். லூக்கா என்ற சுருக்கப் பெயர் லூகி என்ற பெயரையும் குறிக்ககூடியது என்பதை நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே கண்டிருந்தோம். λουκιος- லூகி என்ற பெயரின் சுருக்கமும்  λουκας-லூக்கா தான் என்பதை அடல்ஃப் டைஸ்மென் என்பவர் பண்டைய கிழக்கு குறித்த தனது நூலில் கல்வெட்டுக்களை ஆதாரமாக கொண்டு விளக்குகிறார். A. Deissmann,  அவர்களது Light from the Ancient East P.No.436ல் பின்வருமாறு கல்வெட்டுக்களை ஆதாரமாக கொண்டு பதிவுசெய்துள்ளார்


    அதாவது முதல் கல்வெட்டில் லூகி என்று கூறப்படுபவர், இரண்டாம் கல்வெட்டில் லூக்கா என்று அழைக்கப்படுகிறார் என்று டைஸ்மேன் ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளார். பெயர் சிக்கலுக்கான தீர்வை கண்டுவிட்டதாகவும் கூறுகிறார். நாம் மேலே குறிப்பிடும் இந்த கருத்து வினோதமான கருத்து அல்ல மாறாக ஓரிகன் காலத்திலேயே (கி.பி. 185 – 253) யார் இந்த லூக்கா என்பதில் குழப்பம் நிலவி வந்துள்ளது.
6. Moreover, some maintain that this very Lucius is Luke, who wrote the Gospel, since it is customary for names to be given sometimes in accordance with the native declensions, sometimes even according to the Greek or Roman declension.

6.மேலும், இந்த லூசியஸ் நற்செய்தியை எழுதிய லூக்கா என்று சிலர் நம்புகிறார்கள், ஏனெனில் சில சமயங்களில் பூர்வீக உச்சரிப்புகளுக்கு ஏற்பவும் ,சில சமயங்களில் கிரேக்க அல்லது ரோமானிய உச்சரிப்புகளுக்கு ஏற்பவும் கூட பெயர்கள் வழங்கப்படுவது வழக்கம்,. .(ORIGEN COMMENTARY ON THE EPISTLE TO THE ROMANS BOOKS 6–10, Commentary on verse 16:21, P.NO.304)
    மேலே கூறப்பட்ட தரவுகள் அடிப்படையில் லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதியது யூத லூக்காவா அல்லது யூதரல்லாத லூக்காவா என்பதில் பல நூற்றாண்டுகளாக கிறித்தவ உலகில் குழப்பம் நிலவி வருவது அம்பலமாகிறது.

🎯லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதியவர் மருத்துவரா????


    மேற்குறிபிட்ட இந்த குழப்பமான நிலையை எதிர் கொள்ள ரெவரண்ட் வில்லியம் கிர்க் ஹோபர்ட் என்பவர் ஒரு நூலை வெளியிட்டார். லூக்காவை, பவுல் கொலோசெயர் 4:14ல் குறிப்பிடும் போது வைத்தியன் என்று குறிப்பிடுகிறார். இதை அடிப்படையாக கொண்டு ரெவரண்ட் வில்லியம் கிர்க் ஹோபர்ட் அவர்கள் லூக்காவின் சுவிஷேசம் மற்றும் அப்போஸ்தல நடபடிகளில் இருக்கும் மருத்துவ வார்த்தைகள் குறிப்பிட்டு காட்டி “The Medical Language Of St. Luke: A Proof From Internal Eviidence That “The Gospel According To St. Luke” And The Acts Of The Apostles” - Were Written By The Same Person, And That The Writer Was A Medical Man.” என்ற நூலை 1882ல் வெளியிட்டார். அதில் கிட்டதட்ட 400 வார்த்தைகளை பட்டியலிட்டு, லூக்கா ஒரு மருத்துவர் எனவே கொலோசெயர் 4:14ல் பவுலால் கூறப்படும் அந்த லூக்காதான், லூக்காவின் படியான சுவிஷேசத்தை இயற்றியவர் என்று வாதிட்டார்:
    The purpose of this work is to show, from an examination of the language employed in the third Gospel and the Acts of the Apostles, that both are the works of a person well acquainted with the language of the Greek Medical Schools a fact which, if established, will strongly confirm the belief that the writer of both was the same person, and was the person to whom they have been traditionally assigned by the Church , who is mentioned by St. Paul (Coloss. iv. 14) as “Luke, the beloved Physician”— an identity which some have doubted or denied.

    இந்த உருவாக்கத்தின் நோக்கம், மூன்றாம் நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர்களின் நடபடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியைப் பரிசோதிப்பதன் மூலம், இரண்டும் கிரேக்க மருத்துவப் பள்ளிகளின் மொழியை நன்கு அறிந்த ஒரு நபரின் படைப்புகள் என்பதைக் காட்டுவதாகும். அது நிறுவப்பட்டால், இரண்டையும் எழுதியவர் ஒருவரே என்றும்,  சிலரால் மறுக்கப்பட்ட அல்ல சந்தேகிக்கப்பட்ட அடையாளமான,  புனித பவுலால் பிரியமான வைத்தியனாகிய லூக்கா என்று கொலோசெயர் 4:14ல் கூறப்பட்டு, திருச்சபையால் பாரம்பரியமாக அவற்றிற்கு சூட்டப்பட்டவர் என்ற நம்பிக்கையை வலுவாக உறுதிப்படுத்தும், (“P.No.XXIX , The Medical Language of St. Luke: A Proof from Internal Evidence that “The Gospel According To St. Luke” And The Acts of  The Apostles” - Were Written By The Same Person, And That The Writer Was A Medical Man.” )
        இந்நிலையில் HENRY J. CADBURY, என்ற ஹார்வர்ட் இறையியல் கல்லூரி பேராசிரியர் மற்றும் புதிய ஏற்பாட்டு அறிஞர் 1920ல் THE STYLE AND LITERARY METHOD OF LUKE என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

     Plummer has pointed out that of Hobart’s long list of words: “More than eighty per cent are found in LXX, mostly in books known to St. Luke, and sometimes occurring very frequently in them. In all such cases it is more reasonable to suppose that Luke’s use of the word is due to his knowledge of LXX, rather than to his professional training. . . . If the expression is also found in pro-fane authors, the chances that medical training had anything to do with Luke’s use of it become very remote. It is unreasonable to class as in any sense medical such words as ἀθροίζειν, ἀκοή, ἀναιρεῖν, ἀναλαμβάνειν, ἀνορθοῦν, ἀπαιτεῖν, ἀπαλλάσσειν, ἀπολύειν, ἀπορεῖν, ἀσφάλεια, ἄφεσις, etc., etc. All of these are frequent in LXX, and some of them in profane authors also.”

    The figures for Josephus are no lower. From Krenkel’s lists ” it appears that of the 400 words in Hobart’s index about 300 occur in both LXX and Josephus, 27 in LXX but not in Josephus, while 67 are in Josephus but not in LXX.* So that Josephus, who as a single author makes a fair parallel to Luke, uses ninety per cent of the ‘medical words” listed by Hobart. A comparison of Hobart’s list with the lexica of two profane authors of the same period, Plutarch and Lucian,” shows that over ninety per cent of the list is found in one or both of these two authors. Of the remaining thirty or forty words few seem to have any strikingly medical signification in Luke. It is clear, therefore, that Hobart’s list contains very much that is without significance, many of his words being common words with-out any special medical use. While he shows most diligently that the words he catalogues are employed by the medical writers, he, does not show that they are not employed by other writers with no professional training. Even those who accept his argument realize this. ‘He has proved only too much,” says Harnack

    ஹோபர்ட்டின் நீண்ட சொற்களின் பட்டியலை பிளம்மர் சுட்டிக்காட்டி “LXXல் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானவை காணப்படுகின்றன, அவை பெரும்பாலும் புனித லூக்காவிற்கு தெரிந்த புத்தகங்களில், சில சமயங்களில் அடிக்கடி இடம்பெறுபவை. இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும், லூக்காவின் இந்த வார்த்தையின் பயன்பாடு அவரது தொழில்முறை பயிற்சிக்கு பதிலாக, LXX பற்றிய அவரது அறிவின் காரணமாகும் என்று கருதுவது மிகவும் நியாயமானது……. இந்த வரிவடிவங்கள் சாதரண எழுத்தர்களிடமும் காணப்படுமானால், மருத்துவப் பயிற்சிக்கும், லூக்கா அதைப் பயன்படுத்தியதற்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ἀθροίζειν, ἀκοή, ἀναιρεῖν, ἀναλαμβάνειν, ἀνορθοῦν, ἀπαιτεῖν, ἀπαλλάσσειν, ἀπολύειν, ἀπορεῖν, ἀσφάλεια, ἄφεσις இன்னும் பலசொற்களை, எந்த வகையிலும் மருத்துவத்திற்கு உரியது என வகுப்பது நியாயமற்றது. இவை அனைத்தும் LXXலும் சாதாரண எழுத்தர்களி (ஆக்கங்களி)லும் அடிக்கடி இடம்பெறுகின்றன,” என்று கூறுகிறார்.

    ஜோசஃபஸ்ஸிற்கான புள்ளிவிவரங்களும் குறைவாக இல்லை. கிரென்கெலின் பட்டியல்களிலிருந்து ஹோபார்ட்டின் அட்டவணையில் உள்ள 400 சொற்களில் 300 LXX மற்றும் ஜொசிஃபஸ் இரண்டிலும் இடம்பெறுகின்றன, 27, LXX இல் உள்ளன ஆனால் ஜோசபஸில் இடம்பெறவில்லை, 67, ஜோசஃபஸில் உள்ளன ஆனால் LXX இல் இடம்பெறவில்லை என்பது தெரிகிறது. லூக்கிற்கு இணையாக, தனித்த எழுத்தராக ஜோசபஸ், ஹோபர்ட் பட்டியலிட்டதில் தொண்ணூறு சதவீத ‘மருத்துவ வார்த்தைகளை’ பயன்படுத்துகிறார். ஹோபர்ட் பட்டியலை, அதே காலகட்டத்தைச் சேர்ந்த புளூடார்ச் மற்றும் லூசியன் ஆகிய இரு சாதாரண எழுத்தர்களின் லெக்சிகாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமானது, இந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ காணப்படுவதாகக் தெரிகிறது. மீதமுள்ள முப்பது அல்லது நாற்பது வார்த்தைகளில் சில சொற்கள் லூக்காவில் குறிப்பிடத்தக்க மருத்துவக் முக்கியத்துவம் கொண்டதாகத் தெரிகிறது. எனவே, ஹோபர்ட்டின் பட்டியல் எந்த ஒரு சிறப்பு மருத்துவப் பயன்பாடும், முக்கியத்துவம் இல்லாத பொதுவான சொற்கள், பலவற்றைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவர் பட்டியலிடும் வார்த்தைகள் மருத்துவ எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டவை என்பதை அவர் மிகவும் விடாமுயற்சியுடன் காட்டினாலும், தொழில்முறை பயிற்சி இல்லாத மற்ற எழுத்தாளர்களால் அவை பயன்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டவில்லை. அவருடைய வாதத்தை ஏற்றுக்கொள்பவர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். ஹர்னாக் ‘அவர் மிகைப்படுத்தலையே நிரூபித்திருக்கிறார்’ என்று கூறுகிறார். ( THE STYLE AND LITERARY METHOD OF LUKE P.No.41)
    The style of Luke bears no more evidence of medical training and interest than does the language of other writers who were not physicians. This result, it must be confessed, is a purely negative one.
    மருத்துவராக இல்லாத மற்ற எழுத்தாளர்களின் மொழியைக் காட்டிலும், லூக்காவின் பாணி, மருத்துவப் பயிற்சி மற்றும் ஆர்வத்திற்கு எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. இந்த முடிவு முற்றிலும் எதிர்மறையானது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ( THE STYLE AND LITERARY METHOD OF LUKE P.No.51)
    எனவே ஹோபர்ட்டின் ஆய்வை அவரது வாதத்தை ஏற்பவர்கள் கூட முழுமையாக சரிகாணவில்லை என்பது HENRY J. CADBURY அவர்களது வாதத்தில் இருந்து அறியமுடிகிறது. எனவே இரு லூக்காவில் ஒருத்தர் மருத்தவர் அவரே லூக்காவின் படியான சுவிஷேசத்தின் எழுத்தர் என்ற வாதமும் நிலைக்க முடியவில்லை. உள்ளடக்கத்தை கொண்டு எந்த லூக்கா என்பதை உறுதியாக நிறுவ இயலாத குழப்ப நிலையே நிலவுகிறது.

🎯வரலாற்று ஆவணங்களில் காணப்படும் குளறுபடிகள்:

நாம் முன்சென்ற தொடரில் நற்செய்தி நூல்களின் வரலாற்று ஆதாரங்கள் குறித்து தொகுத்து வழங்கியுள்ளோம். அதனை காணும் போது, எப்படி புதிய ஏற்பாட்டின் உள்ளடக்க தரவுகளில் யூதர் லூக்கா, யூதரல்லாத லூக்கா என்று குழப்பம் நிலவுகிறதோ, அதே குழப்பம் வரலாற்று தரவுகளிலும் பிரதிபலிக்கிறது. யூசிபியஸை பொறுத்தவரை (கொலோசெயர் 4:10-14)ல் கூறப்படுவது போல் லூக்கா யூதரல்லாத லூக்கா, லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதினார், ஸலாமிஸின் எபிஃபேனியஸ் மற்றும் ஹிப்போபோலிடஸ் ஆகியோரை பொறுத்தவரை யூத லூக்கா இயேசுவால் தேர்வு செய்யப்பட்ட 70 அப்போஸ்தலர்களில் ஒருவர். வழிதவறி சென்றவரை பவுல் மீட்டெடுத்தார் இந்த யூத லூக்காதான் லூக்காவின் படியான சுவிஷேசத்தை எழுதினார். இந்த வரலாற்று ஆவணங்களின் குழப்பத்தில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் யாரோ ஒருவர் எழுதிய நூலிற்கு லூக்காவின் பெயரை சூட்டுவதற்கு வரலாற்றில் கிறித்தவ உலகம முயற்சி செய்ததையும், தற்காலத்தில் செய்வதையுமே  காட்டுகிறது. 

" Hence the Apostle praises him deservedly when he says, "He is praised for his Gospel throughout all the churches (2 Cor 8:18) .Scripture says this about no one else; it uses the expression only for Luke.(Origen’s Homilies on Luke, HOMILY 1) 

ஆகவே, “சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரன் (2 கொரிந்தியர் 8:18)” என்று கூறும் போது அப்போஸ்தலர் அவரைத் தகுதியுடன் பாராட்டுகிறார். வேதம் வேறு யாரை பற்றியும் இப்படி கூறவில்லை; லூக்காவிற்கு மட்டுமே இந்த வாக்கியத்தை பயன்படுத்துகிறது. .(Origen’s Homilies on Luke, HOMILY 1) "

    மேலே ஓரிகன் குறிபிட்ட படி ஒருவர் மிகவும் சிறப்பிற்குரியவராக இருந்து அவர் நற்செய்தி நூலை இயற்றியும் இருந்தால், அந்த நபரின் வரலாற்றில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்.

🎯எழுதப்பட்ட காலம்:


லூக்கா குறித்த முடிவில் புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று ஆவணங்களும், குழம்பி நிற்கும் நிலையில், அது இயற்றப்பட்டதாக அனுமாகிக்கப்படும் கால அட்டவனையும் உண்மையில் கிறித்தவ உலகம் எவ்வளவு இந்த விஷயத்தில் குழம்பி நிற்கிறது என்பதை படம் பிடித்துக்காட்டுகிறது. அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.213 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம்.

c.54-56 A.D. Blass
c.53-57 A.D. Kuppers
c.58-62 A.D. Alford, Schaff,
c.61-62 A.D. Belser 
c.59-63 A.D. Cornely 
c.63-64 A.D. Horne, Michaelis, Guericke, Fillion, Resch.
c.65-70 A.D. Godet, Hahn, Schanz, Schafer, Batiffol.
c.60-70 A.D. Jacquier,Harnack.
c.70-80 A.D. Bleek, Beyschlag, Weiss, Adeney, Bartlet, Bovon, Plummer, Sanday, Wright, Zahn, Feine.
c.75-90 A.D.Barth
c.80-90 A.D. Kostlin, Mangold, Abbott, Carpenter, J. Weiss, Bacon, McGiffert, Julicher , Briggs, 
c.90- 100 A.D. Keim, Renan, Soltau, Wernle, Knopf, Schmiedel, Burkitt, Loisy, Peake, Montefiore, Buckley.
c. 100 A.D. Holsten, Scholten, Pfleid., J. Weiss, O. Schmiedel, W. Haupt. 
c.100-110 A.D.
Volkmar, Rovers, Holtzmann, S. Davidson, Hilgenfeld, Weiss, Hausrath, Schmiedel.
c. 130 A.D. Baur

    கி.பி. 50 முதல் கி.பி.130 வரையிலான கிட்டதட்ட 80 ஆண்டுகால இடைவெளியை லூக்காவின் படியான சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக கிறித்தவ உலகம் கூறிவருகிறது. மேற்குறிபிட்ட இந்த கால கருத்தியலுக்கு ஒவ்வொரு அறிஞர்கள் தங்களது வாதத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை கொண்டிருப்பார்கள்.

    எனவே யார் லூக்கா என்று சரியாக அறியப்படாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் தனக்குள்ளேயே முரண்படுகின்றது என்ற நிலையில், லூக்கா என்ற நபர் குறித்த புதிய ஏற்பாட்டின் தரவுகளும் தங்களுக்குள் முரணபட்டு அரைகுறையாக இருக்கிறது என்ற நிலையில், எப்போது எழுதப்பட்டது என்பதில் கூட கருத்து ஒற்றுமை இல்லாத நிலையில், வரலாறு கூறும் லூக்காவினால் நேரடியாக எழுதப்பட்ட ஒரு ஆவணம் , “லூக்காவின் படியான சுவிஷேசம்” என்று யார் என்று அட்ரஸில்லாத நபரின் விவரிப்பாக தலைப்பை இன்று தாங்கி நிற்கும் நிலையில், “லூக்காவின் படியான சுவிஷேசம்" அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி லூக்காவின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.   

🎯ஒத்தமை சிக்கலின் ஊற்றுக்கண்:


நாம் ஒத்தமை நற்செய்தி நூல்களில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அதற்கு தீர்வு என்ற பெயரில் கூறப்பட்ட அனுமானங்கள் குறித்தும் ஓரளவு விரிவாக கண்டிருந்தோம். இந்த மத்தேயூ மாற்கு லூக்கா ஆகியோரின் படியான சுவிஷேசங்களின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் மிக முக்கிய இட்த்தினை ஒத்தமை சிக்கல் வகிக்கிறது என்பதையும் விளக்கியிருந்தோம். இந்த ஒத்தமை நூல்களின் எழுத்தர்கள் குறித்த  புதிய ஏற்பாட்டின் தரவுகள் அரைகுறையானதாகவும், முரண்படுபவையாகவும் இருப்பதாலும், வரலாற்று ஆவணங்கள் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு, புதிய ஏற்பாட்டின் தகவல்களையும் பதம் பார்ப்பதாலும், இந்த நூல்களை எழுதியவர்கள் யார் என்பதில் ஒரு மையக்கருத்தில் கிறித்தவ உலகால் இணைய முடியவில்லை. ஒத்தமை சிக்கலின் ஊற்றுக்கண்ணே இந்த அரைகுறையான போலியான வரலாற்று ஆதாரங்களும், அனுமானங்களும் கையாடலுமே என்பதை புதிய ஏற்பாட்டின் மாபெரும் அறிஞர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த J. A. Fitzmyer பின்வருமாறு குறிப்பிடுகிறார்

J. A. Fitzmyer summarizes the grand shortcoming this way (Fitzmyer 1981 : 63):
    [The synoptic problem is] a problem that has thus far failed to find a fully satisfying solution. The main reason for this failure is the absence of adequate data for judgment about it. Extrinsic, historically trustworthy data about the composition of these Gospels are totally lacking, and the complexity of the traditions embedded in them, the evangelists ’ editorial redaction of them, and their free composition bedevil all attempts to analyse objectively the intrinsic data with critical literary methods. (The Blackwell companion to New Testament P.No: 241)
    (சினோப்டிக் பிரச்சனை) இதுவரை ஒரு முழுமையான திருப்திகரமான தீர்வைக் கண்டுபிடிக்கத் தவறிய ஒரு பிரச்சனை. இந்த தோல்விக்கான முக்கிய காரணம், இது பற்றிய தீர்வுக்கு போதுமான தரவு இல்லாததுதான். இந்த நற்செய்திகளின் தொகுப்பு பற்றிய வெளிப்புற, வரலாற்று ரீதியாக நம்பகமான தரவு முற்றிலும் இல்லை, மேலும் அவற்றில் பொதிந்துள்ள மரபுகளின் சிக்கலான தன்மை, சுவிசேஷகர்களின் எழுத்துருவாக்க திருத்தங்கள், மற்றும் அவர்களின் கட்டற்ற தொகுத்தல் ஆகியவை விமர்சன இலக்கிய முறைகள் மூலம் உள்ளார்ந்த தரவுகளை நடுநிலையாக பகுப்பாய்வு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பாழ்படுத்திவிடுகிறது.(The Blackwell companion to New Testament P.No: 241)

   இப்படியான அரைகுறையான வரலாற்று ஆதாரங்களை உடைய ஒரு நூலை தங்களது வேதமாக கொண்டிருக்கும் கிறத்தவ மிசனரிகள், அல் குர்ஆனின் பாதுகாப்பை கேள்வி கேட்க புறப்பட்டுள்ளனர். ஒரு பொருள் எப்படி உருவானது என்பது அறியாத நிலை ஏற்படும் போதெல்லாம், அதிலிருந்து வந்திருக்கும், இதிலிருந்து வந்திருக்கும் என்ற அனுமானங்களே விடையாக இருக்கும். அதே நிலைதான் ஒத்தமை நற்செய்தி நூல்களுக்கும் அதன் சிக்கல்களுக்கும். நற்செய்தி நூல்களின் எழுத்தர்கள், அவற்றின் வரலாறு, இயற்றப்பட்ட காலம் என்று எதிலும் கிறித்தவ உலகில் எந்த ஒத்த கருத்தும் ஏற்பட வில்லை. எனவே அந்த நற்செய்தியில் இருந்து இது தோன்றியிருக்கும் என்ற அனுமானம் தேவைப்படுகிறது. அல்லாஹு அஃலம். இன் ஷா அல்லாஹ் இனியும் தொடர்வோம்…….

Saturday, July 20, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    
புதிய ஏற்பாட்டின் நூல்களின் பாதுகாப்பு மற்றும் வரலாற்று ஆவாணங்களை நிலை குறித்து தொடராக கண்டு வருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக காணவிருப்பது மாற்கு சுவிஷேசமாகும். மாற்கு சுவிஷேசத்தை பொறுத்தவரை பீட்டரின் சீடர் அல்லது மொழிபெயர்ப்பாளரான மாற்கு என்பவரால் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாற்கு குறித்த வரலாற்று ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துவற்கு முன்பாக, யார் இந்த மாற்கு? என்பதையும், கிறித்தவ உலகம் எப்படி யார் இந்த மாற்கு என்பதில் தெளிவற்று நிற்கிறது என்பதையும் முதலில் காண்போம்.

✅யார் இந்த மாற்கு❓


    நாம் சென்ற கட்டுரையில் கண்டது போலவே மாற்கின் படியான சுவிஷேத்தின் எந்த இடத்திலும் இது மாற்கு எழுதியது என்பதற்கோ, நேரடியாக கண்ட சாட்சியம் என்பதற்கோ எந்த வெளிப்படையான செய்திகளையோ, நேரடியாக கண்ட சாட்சியங்கள் விவரிக்கும் முறையயோ இந்த சுவிஷேசம் பெற்றிருக்க வில்லை. இந்த மாற்கு யார் என்பது குறித்து கிறித்தவ உலகம் என்ன கூறிவருகிறது என்பதை முதலில் இங்கு காண்போம்.

    “இந்த சுவிஷேசத்தை எழுதிய மாற்கு, பேதுருவிற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பாளர் அல்லது விரிவுரையாளர் ஆவார். எனவே பேதுருவிடம் கேட்டே இந்த சுவிஷேசம் எழுதப்பட்டது” என்பது கிறித்தவ உலகம் இந்த சுவிஷேசம் குறித்து கூறிவருவதாகும். பின்வரும் வசனங்ககளில் குறிப்பிடப்படும் ஜான் மாற்கு என்பவர்தான் இந்த சுவிஷேசத்தின் எழுத்தாளர் என்று கிறித்தவ உலகம் கூறி வருகிறது.
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். (அப்போஸ்தல நடபடிகள்  12:12)
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.(அப்போஸ்தல நடபடிகள்  12:25) 
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
(அப்போஸ்தல நடபடிகள்  13:5) 
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.(அப்போஸ்தல நடபடிகள்  13:13)

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானை கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். 
(அப்போஸ்தல நடபடிகள் 15:35-39)
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(பிலேமோன் 1:24) 
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.(கொலோசெயர் 4:10)

லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.(2 தீமோத்தேயு 4:11)  
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(1 பேதுரு 5:13)

நற்செய்தியாளர் மாற்கு பேதுருவின் பிள்ளையா? பவுலின் அடிமையா?: அரைகுறையாக இருக்கும் புதிய ஏற்பாட்டின் செய்திகள்:


    மேற்குறிபிட்ட வசனங்களில் 1பேதுரு தவிர எந்த இடத்திலும் மாற்க் பேதுருவுடன் இணைந்து செயல் பட்டதாக அறியப்பட வில்லை. ஆனால் மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முழுமைபெறாமல் சிக்கலை தோற்றுவிக்கிறது. பவுல் பிலேமோனிற்கு நிருபம் எழுதும் போது அவர் செசரியாபட்டணத்தில் சிறைக்காவலில் இருந்த போது எழுதியதாகும்.
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி ஒரு நிருபத்தையும் எழுதினான்; ……………அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.( Acts 23:24-35)

இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான். (Acts 24:27) 

        மேற்குறிபிட்ட செய்திகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது என்பதை காட்டுகிறது. அதாவது செசரியாபட்டணத்தில் பேலிக்ஸ் மற்றும் பொர்க்கியுபெஸ்து ஆகிய இருவர் தேசாதிபதியாக இருந்த காலத்தில் என்று கூறுகிறது. ரோம வரலாற்றாளர் ஜோஸபஸின் படி கிபி 60ல் பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிகிறது. ஆக பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாயில் பவுல் சிறையில் இரண்டாண்டு காலம் கழித்தார் என்றால் அது கிட்டதட்ட கிபி 59 முதல் 60 வரை உள்ள காலம்.

    மறுபுறம் 1பேதுரு நிருபம், பாபிலோனிய சபையில் இருந்து பேதுரு எழுதுவதாக கூறுகிறது. அன்று பாபிலோனிய சபை என்று எதுவும் இருக்கவில்லை. அது ரோம் திருச்சபையையே குறிக்கிறது என்று கிறித்தவ விரிவுரையாளர்கள் சப்பை கட்டு கட்டி வருகின்றனர்(1). அது ரோம் திருச்சபையை குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டால், பேதுருவின் ரோமின் ஊழியக்காலம் நீரோ மன்னனின் ஆட்சிக்காலத்தின் இறுதி பகுதி. அதாவது கிபி 64-68.(2). அதன் கடினத்தை கருத்தில் கொண்டே 1பேதுரு ரோமை, “பாபிலோனிய சபை” என்று கூறுகிறது என்று அனுமானிப்போம். கி.பி.60 வரை ஜான் மாற்கு தன்னுடன் கழித்ததாக பவுல் பிலேமோன், கொலோசெயர் ஆகிய நிரூபத்தில் கூறுவதை காணமுடிகிறது. அதன் பிறகும் தன்னிடம் அழைத்து வர பவுல் கூறுவதாக தீம்மோத்தியுவிற்கு கடிதம் எழுதியதை அறிய முடிகிறது. தீம்மோத்தியு தன்னுடைய ஊழியகாலத்தை துருக்கி நாட்டில் செலவிட்டதாக அப்போஸ்தல நடபடிகள் 20:4-5, மற்றும் யூஸுபியஸின் சர்ச் வரலாறு கூறுகிறது. இதற்கு முன்பும் பிறகும் மாற்கு பேதுருவிடம் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே 1பேதுருவில் கூறப்படும் மாற்க்தான், பவுலின் ஊழியக்காரனான ஜான் மாற்கு என்பதையும், அவர்தான் மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதினார் என்பதை ஆணித்தரமாக நிறுவ இயலாது. அனுமானிக்க கூட போதிய முகாந்திரம் இல்லை.

    மேலும் இதே சிறையில் இருக்கும் போது பவுல் எழுதிய நிருபமான ரோமர் 16:3-15 வரை, ரோம சபையில் இருந்த தனது வேலையாட்கள் முதற்கொண்டு பலருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பவுல் பேதுருவையே விட்டுவிட்டார், ரோமில் மாற்கு இருந்ததாக எந்த குறிப்பும் புதிய ஏற்பாட்டில் இல்லை. மேலும் அன்றைய காலத்தில் யூதர்கள் மத்தியில் மிகப்பிரபலமான 99 பெயர்களில் மாற்கு என்ற பெயரும் ஒன்று. அதிகமான யூதர்கள் அந்த பெயரை சூட்டிக்கொண்டிருந்தனர் (Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, Table 6: The 99 Most Popular Male Names among Palestinian Jews, 330 BCE-200 CE58). இந்நிலையில் மிக எளிமையாக கூறுவது என்றால், புதிய ஏற்பாட்டின் தரவுகளை கொண்டு பேதுருவுடன் தொடர்பில் இருந்த மாற்குதான், பவுலின் அடிமையாக இருந்த ஜான் மாற்கு என்று நிறுவ இயலாது. வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல்களை ஒப்பு நோக்கும் போது இன்னும் சிக்கல்கள் எப்படி வருகிறது என்பதை காண்போம்.

வரலாற்று தரவுகளில் இருக்கும் குளறுபடிகள்:


    நாம் சென்ற தொடரில் நற்செய்தி நூல்களின் வரலாற்று தரவுகளை கண்டிருக்கிறோம். அந்த தரவுகளில் இருக்கும் குளறுபடிகள் என்ன என்ன என்பதை முதலில் காண்போம்.
👉மாற்கு சுவிஷேசம்தான் முதலில் எழுதப்பட்டதாக மொழியியல் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு நாம் அறிய இயலும். ஆனால் மேற்குறிபிட்ட ஆதாரங்கள் அனைத்தும் மத்தேயூவிற்கு பிறகு எழுதப்பட்டதாக கூறுகிறது. 

👉மாற்கு பேதுருவின் மரணத்திற்கு பிறகு மாற்கு சுவிஷேசத்தை எழுதியதாக ஐரீனியஸ் கூறுகிறார். ஆனால் அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் பேதுரு உயிருடன் இருக்கும் போதே எழுதியதாக கூறுகிறார். மேலும் அதனை பேதுரு கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார். ஆனால் கி.பி, 4ம் நூற்றண்டை சார்ந்த எபிஃபேனியஸ் பேதுருதான் மாற்கிற்கு சுவிஷேசம் எழுத கட்டளையிட்டதாக கூறுகிறார்.  

👉யோவான் கிறிசோஸ்தோம் மாற்கு எகிப்தில் சுவிஷேசம் எழுதியதாக கூறுகிறார். மேலே குறிபிட்ட அனைவரும் ரோமில் எழுதியதாக கூறுகிறார்கள்.
ஆரம்ப கால திருச்சபைகள் மாற்கின் படியான சுவிஷேசத்தை ஏற்றிருந்தன, என்றால் அதன் ஆசிரியரின் வரலாற்று குறிப்பில் ஏன் இத்துனை குளறுபடிகள். கி.பிக்கு முன்பே பலரும் அறிந்த நூல்களின், ஆசிரியர்களின் வரலாற்று குறிப்புகள்  தெளிவாக வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கையில், அனைவரும் அறிந்த பரவலான நூலின் வரலாறு இவ்வளவு குளறுபடிகளுடன் இருக்காது. அதற்கு மாற்றமாக இங்கு இருப்பதை காணமுடிகிறது. எழுதப்படிக்க தெறியாத கூட்டத்திடம் இந்த நற்செய்தி நூல்கள் வந்து சேரவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இனி வரலாற்று தரவுகள் எப்படி புதிய ஏற்பாட்டின் தரவுகளுடன் மோதுகிறது என்பதை காண்போம்.

வரலாற்று தரவுகளோடு மோதும் புதிய ஏற்பாட்டின் தரவுகள்:


நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே புதிய ஏற்பாட்டின் மாற்கு குறித்த குறிப்புக்கள் அரைகுறையாக, தெளிவற்றதாக இருப்பதை விளக்கியுள்ளோம். மேலே கொடுக்கப்பட்ட வரலாற்றுத்தரவுகள் மேலும் குளறுபடிகளை இங்கு அதிகப்படுத்துவதை கீழே காண்போம். 4ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள எந்த வரலாற்று தரவுகளும், எந்த இடத்திலும் மாற்கை பவுலுடன் இணைத்து கூறவில்லை. மாற்கை பேதுருவுடன் மட்டுமே இணைத்து கூறுகிறார்கள். 
Mark the disciple and interpreter of Peter wrote a short gospel at the request of the brethren at Rome embodying what he had heard Peter tell. When Peter had heard this, he approved it and published it to the churches to be read by his authority as Clemens in the sixth book of his Hypotyposes and Papias, bishop of Hierapolis, record. Peter also mentions this Mark in his first epistle, figuratively indicating Rome under the name of Babylon “She who is in Babylon elect together with you saluteth you and so doth Mark my son.” So, taking the gospel which he himself composed, he went to Egypt and first preaching Christ at Alexandria he formed a church so admirable in doctrine and continence of living that he constrained all followers of Christ to his example. Philo most learned of the Jews seeing the first church at Alexandria still Jewish in a degree, wrote a book on their manner of life as something creditable to his nation telling how, as Luke says, the believers had all things in common at Jerusalem, so he recorded that he saw was done at Alexandria, under the learned Mark. He died in the eighth year of Nero and was buried at Alexandria, Annianus succeeding him. ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மார்க், ரோமில் உள்ள சகோதரர்களின் வேண்டுகோளின் பேரில் பேதுரு சொன்னதைக் கேட்டு ஒரு சிறிய நற்செய்தியை எழுதினார். கிளெமென்ஸ் அவருடைய ஹைப்போடைபோஸ்ஸின் ஆறாவது புத்தகம் மற்றும் ஹைராபோலிஸின் பிஷப் பாபியஸ் பதிவின் படி, பேதுரு இதைக் கேட்டதும், அதை அங்கீகரித்து, படிக்கும்படி தேவாலயங்களுக்கு வெளியிட்டார், பேதுரு தனது முதல் நிருபத்தில், இந்த மாற்க்கை குறிப்பிடுகிறார். பாபிலோன் என்ற பெயரில் ரோமை அடையாளப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார் “உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” எனவே, அவரே இயற்றிய நற்செய்தியை எடுத்துக் கொண்டு, அவர் எகிப்துக்குச் சென்று, முதலில் அலெக்ஸாண்டிரியாவில் கிறிஸ்துவைப் பிரசங்கித்து, கோட்பாட்டிலும், வாழ்வாதாரத்திலும் போற்றத்தக்க ஒரு தேவாலயத்தை உருவாக்கினார், அவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும் தனது முன்மாதிரிக்குக் கட்டுப்படுத்தினார். அலெக்ஸாண்டிரியாவில் உள்ள முதல் தேவாலயம் இன்றும் ஓரளவு யூதமயமாக இருப்பதை பார்த்த யூதர்களில் மிகவும் கற்றறிந்த ஃபிலோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, அது எப்படி அவரது தேசத்திற்கு பெருமை சேர்க்கும்? என்று ஒரு புத்தகத்தை எழுதினார், லூக்கா சொல்வது போல, விசுவாசிகளுக்கு ஜெருசலேமில் எல்லா விஷயங்களும் பொதுவானவை, எனவே கற்றறிந்த மார்க்கின் கீழ் அலெக்ஸாண்டிரியாவிலும் இவ்வாறு நடந்ததைக் கண்டதாக அவர் பதிவு செய்தார். அவர் நீரோவின் எட்டாவது ஆண்டில் இறந்து, அலெக்ஸாண்ட்ரியாவில் அடக்கம் செய்யப்பட்டார், அவருக்குப் பிறகு அன்னியனஸ் பொறுப்பேற்றார். ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
When Nero was in the eighth year of his reign, Annianus succeeded Mark the evangelist in the administration of the parish of Alexandria. (The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
நீரோ தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் இருந்தபோது, அலெக்ஸாண்டிரியாவின் திருச்சபையின் நிர்வாகத்தில் சுவிசேஷகரான மாற்கு மறைந்த பிறகு பிறகு அன்னியனஸ் பதவியேற்றார்.(The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
        புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் பேதுருவுடன் கிபி 64ல் ரோமில் ஓர் இடத்திலும், துருக்கியில் திமோத்தியுடன் இருந்ததாக மற்றோர் இட்த்திலும் கூறுகிறது. கூறுகிறது. வரலாற்று தரவுகள் கிபி 62ல் மாற்க் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து விட்டதாக கூறுகிறது புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் கிபி 60ல் பவுலுடன் இருந்ததாக கூறுகிறது. கிபி 60ல் பவுலுடன் பயணப்பட்ட மாற்கு கிபி 62ல் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து, பிறகு மீண்டும் பேதுருவுடன் கி.பி.64ல் ரோமில் வலம் வந்தாரா என்ன. இந்த பகுதிகள் ஒவ்வொன்றையும் அந்த காலத்தில் கடக்கவே இந்த ஆண்டுகள் போதுமானதாய் இருக்காது. அப்படி இருக்கையில் இது தெளிவான முரணாக இருக்கிறது. மேலே நாம் குறிபிட்ட கருத்துக்களை உறுதி படுத்தும் வண்ணம் ஹிப்போபோலிடஸ் (மரணம் கி.பி. 236), தனது “On the Seventy Apostles” என்ற நூலில், நற்செய்தியாளர் மாற்கு(வ.எண்:14), பார்னபாவின் உறவினர் மாற்கு(வ.எண்:56) மற்றும் ஜான் மாற்கு வ.எண்:65) ஆகிய மூவரையும் தனித்தனியே பிரித்து காட்டுகிறார்.

    எனவே மேற்குறிபிட்ட வாதங்களின் அடிப்படையில் வரலாற்று தரவுகளும், புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முரண்பட்டு நிற்பதை காண முடிகிறது. கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும்படி குழப்பங்களற்ற ஆணித்தரமான ஆதாரங்கள் புதிய ஏற்பாட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.  எனவே மாற்கின் சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தை கொண்டு, யார் இந்த மாற்க் என்பதை உறுதி படுத்துவோம்.

மாற்கு சுவிஷேசத்தின் எழுத்தர் பேதுருவின் எழுத்தரும் அல்ல பவுலின் அடிமையும் அல்ல


    கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும் வகையில், புதிய ஏற்பாட்டின் எந்த இடத்திலும் “மாற்காகிய நான் பேதுருவிடம் கேட்டு இந்த சுவிஷேசத்தை எழுதினேன்” அல்லது மாற்கு பேதுருவிடம் கேட்டு சுவிஷேசம் எழுதினார் என்று இடம் பெறவில்லை. அதன் உள்ளடக்கத்தை சற்று ஆய்வு செய்தோம் என்றால் இந்த சுவிஷேசத்தை எழுதியவர் நிச்சயம் மேலே கூறப்பட்ட பேதுருவின் விரிவுரையாளரும் அல்ல, பவுலின் அடிமையான ஜான் மாற்கும் அல்ல என்பது விளங்கும்

பேதுரு குறித்த தகவல்களை அறியாத/மறைத்த மாற்கு சுவிஷேசம்❕


    மாற்கின் படியான சுவிஷேசத்தை ஆய்வு செய்தால் ஒரு விஷயம் தெளிவாக புலப்படும். அது, இயேசுவின் சீடரான பேதுருவிற்கு மட்டும் உரித்தான செய்திகள் மறைக்கப்பட்டிருப்பது அல்லது விடுபட்டிருப்பதாகும். உதாரணமாக பின்வரும் நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.
அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான். இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது.(மத்தேயூ 16:16-18)
    மேலே கூறப்படும் நிகழ்வில் இயேசுவை கிறிஸ்து என்று பேதுரு அறிக்கை இடுகிறார். அதற்கு பகரமாக இயேசு பேதுருவை ஆசீர்வதித்தும் உயர்த்தியும் பேசுவதை மத்தேயூவின் படியான சுவிஷேசத்தில் காணமுடிகிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் இதே செய்தியை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்று பார்ப்போம்.
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். (மாற்கு 8:29-30)
அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்.
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை என்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; (யோவான் 18:5-10)

    இயேசுவை கைது செய்யும் போது நிகழ்ந்ததை யோவான் சுவிஷேசம் பதிவு செய்துள்ளது. அது பேதுரு இயேசுவின் மீது கொண்டிருந்த பற்றை பட்டவர்த்தனமாக பதிவு செய்கிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் எப்படி இந்த நிகழ்வை பதிவு செய்கிறது என்பதை பார்ப்போம்

அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். (மாற்கு 14:46-50)

அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்:

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். (யோவான் 20: 3-7)

மாற்கு சுவிஷேசத்தில் மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறவில்லை. உண்மையில் மாற்கு சுவிஷேசத்தை எழுதியவர் பேதுருவின் சீடராக இருக்கும் பட்சத்தில் பேதுருக்கு மட்டுமே உரித்தான் தகவல்கள் ஏன் இல்லாமல் போனது. இந்த செய்தி விடுபடுதல் என்பது மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதியவர், நிச்சயம் பேதுருவின் விவரிப்பாளர் அல்ல என்பதை காட்டுகிறது.  

யூதம் அறியாத பவுலின் அடிமை  ஜான் மாற்கு எனும் யூதர்


    மாற்கு ஆகமத்தை இயற்றிவர் ஜான் மாற்கு யூதர் என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இந்த சுவிஷேசத்தில் இடம்பெறும் பல கருத்துகள் இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்கமாட்டார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது. உதாரணமாக பின்வரும வசனத்தை காண்போம்.   
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.(மாற்கு 7:10)
        ஆதாவது மோசே கூறியதாக ஒரு சட்டத்தை ஏசு பரிசேயருக்கு விளக்குவதாக மாற்கு குறிப்பிடுகிறார். இது ஏசுவின் வார்த்தையாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம் இது கர்த்தர் மக்களுக்கு வழங்கியதாக மோசே கூறியது. (எண்: 21:15) எந்த யூதரும் இதை மோசேயின் கருத்தாக தவறுதலாகவும் கூறமாட்டார். இதை பேதுருவோ, பவுலோ கூறியிருக்க மாட்டார்கள். இதை நிச்சயம் பேதுரு/பவுலின் சீடரான மாற்கு என்ற யூதர் பதிவு செய்திருக்க மாட்டார். இதன் காரணத்தினால்தான் மத்தேயுவில் இதே சம்பவம் சரிசெய்யப்பட்டு கையாளப்பட்டுள்ளதை காணமுடியும்.
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. (மத்தேயு: 15:4).
இது போல பழைய ஏற்பாடின் வசனங்கள் மாற்கால குளறுபடியுடனே கையாளப்பட்டுள்ளது. அடுத்ததாக
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். (மாற்கு 1:1-3)
அதாவது இரண்டாவது வசனம் தீர்க்கதரிசனத்தில் இருப்பதாக மாற்கு கூறுகிறார். அது யோவான் குறித்து பேசுவதாக கூறுகிறார் மாற்கு. ஆனால் மலாச்சியில் இடம்பெறும் வசனம் எதை கூறுகிறது என்பதை காண்போம்.
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா: 3:1-5).
        மேலே குறிப்பிடப்படும் வசனமானது அந்த நாள் எத்தகையது என்பதையும் கூறுகிறது. அதாவது ஏசு விண்ணேற்றம் அடையும் காலம் வரை யூதர்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்பதை நான் குறிப்பிட தேவையில்லை என்று எண்ணுகிறேன். இன்றும் முழு யூதர்களும் கிறித்தவதத்தை ஏற்று கொள்ளவில்லையே. மேலும் யூதா மற்றும் எருசலேமின் காணிக்கைகள் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு யூதர்கள் காணிக்கை செலுத்தும் எருசலேம் ஆலயம் கிபி 70ல் தீக்கிரையாக்கப்பட்டது. ஆக மாற்கு குறிப்பிடுவது போல இந்த பழைய ஏற்பாட்டின் வசனத்திற்கும் யோவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட மத்தேயு இந்த வசனத்தை தூக்கிவிட்டார் தனது ஆகமத்தில் (மத்தேயு 3:3). ஒன்று பேதுரு/ பவுல் ஆகிய இருவரும் தப்பும் தவறுமாக யூதரான மாற்கிற்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டும். அல்லது மாற்கு சுவிஷேசத்தை இயற்றிவர் நிச்சயம் பேதுரு/ பவுலிற்கு நேரடி தொடர்பில்லாத, யூதரல்லாதவராக இருக்கவேண்டும். எனவேதான் அமேரிக்காவின் விவிலிய அறிஞரான கிரைக் எவான்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
The difficulty is ascertaining the identity of Mark. Scholars debate whether he is John Mark of Jerusalem, associate of Paul (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11), and the one who may well be assumed by Papias as an associate of Peter (e.g. Hengel 45–53; Gundry 1026–45), or another person simply named Mark who was not native to Palestine. Many scholars have opted for the latter option due to the Gospel’s lack of understanding of Jewish laws (1:40–45; 2:23–28; 7:1–23), incorrect Palestinian geography (5:1–2, 12–13; 7:31), and concern for Gentiles (7:24–28:10) (e.g. Marcus, 1999: 17–21). (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மார்க்கின் அடையாளத்தைக் கண்டறிவதே சிரமம். அவர், பவுலின் கூட்டாளியான ஜெருசலேமின் ஜான் மாற்கா (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11) மேலும் அவரே பேதுருவின் கூட்டாளியாக பேப்பியஸால் அனுமானிக்கப்பட்டவராக இருக்கக்கூடும், (e.g. Hengel 45–53; Gundry 1026–45), அல்லது பாலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டிராத மாற்கு என்ற மற்றொரு நபரா என்று அறிஞர்கள் விவாதிக்கின்றனர். யூதச் சட்டங்களைப் பற்றிய நற்செய்தியின் புரிதல் இல்லாததாலும்,(மாற்கு 1:40–45; 2:23–28; 7:1–23) தவறான பாலஸ்தீன புவியியல் குறிப்புக்கள் (மாற்கு 5:1–2, 12–13; 7:31), மற்றும் புறஜாதிகள் மீதான அக்கறை(மாற்கு 7:24–28:10) ஆகிய காரணங்களினால்  பல அறிஞர்கள் பிந்தைய கருத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மாற்கு எழுதப்பட்ட காலம்:

    மாற்கு சுவிஷேசத்தின் வரலாற்று ஆதாரம் என்று கூறப்பட்டும், நம்பப்படும் கூற்றுகள் எதுவும் இன்றிருக்கும் மாற்கு சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தினை உறுதிபடுத்துவதாய் இல்லை. மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக பின்வரும் காலங்களை கிறித்தவ உலகம் கூறி வருகிறது.  அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.213 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம்.

c. 44 A.D. Belser
c. 48 A.D. Birks
c. 44-49 A.D. Allen
c. 55-57 A.D. Hitzig
c.  ̴55 A.D. Gloag
c. 63 A.D. Mill
c. 64-67 A.D. Bartlet, Schafer, Kuppers, Schanz, Zimmermann, Zahn, J.Weiss
c. 65-70 A.D. Abbott, Alford, W. Bruckner, Stanton, Swete, Salmond, Wendt, Weiss, Harnack Maclean, Barth, Peake, Hoffmann, Burkitt.
c. 70 A.D. Carpenter, Menzies, Feine, W. Haupt
c. 70-80 A.D.Volkmar , Renan, Beyschlag, Wright, Wernle, Bacon, Well- hausen, von Soden, Loisy, O.Schmiedel, Montefiore
c. 75-85 A.D. Goguel 
c. 80-90 A.D. Holsten, Hilgenfeld, Rovers , Bleek.
c. 100 A.D. Hoekstra
c. 100-110 A.D.
Kostlin 
c. 115-120 A.D. Keim 
c. 120 A.D. S. Davidson
c. 120-130 A.D. Usener
c. 130 A.D. Baur

        கிறித்தவ அறிஞர்களால் கிட்டதட்ட 90 ஆண்டு கால இடைவெளி மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்டதற்கான காலமாக அனுமானிக்கப்படுகிறது,. இது ஒவ்வொருவரும் அவர் அவர்களது அனுமானத்திற்கு ஒரு ஆதாரத்தை கொண்டிருப்பார்கள். இயற்றப்பட்ட வருடத்திலும் எந்த ஒரு உறுதியான நிலைபாடும் இல்லை. வரலாற்று ஆவணங்களின் பலவீனம்தான் இந்த நிலைக்கு காரணம் என்பது தெளிவாக விளங்குகிறது.

    எனவே யார் மாற்கு என்று சரியாக அறியப்படாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் தனக்குள்ளேயே முரண்படுகின்றது என்ற நிலையில், மாற்கு என்ற நபர் குறித்த புதிய ஏற்பாட்டின் தரவுகளும் அரைகுறையாகத்தான் இருக்கிறது என்ற நிலையில், புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று தரவுகளும் முரண்பட்டு நிற்கும் நிலையில், எப்போது எழுதப்பட்டது என்பதில் கூட கருத்து ஒற்றுமை இல்லாத நிலையில், வரலாறு கூறும் மாற்கால் நேரடியாக எழுதப்பட்ட ஒரு ஆவணம் , “மாற்கின் படியான சுவிஷேசம்” என்று யார் என்று அட்ரஸில்லாத நபரின் விவரிப்பாக தலைப்பை இன்று தாங்கி நிற்கும் நிலையில், “மாற்கின் படியான சுவிஷேசம் அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி மாற்கின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.

Saturday, July 6, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

    நற்செய்தி நூல்களின் எழுத்தாளர்கள் யார்? யாரின் வழியாக இவர்களது அறிவிப்பை பெற்றார்கள்? இவர்கள் யாரிடம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்? என்று, இந்த எழுத்தாளர்கள் விஷயத்தில் கிறித்தவ உலகின் நிலை குறித்தும், அந்த எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று ஆவணங்களும், புற ஆதாரங்களும், அதே நற்செய்தி நூல்களின் உள்ளடக்கமும் எவ்வாறு முரண்பட்டு அந்த புற ஆதாரங்களையே பதம் பார்க்கிறது என்பதையும் விரிவாக காணயிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். அந்த வரிசையில் முதலாவதாக வேதம் என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் மத்தேயூ சுவிஷேசத்தின் அவல நிலையை இங்கு தோழுரிக்கவுள்ளோம்.

     யார் இந்த மத்தேயூ???
    லேவியும் மத்தேயூவும் ஒன்றா?
        ✔அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி.150 – 215)
        ✔குழம்பிப்போன் ஓரிகன் (காலம் கி.பி.185 – 253)
            ☑மத்தேயூவும் லேவியும் ஒன்று என்று கூறும் ஓரிகன்
            ☑மத்தேயூ வேறு லேவி வேறு என்று கூறும் ஓரிகன்
        ✔பஸ்ராவின் பிஷப் சாலமோன் (காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு)
    மொழி குழப்பம்
    யாரும் கண்டிராத இன்றைய மத்தேயூ சுவிஷேசத்தின் எபிரேய வடிவம்
    ✅இயற்றப்பட்ட காலம்/ வரிசை: வரலாற்று ஆவணங்கள் கூறுவதும் உள்ளடக்கம் கூறுவதும்
    ✅அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தரால்/எழுத்தர்களால் எழுதப்பட்ட மத்தேயூவின் படியான சுவிஷேசம்    

மத்தேயூ சுவிஷேசம்:

நாம் முன்சென்ற தொடரில் கண்ட வரலாற்று ஆவணங்களின் படியும், தற்கால கிறித்தவ உலகின் நம்பிக்கையின் படியும் புதிய ஏற்பாட்டின் முதலாம் நூலின் ஆசிரியர் மத்தேயூ என்பவராகும். மத்தேயூ சுவிஷேசத்தின் எந்த இடத்திலும் இந்த கருத்து வெளிப்படையாக இடம் பெறவில்லை. இந்த “மத்தேயூ” என்று பிரபலமாக கருதப்படும் இந்த நூலாசிரியர் குறித்தும், அவர் இயற்றியதாக கூறப்படும் மத்தேயூவின் படியான சுவிஷேசத்தின் வரலாற்று ஆவணங்கள், மற்றும் அதன் முரண்கள், சிக்கல்கள் குறித்தும் இங்கு காண்போம். 

யார் இந்த மத்தேயூ???

    புதிய ஏற்பாட்டின் வரிசையில் முதலாவதாக இடம் பெறும் நூலை இயற்றியதாக கூறப்படும் மத்தேயூ, என்பவர் இயேசுவின் சீடராக, இயேசுவை கண்டவராக இருந்தார் என்பது கிறித்தவர்களின் கருத்து. இதற்கு ஆதாரமாக அவர்கள் பின்வரும் வசனங்களை முன்வைக்கின்றனர்.

மத்தேயூ:

    இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். (மத்தேயூ 9:9-10)

    அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. (மத்தேயூ 10:1-4)

மாற்கு :

    அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். (மாற்கு 2:13-15)

அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்து என்பவர்களே. (மாற்கு 3:14-19)

லூக்கா: 

    இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். (லூக்கா 5:27-29)

        பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. (லூக்கா 6:13-16)

லேவியும் மத்தேயூவும் ஒன்றா?

மத்தேயூ குறித்து புதிய ஏற்பாட்டில் போதிய தகவல்கள் இல்லாத காரணத்தினால், லேவியும் மத்தேயூவும் ஒன்றுதான் என்று பல காலமாக  திருச்சபை தந்தை முதல் இன்றிருக்கும் கிறித்தவ மிசனரிகள் வரை கதை அளந்து வருகின்றனர்.(1),(2),(3). லேவி என்பவர் மத்தேயூதான் என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் புதிய ஏற்பாட்டில் இல்லை. மத்தேயூவில் மட்டுமே ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் மத்தேயூ என்று அறியப்படுகிறார். மாற்கிலும் லூக்காவிலும் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் லேவி என்று அறியப்படுகிறார். மாற்கில் மேலும் ஒரு கூடுதல் தகவல் இடம் பெறுகிறது ஆதாவது ஆயத்துறையில் அமர்ந்திருந்தவர் "அல்பேயுவின் குமாரன் லேவி" என்ற தகவல் தான் அது. மத்தேயூதான் லேவி என்று வாதிக்க போதிய வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாதிருக்கும் நிலையில், யாக்கோபு தான் லேவி என்று வாதிக்க அதிக வாய்ப்பும் இருக்கிறது. ஏன்னென்றால் மாற்கு 3:14-19ல் குறிப்பிடும் போது யாக்கோபை அல்பேயுவின் குமாரன் என்று கூறுகிறார்.  

    மேலும் மாற்கும் லூக்காவும் பெயர் மாற்றத்தை அறியவில்லை என்று வாதிக்க இயலாது. ஓர் இடத்தில் மாற்கும் (மாற்கு 2:13-15)  லூக்காவும்(லூக்கா 5:27-29)  லேவி என்று அழைக்கின்றனர். மற்ற இடத்தில் மத்தேயூ என்று அழைக்கின்றனர். பேதுரு, சீமோன், யாக்கோப் யோவான் ஆகியோரின் பெயர் மாற்றத்தையும், புனை பெயர்களையும் குறிபிட்டு எழுதிய மாற்கும், லூக்காவும், லேவி என்ற பெயர் மத்தேயூ என்று மாற்றப்பட்டது என்பதை குறிப்பிடாததே லேவியும், மத்தேயூவும் வேறு வேறு நபர்கள் என்பதற்கு போதிய சான்று. நாம் மட்டும் இந்த கருத்தை முன்வைக்கவில்லை. கிறித்தவ வரலாற்றிலும், தற்காலம் வரையிலும் இந்த கருத்து முரணை காண முடிகிறது.  

அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி.150 – 215): 

    For all the saved have confessed with the confession made by the voice, and departed. of whom are Matthew, Philip, Thomas, Levi, and many others.

இரட்சிக்கப்பட்ட அனைவரும் குரல் கொடுத்த சாட்சியத்தை ஒப்புக்கொண்டு, புறப்பட்டு சென்றார்கள். அவர்களில் மத்தேயு, பிலிப், தாமஸ், லெவி மற்றும் பலர். (Stromata, Book IV, Chapter IX.—Christ’s Sayings Respecting Martyrdom)

    அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் மத்தேயூவையும், லேவியையும் தனித்தனியாக பிரித்து காட்டுகிறார்.

குழம்பிப்போன் ஓரிகன் (காலம் கி.பி.185 – 253):


மத்தேயூவும் லேவியும் ஒன்று என்று கூறும் ஓரிகன்:

    So, the Scripture says, "He went out and saw a tax collector named Levi." This man is Matthew the Evangelist. Mark and Luke conceal his name by using his earlier name: whereas Matthew makes his own name known when he says, "He saw Matthew the tax collector."He says this so that we might wonder at the skill of the God who healed him and might believe in [God] fully.( Homilies on Luke by Origen, I08. Luke 5.27)
      எனவே, "அவர் வெளியே சென்று லேவி என்ற வரி வசூலிப்பவரைக் கண்டார்" என்று வேதம் கூறுகிறது. இந்த மனிதர் மத்தேயு என்ற நற்செய்தியாளர் ஆவார். மாற்கும் லூக்காவும் அவருடைய முந்தைய பெயரைப் பயன்படுத்தி அவரது பெயரை மறைத்துக்கொள்கிறார்கள்: அதேசமயம் மத்தேயு தனது சொந்தப் பெயரைத் தெரியப்படுத்துகிறார், "அவர் வரி வசூலிப்பவரான மத்தேயுவைப் பார்த்தார்" என்று அவர் கூறுகிறார். "அவரைக் ஆற்றிய கடவுளின் திறமையைக் கண்டு நாம் ஆச்சரியப்படவும், கடவுளை முழுமையாக நம்பவும் அவர் இதைச் சொல்கிறார்.( Homilies on Luke by Origen, I08. Luke 5.27)

மத்தேயூ வேறு லேவி வேறு என்று கூறும் ஓரிகன்:

ὅτι δώδεκα ἀποστόλους ὁ Ἰησοῦς ἐπελέξατο, τελώνην μὲν τὸν Ματθαῖον, οὓς δ' εἶπε συγκεχυμένως ναύτας τάχα τὸν Ἰάκωβον καὶ τὸν Ἰωάννην φησίν, ἐπεὶ καταλιπόντες τὸ πλοῖον καὶ «τὸν πατέρα αὐτῶν Ζεβεδαῖον» ἠκολούθησαν τῷ Ἰησοῦ. Τὸν γὰρ Πέτρον καὶ τὸν ἀδελφὸν αὐτοῦ Ἀνδρέαν, ἀμφιβλήστρῳ χρωμένους διὰ τὰς ἀναγκαίας τροφάς, οὐκ ἐν ναύταις ἀλλ' ὡς ἀνέγραψεν ἡ γραφή, ἐν ἁλιεῦσιν ἀριθμητέον. Ἔστω δὲ καὶ ὁ Λευὴς τελώνης ἀκολουθήσας τῷ Ἰησοῦ• ἀλλ' οὔτι γε τοῦ ἀριθμοῦ τῶν ἀποστόλων αὐτοῦ ἦν εἰ μὴ κατά τινα τῶν ἀντιγράφων τοῦ κατὰ Μάρκον εὐαγγελίου. Τῶν δὲ λοιπῶν οὐ μεμαθήκαμεν τὰ ἔργα, ὅθεν πρὸ τῆς μαθητείας τοῦ Ἰησοῦ περιεποίουν ἑαυτοῖς τὰς τροφάς.

……….. that Jesus selected twelve apostles, and that of these Matthew alone was a publican; that when he calls them indiscriminately sailors, he probably means James and John, because they left their ship and their father Zebedee, and followed Jesus; for Peter and his brother Andrew, who employed a net to gain their necessary subsistence, must be classed not as sailors, but as the Scripture describes them, as fishermen. And Levi also, who was a follower of Jesus, may have been a publican; but he was not of the number of the apostles, except according to a statement in one of the copies of Mark's Gospel. (Origen, Against Celsus , Book 1, Chapter LXIII)

…….. இயேசு பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார், மேலும் இவர்களில் மத்தேயு மட்டும் ஆயக்காரராக இருந்தார்; அவர் அவர்களை வேறுபடுத்தாமல் மாலுமிகளே என்று அழைக்கும்போது, அவர் ஜேம்ஸ் மற்றும் யோவானை குறிப்பிடுவதாக இருக்கக்கூடும், ஏனென்றால் அவர்கள் தங்கள் கப்பலையும் தங்கள் தந்தை செபதேயுவையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்; ஏனெனில், பீட்டரும் அவருடைய சகோதரர் ஆண்ட்ரூவும், தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற வலையைப் பயன்படுத்தியவர்கள், வேதம் அவர்களை மாலுமிகள் என்று அல்ல, மாறாக மீனவர்கள் என்று விவரிக்கிறது. இயேசுவின் சீடராக இருந்த லேவியும் ஆயக்காரராக இருந்திருக்கலாம்; ஆனால் அவர் மாற்கு நற்செய்தியின் பிரதிகளில் ஒன்றில் கூறப்பட்டுள்ளதைத் தவிர, அப்போஸ்தலர்களின் எண்ணிக்கையில் இல்லை.(Origen, Against Celsus , Book 1, Chapter LXII)

    மாற்கின் பிரதிகள் ஒன்றில் லேவியும் சீடராக இடம் பெற்றிருந்தார் என்று ஓரிகன் கூறுவது, எழுத்துப்பிரதிகளிலேயே இடம் பெறும் அளவிற்கு இந்த முரண் பரவலாக இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

பஸ்ராவின் பிஷப் சாலமோன் (காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு):

    Matthew the Evangelist was from Nazareth, of the tribe of Issachar. He preached in Palestine, Tyre and Sidon, and went as far as Gabbulla. He died and was buried in Antioch, a city of Pisidia...........  Levi was slain by Charmus , while he was teaching in Paneas.

    நற்செய்தியாளர் மத்தேயு நாசரேத்தைச் சேர்ந்தவர், இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் பாலஸ்தீனம், டயர் மற்றும் சிடோன் ஆகிய இடங்களில் பிரசங்கித்தார், மேலும் கப்புல்லா வரை சென்றார். அவர், பிசிடியாவின் நகரமான அந்தியோக்கியாவில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.............லேவி பனியாஸில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, சார்மஸால் கொல்லப்பட்டார்.  (Kṯāḇā ḏ-debboriṯā by Solomon of Akhlat Translation : The book of bee by Sir Ernest Alfred Thompson Wallis Budge P.No.106- 112). 
    பஸ்ராவின் பிஷப் சாலமோனை பொறுத்தவரையில் மத்தேயூவும், லூக்காவும் வேறு வேறு. அவர்கள் இறந்த இடமும் வேறு. மத்தேயூ இறந்த இடம் குறித்தும் கிறித்தவ வரலாற்றில் குழப்பமே நிலவுகிறது என்பது கூடுதல் தகவல். 

    தற்கால கிறித்தவ இறையியலாளரான ரிச்சர்ட் பொக்காம் (Richard Bauckham)  தனது நூலில் இது குறித்து கூறுகையில் மத்தேயூவும் லேவியும் ஒன்றல்ல என்ற முடிவிற்கே வருகிறார். (Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, A Note on Matthew and Levi). மேற்குறிபிட்ட செய்திகள் நமக்கு ஒன்றை படம் பிடித்து காட்டுகிறது. அதாவது யார் மத்தேயூ என்பதில் கூட குழப்பம் நீடித்துள்ளது, நீடிக்கிறது என்பதை. கிறித்தவ மிசனரிகள் மத்தேயூதான் முதல் சுவிஷேசத்தை எழுதினார் என்பதற்கு ஆதாரம் அதனை ஆதிகால கிறித்தவ சபைகள் அனைத்தும் ஏற்றிருந்ததே ஆகும் என்று கூறி வருகின்றன. இப்படி பலராலும் பிரபலமாக அறியப்பட்ட ஒரு சுவிஷேசத்தின் ஆசிரியரின் வரலாற்றின் அவல நிலைதான் மேலே காட்டப்பட்டுள்ளது. உண்மையில் இதனை ஆதிகால அனைத்து சபைகளும் அறிந்திருக்கும் பட்சத்தில், மத்தேயூ குறித்த தகவல்கள் வரலாற்றில் குழப்பம் இன்றி பதிவு செய்யப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு நேர் முரணான நிலையை இங்கு காணமுடிகிறது. இது “மத்தேயூவின் படியான சுவிஷேசம்” என்ற தலைப்பே இடைக்கால இடைச்செருகல் என்பதை தெளிவாக காட்டுகிறது. 

    Thus this Evangelist has appropriated Mark’s story of the call of Levi, making it a story of Matthew’s call instead, but has not continued this appropriation by setting the following story in Matthew’s house. He has appropriated for Matthew only as much as Mark’s story of Levi as he needed. If this explanation of the name Matthew in Matt 9:9 is correct, it has one significant implication: that the author of Matthew’s Gospel intended to associate the Gospel with the apostle Matthew but was not himself the apostle Matthew. Matthew himself could have described his own call without having to take over the way Mark described Levi’s call.

    இவ்வாறு, இந்த சுவிசேஷகர், லெவியின் அழைப்பைப் பற்றிய மார்க்கின் கதையை பொருத்தியுள்ளார், அதற்கு பதிலாக அதை மத்தேயுவின் அழைப்பின் கதையாக மாற்றியுள்ளார், ஆனால் அதன் பின்வரும் மத்தேயுவின் வீட்டில் இடம் பெறும் கதையில் இந்த பொருத்தலை  தொடரவில்லை. மத்தேயுவுக்குத் தேவையான அளவு மட்டுமே மார்க்கின் லெவியின் கதையை  பொருத்தியுள்ளார். மத்தேயு 9:9 இல் உள்ள மத்தேயு என்ற பெயரின் இந்த விளக்கம் சரியானது என்றால், அது ஒரு குறிப்பிடத்தக்க உட்கருத்தை கொண்டுள்ளது: மத்தேயுவின் நற்செய்தியின் ஆசிரியர், அப்போஸ்தலன் மத்தேயுவுடன் சுவிசேஷத்தை இணைக்க விரும்பியுள்ளார், ஆனால் அவர் அப்போஸ்தலன் மத்தேயு அல்ல. லெவியின் அழைப்பை மார்க் விவரித்த விதத்தை எடுத்துக் கொள்ளாமல் மத்தேயூ தனது சொந்த அழைப்பை விவரித்திருக்கலாம்.((Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, A Note on Matthew and Levi). 

    அதாவது சுவிஷேசத்தை எழுதியது அப்போஸ்தலன் மத்தேயூ அல்ல. மத்தேயூ விவரித்ததை, யார் என்று அறியப்படாத அந்த எழுத்தாளர் மாற்கின் சரக்கில் இடைசெருகல் செய்திருக்கிறார் என்று கூறுகிறார். லேவி-மத்தேயூ இருவேறாக இருந்தால் அதுவே மத்தேயூ சுவிஷேசம் அப்போஸ்தலன் மத்தேயூவினால் எழுதப்படவில்லை என்பதற்கு போதிய சான்று என்பது அவரது வாதத்தின் சாரம். மேலும் பாப்பியஸிற்கு முற்பட்ட எந்த சர்ச் பிதாவும் மத்தேயூ என்ற பெயரிடப்பட்ட சுவிஷேசம் இருப்பதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

மொழி குழப்பம்:


        மத்தேயூவின் படியான சுவிஷேசத்தை பொறுத்த வரையில் கூறப்படும் வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும், மத்தேயூவின் மூல மொழி எபிரேயம் என்று வாதிக்கின்றன. நாம் சென்ற தொடரில், இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் மூல மொழி எபிரேயம் அல்ல, மாறாக அது இயற்றப்பட்டத்தே கிரேக்கத்தில் தான் என்பதற்கு கிறித்தவ உலகம் முன்வைக்கும் ஆதாரங்கள் சிலவற்றை முன்வைத்திருந்தோம். “இம்மானுவேல்”, “ஏலி! ஏலி! லாமா சபக்தானி”, போன்ற  சொற்கள் அனைத்தும் எபிரேய சொற்கள்,  ஆனால் அவற்றை எல்லாம் மொழியாக்கம் செய்துள்ளனர். மத்தேயூவின் படியான சுவிஷேசம் உண்மையில் எபிரேயம் பேசும் மக்களுக்காக எழுதப்பட்டிருந்தால் அவற்றை மொழியாக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசம் கிரேக்கம் பேசும் மக்களுக்காக கிரேக்கத்தில் எழுதப்பட்டது. 

    இதனை உறுதி படுத்தும் விதமாக ஜெரோமும் “மத்தேயூவின் படியான சுவிஷேசம் யாரோ அட்ரஸ் இல்லாதவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது” என்று கூறுகிறார். இதனை உறுதி படுத்தும் விதமாக “மத்தேயு எபிரேய மொழியில் [கர்த்தரின்] அற்புதங்களை ஒன்றாக தொகுத்தார், மேலும் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்தவரை அவற்றை விளக்கினர்.” என்று பாப்பியஸும் கூறுவதாக யூஸிபியஸும் உறுதிபடுத்துகிறார். எனவே மத்தேயூவின் சுவிஷேசத்தை மொழிப்பெயர்த்தவர் யார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது மத்தேயூவின் படியான சுவிஷேசம் என்று தலைப்பிட்டு அதனை எழுதியவர் யார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யாரும் கண்டிராத இன்றைய மத்தேயூ சுவிஷேசத்தின் எபிரேய வடிவம் 


மேலும் இன்றைய மத்தேயூ சுவிஷேசத்தின் எபிரேய வடிவத்தை யாரும் வரலாற்றில் கண்டதாக ஆதாரங்கள் இல்லை. நாம் முன்சென்ற  கட்டுரையில் ஜெரோம் எபிரேய மத்தேயூவின் சுவிஷேத்தை கண்டதாக கூறியுள்ளார் என்பதை குறிப்பிட்டிருந்தோம். அது குறித்த சிறு தெளிவை இங்கு முன்வைக்கிறோம் ஜெரோம் கண்டதாக கூறும் நசரேயர்களின் மத்தேயூ சுவிஷேசத்திற்கும், இன்றிருக்கும் மத்தேயூவின் சுவிஷேசத்திற்கும் கொள்கை முரண்களே உண்டு.  அதுபோல பல வசனங்களும் வேறுபட்டு உள்ளன. உதாரணமாக 

இன்றிருக்கும் மத்தேயூவின் படியான சுவிஷேசம்
  அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.( மத்தேயூ 18:21-22)

எபிரேய மத்தேயூவின்  சுவிஷேசம்            அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் "தீர்க்கதரிசிகளில் கூட, அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகும், பாவத்தின் வார்த்தை காணப்பட்டது." என்று உனக்குச் சொல்லுகிறேன் (எம்.எஸ்.எஸ் 566, 899)

    மேற்குறிபிட்ட ஜெரோமின் கூற்றை பின்வரும் வரலாற்று செய்தி தெளிவுபடுத்துவதாய் உள்ளது. அதாவது ஸலாமிஸின் எபிஃபேனியஸ் ஜெரோமின் சமகாலத்தவர் ஆவார் (கி.பி. 320 – 403). இவர் ஜெரோம் கண்டதாக கூறும் எபிரேய மத்தேயூ குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
13,1 But I shall resume the thread of my argument against Ebion— because of the Gospel according to Matthew the course of the discussion obliged me to insert the whole of the knowledge which I had gained. (2) Now in what they call a Gospel according to Matthew, though it is not the entire Gospel but is corrupt and mutilated—and they call this thing “Hebrew”!—( Epiphanius, Panarion, 30, 13, 1-2)

13,1 ஆனால் எபியோனுக்கு எதிரான எனது வாதத்தின் இழையை மீண்டும் தொடர்கிறேன் - மத்தேயுவின் படியான நற்செய்தியின் காரணமாக, விவாதத்தின் போக்கில் நான் பெற்ற அறிவை முழுவதுமாக நுழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (2) இப்போது அவர்கள் மத்தேயுவின்படி ஒரு சுவிசேஷம் என்று அழைக்கிறார்கள், அது முழு நற்செய்தியாக இல்லாவிட்டாலும், அது சிதைந்ததாகவும், சிதைக்கப்பட்டதாகவும் இருக்கிறது - மேலும் அவர்கள் இதை "ஹீப்ரு" என்று அழைக்கிறார்கள்! ”!( Epiphanius, Panarion, 30, 13, 1-2)
    இப்படி மாறுபட்ட, சிதைக்கப்பட்ட எபிரேய மத்தேயூவை பார்த்துதான் ஜெரோம் உண்மை எபிரேய மத்தேயூவை கண்டதாக கதை விடுகிறார். மேலும் ஜெரோமே பல இடங்களில் அதில் இருந்த, தற்போதைய மத்தேயூவில் இருந்து மாறுபட்டு இருக்கும் வசனங்களை தனது ஆக்கங்களில் கூறியும் இருக்கிறார். எனவே யாரும் மூல மத்தேயூ சுவிஷேசத்தை கண்டதில்லை. கண்டதாக கூறிய ஜெரோமும் மாறுபட்ட எபிரேய மத்தேயூவைதான் கண்டிருக்கிறார். இன்றிருக்கும் கிரேக்க மத்தேயூவின் எபிரேய வடிவத்தை அல்ல.

    இப்படி மூல ஆவணத்தை மேலே குறிபிட்டுள்ள யாரும் கண்டதாகவும் எந்த தகவலும் இல்லை. பாப்பியஸ் முதற்கொண்டு மத்தேயூவின் படியான சுவிஷேசத்திற்கு யாரும் நேரடி சாட்சிகள் அல்ல. அப்போஸ்தலிக்க பிதாக்களில் இறுதி கால பகுதியான கி.பி. 2ம் நூற்றாண்டை சார்ந்த பாப்பியஸ்தான் மத்தேயூ சுவிஷேசம் இருந்ததற்கான முதல் சாட்சி. அவரும் நேரடியாக இயேசுவின் சீடர்கள் யாரையும் சந்தித்திருக்கவில்லை. மேலும் இன்றுவரை இந்த வரலாற்று குறிப்புக்களை உறுதி செய்யும் படியாக கிரேக்க மத்தேயூ எழுத்துப்பிரதிக்கு முற்பட்ட எபிரேய மத்தேயூ எழுத்துப்பிரதிகள் எதுவும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்றப்பட்ட காலம்/ வரிசை: வரலாற்று ஆவணங்கள் கூறுவதும் உள்ளடக்கம் கூறுவதும்


மத்தேயூ சுவிஷேசத்தின் வரலாற்று ஆதாரம் என்று கூறப்பட்டும், நம்பப்படும் கூற்றுகள் எதுவும் இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தினை உறுதிபடுத்துவதாய் இல்லை. மத்தேயூ சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக பின்வரும் காலங்களை கிறித்தவ உலகம் கூறி வருகிறது. A Critical and Exegetical Commentary on the Gospel according to Saint Matthew. Written by W.D. Davies and Dale C. Allison (P.No.127-128) என்ற மத்தேயூ சுவிஷேசத்தின் விளக்கவுரையில் இருந்து அது இயற்றப்பட்ட காலம் குறித்து எத்துனை கருத்து நிலவுகிறது என்பதை காணத்தருகிறோம்.

(1) Scholarly opinion:  The spectrum of opinion concerning the dating of Matthew's gospel may be illustrated as follows:


A.D. 40-50 H. Grotius
A.D. 50-60 M. Meinertz, J. A. T. Robinson
A.D. 50-64 B. Reicke
ca. A.D. 60 G. Maier
before A.D. 63 R. H. Gundry
A.D. 60-70 F. Godet, W. Michaelis
A.D. 65-75 W. C. Allen
before A.D. 70 C.F.D. Moule (tentatively), E. E. Ellis
A.D. 70-110 K. Stendahl, A. Wikenhauser, P. S. Minear
A.D. 70-75  A. von Harnack
A.D. 70-80 J. Weiss, W. Sanday, W. R. Farmer
before A.D. 75 A. Plummer
ca. A.D. 80 D. Hare
A.D. 80-100
E. Renan, T. Zahn (in Greek), F. C. Burkitt, B. W. Bacon, A. H. McNeile, C. G. Montefiore, F. V. Filson, G. Bornkamm, R. Walker, D. Hill, R. H. Fuller, W. Marxsen, W. G. Kümmel, E. Schweizer, J. D. Kingsbury, R. E. Brown
A.D. 80-90 P. Bonnard, W. Grundmann, J. P. Meier, U. Luz
ca. A.D. 85 B. H. Streeter
A.D. 85-105 J. C. Fenton
ca. A.D. 90  E. Lohse
A.D. 90-100  E. von Dobschütz, C. D. Kilpatrick
A.D. 90-5 G. Strecker
ca. A.D. 100  M. S. Enslin, F. W. Beare
after A.D. 100  F. C. Baur, O. Pfleiderer, H. J. Holtzmann, A. Loisy, H. von Sode

    மேற்குறிபிட்ட கிபி 40 முதல் கி.பி 110 வரை சுழலும் அட்டவணையை காணும்யாரும் சொல்வார்கள், "22 கருத்துக்களில், பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்கள் கி.பி.70 க்கு பிறகுதான் மத்தேயூவின் படியான சுவிஷேசம் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர்" என்று. இந்த கருத்தை மேலும் உறுதிபடுத்தும் விதமாக அதன் உள்ளடக்கம் அமைந்துள்ளது. மேலும் மாற்கு சுவிஷேசம் தான் முதலில் எழுதப்பட்டது என்பது இன்றைய கிறித்தவ அறிஞர்களில் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
    The theory of Markan priority, although not uncontested, continues to be held by a majority of scholars today, the present author included.
    மாற்கு முதன்மை கோட்பாடு, போட்டியற்றதாக இல்லாவிட்டாலும், தற்போதைய ஆசிரியர் உட்பட இன்று பெரும்பான்மையான அறிஞர்களால் தொடர்ந்து முன்னிறுத்தப்படுவதாகும்,. (The Gospel According To Mark , By James R. Edwards, Introduction, History Of The Interpretation Of Mark )
    மேற்குறிபிட்டதற்கு முரணாக மத்தேயூ சுவிஷேசம் தான் ஏனைய சுவிஷேத்தை விட முதலில் இயற்றப்பட்டதாக வரலாற்று கூற்றுக்கள் அனைத்தும் கூறுகின்றன. ஆனால் அதன் உள்ளடக்கம் பெரும்பாலான தற்கால கிறித்தவ அறிஞர்களின் கூற்றையே உறுதிபடுத்துகிறது. அதாவது மத்தேயூ, மாற்கு சுவிஷேசத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதை உறுதி படுத்துகிறது. இதனை சென்ற தொடரில் கண்டோம். அந்த ஆய்வின் முடிவினை முன்னிறுத்தி மேற்கூறிய வரலாற்று கூற்றுக்களை சற்று ஆய்வு செய்வோம்.
✅மாற்கின் 661 வசனங்களில் 641 வசனங்களை மத்தேயூ கொண்டிருக்கிறது. மாற்கின் 14:36 அப்பா என்ற அரமேய சொல் Αββα என்று கிரேக்கத்தில் ஒலிபெயர்ப்பு(Transliterate) செய்யப்பட்டு பிறகு அது கிரேக்கத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டோம். மத்தேயூ மாற்கில் இருந்து எழுதப்பட்டதால்தான், மத்தேயூ 26:39ல் நேரடியாக கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மத்தேயூவில் இருந்து மாற்கு காப்பியடிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. அல்லது மத்தேயூ மாற்கிற்கு முன்பாக எழுதப்படவில்லை என்பதை உறுதி படுத்துகிறது. 
✅மத்தேயூவும், லூக்காவும், ஒரு சேர மாற்கின் நிகழ்ச்சி நிரலை அப்படியே பின்பற்றியுள்ளமை. மத்தேயூவும், லூக்காவும், முரண்படும் தருணங்களிலும் கூட இரண்டில் ஒன்று மாற்கின் நிரலையே பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
✅மேற்குறிபிட்டது போல இன்னும் பல காரணங்கள், மத்தேயூவின் உள்ளடக்கம் அது மாற்கில் இருந்துதான் எழுதப்பட்டது என்பதை உறுதிபடுத்தும் நிலையில், மாற்கில் இருந்து மத்தேயூ எழுதப்பட்டிருந்தால் இன்னொரு சிக்கல் இங்கு உருவாகிறது. அதாவது மத்தேயூ உண்மையில் ஏசுவின் சீடர் என்றால், ஏன் ஏசுவின் சீடாரான பீட்டரின் கூற்றுக்களை தாங்கி நிற்ப்பதாக கூறப்படும் பீட்டரின் சீடரான மாற்கின் நூலை காப்பியடிக்க வேண்டும். 
✅மேலும் பேதுரு, மத்தேயூ ஆகியோரது மரணத்திற்கு பிறகே மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்டதாக ஐரினியஸ் கூறுகிறார். நிலை இப்படி இருக்கையில் மத்தேயூவின் சுவிஷேசம் மாற்கில் இருந்து எழுதப்பட்டிருந்தால், நிச்சயம் இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசம் ஏசுவின் சீடர் மத்தேயூவினால் எழுதப்பட்டது அல்ல. 
✅இதை எல்லாம் விட முத்தாய்ப்பாக அனைத்து வரலாற்று ஆவணங்களும் மத்தேயூ நேரடியாக எழுதியதாக கூறும் போது தற்போதைய நூல் மத்தேயூவின் கூற்றின் படியான நூல் என்ற தலைப்பை கொண்டிருப்பது, யாரோ அடரஸில்லாத ஒருவர், மத்தேயுவின் பெயரை பயன்படுத்தி, முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி எழுதிய நூலாகத்தான் இன்றைய மத்தேயூவின் படியான நற்செய்தி நூல் உள்ளது என்பது உறுதியாகிறது. யார் அந்த அட்ரஸில்லாத எழுத்தர் என்பதற்கு எந்த வரலாற்று தரவுகளும் இல்லை.  
    எனவே யார் மத்தேயூ என்று சரியாக அறியப்படாத நிலையில், எபிரேய மூல மத்தேயூவை யாரும் கண்டிராத நிலையில், மொழியியல் ரீதியாக இன்றைய மத்தேயூ வரலாற்று ஆவணத்திற்கு முரணாக கிரேக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது என்ற நிலையில், மத்தேயூ சுவிஷேம் எழுதப்பட்ட காலம் எது என உறுதியாக அறியப்படாத நிலையில், மத்தேயூ சுவிஷேசம், மத்தேயூ உள்ளிட்ட சீடர்கள் இறந்த பிறகு எழுதப்பட்ட மாற்கு சுவிஷேசத்தில் இருந்துதான் காப்பி அடிக்கப்பட்டது என்ற நிலையில், “மத்தேயூ சுவிஷேசம் அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தரால்/எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி மத்தேயூவின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.