பக்கங்கள் செல்ல

Thursday, October 29, 2020

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ       நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு குர்ஆனை தொகுக்கும் குழுக்கள் இரண்டு முறை இஸ்லாமிய கலிஃபாக்களால் நியமிக்கப்பட்டுள்ளது. முதல் முறை அபூபக்ர்(ரலி) அவர்களால், இரண்டாவது முறை உஸ்மான்(ரலி) அவர்களால். இரண்டிலுமே ஸைத் பின் ஸாபித்(ரலி) பங்குபெற்றுள்ளார்கள். குர் ஆன் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களிற்கான விளக்கங்களை புரிந்து கொள்ள முதலில் மேற்குறிப்பிட்ட ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்களின் நியமனத்தின் நியாயங்கள அறிந்து கொள்வது அவசியமாகும். அது குறித்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.
அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில்

          ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.

         யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். 

அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:
          உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.
        (பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.

       அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
         (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129)
             (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.(புகாரி 4679).

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

        ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
        எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் (வட்டார) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (புஹாரி 4987.)

     மேற்குறிபிட்ட செய்தியில் முதல் செய்தியை ஆய்வு செய்யும் போது அபூபக்ர்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் குறித்து பின்வரும் முக்கியத்துவங்களை முன்வைத்து அவரது நியமனத்தின் காரணத்தை விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்:

1. புத்திசாலியான இளைஞர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் புத்தி கூர்மை உடையவராகவும், இளைய வயதுடையவராகவும் இருந்தார்கள்.

2. நபி(சல்) அவர்களின் எழுத்தர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களின் எழுத்தராகவும் குறிப்பாக வஹி செய்திகளை எழுதுபவராக இருந்தார்கள்.

3. மிகுந்த நம்பத்தகுந்தவர்.
      மேற்குறிபிட்ட சிறப்புகள் அல்லாமல், இந்த குர்ஆனை தொகுப்பதற்கு ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நியமிக்கப்பட மேலும் சில சிறப்பு காரணங்களும் உண்டு.  அவற்றையும் நாம் காண்போம்.

கதாதா(ரஹ்) அறிவித்தார்.

       இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ 
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: 
     நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸ்கரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது.                        ( மஜ்ம உல் கபீர் 2092)
         மேற்குறிபிட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே குர்ஆனை முழுமையாக மனனமிட்டவர்களில் ஒருவர் என்பது நிரூபனமாகிறது.


قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ: قَرَأَ زَيْدُ بْنُ ثَابِتٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي تَوَفَّاهُ اللَّهُ فِيهِ مَرَّتَيْنِ، وَإِنَّمَا سُمِّيَتْ هَذِ الْقِهِرَاءَةُ قِرَاءَةَ زَيْدِ بْنِ ثَابِتٍ، لأَنَّهُ كَتَبَهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَرَأَهَا عَلَيْهِ، وَشَهِدَ الْعَرْضَةَ الأَخِيرَةَ، وَكَانَ يُقْرِئُ النَّاسَ بِهَا حَتَّى مَاتَ، وَلِذَلِكَ اعْتَمَدَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ فِي جَمْعِهِ، وَوَلاهُ عُثْمَانُ كِتْبَةَ الْمَصَاحِفِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ
அபூ அப்துர் ரஹ்மான் அல ஸலாமி கூறியதாவது:

     ஸைத்(ரலி), நபி(சல்) அவர்களிடம், நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை ஓதிக்காட்டினார்கள். அந்த ஓதல்தான் ஸைத்தின் ஓதல் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் நபி(சல்) அவர்களுக்காக அதை எழுதினார்கள், அவர்களிடம் ஓதியும் காட்டினார்கள். நபி(சல்) அவர்களின் இறுதி ஓதலான அர்தத் அல் ஆகிராவின் சாட்சியுமாக இருந்தார்கள். அதையே அவர்கள் இறக்கும் வரையில் மக்களுக்கு கற்றும் கொடுத்தார்கள். அதனால்தான் அபுபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் இருவரும் அவரை தொகுக்க நியமித்தார்கள். மேலும் உஸ்மான்(ரலி) அவர்களும் அவரை தொகுக்க நியமித்தார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. (அல் பாகவியின் ஸ்ரஹ் அஸ் ஸுன்னாஹ் 4/526) 
    மேலும் இதை அறிவிக்கும் அபூ அப்துர் ரஹ்மான் அல் ஸலாமிதான் குர்ஆனை கற்று கொடுக்க உஸ்மான்(ரலி) அவர்களால் கூஃபாவிற்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது மாணவரும் கூட ( சியார் அல் நுஃபுலா இமாம் தஹபி 4/268).

        இப்படி ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது இறுதி ஓதலை மனமிட்டிருந்ததால்தான் அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட குர்ஆன் ஓதலை நபிதோழர்களும், தாபியீன்களும் அர்தா அல் ஆகீரா என்று குறிப்பிடுகின்றனர். இது குறித்து சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.

أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، بِمَكَّةَ، ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَاتٍ فَيَقُولُونَ: إِنَّ قِرَاءَتِنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ
       சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது ; நபி(சல்) அவர்களுக்கு பல முறை குர்ஆன் ஓதிகாண்பிக்கப்பட்டது. இன்று நமது ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா (இறுதி ஓதல்) என்று கூறப்படுகிறது.( முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2904) 
      அல்ஹசன் அல் பஸரி கிபி 642ல் பிறந்தவர் ஆவார். உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் கிபி 644- 656 வரையிலானது கிபி 650ல் தான் குர்ஆனை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹசன் அல் பஸரி அவர்களிடம் சமூரா(ரலி) (மரணம் கிபி 680) குறிப்பிட்டு கூறுவதாக மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறுகிறது. ஆக மேற்குறிபிட்ட செய்தியானது உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பு குறித்துதான் பேசுகிறது என்பது நமக்கு தெளிவாக நிருபனமாகிறது. 
    மேலும் உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தை சேர்ந்தவரும், இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களில் மாணவர்களில் ஒருவரான உபைதா(ரஹ்) அவர்கள் இப்னு ஸீரின் வழியாக பின்வரும் செய்தியை குறிப்பிடுகிறார்கள்: 

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: الْقِرَاءَةُ الَّتِي عُرِضَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ هِيَ الْقِرَاءَةُ الَّتِي يَقْرَؤُهَا النَّاسُ الْيَوْمَ فِيهِ
    உபைதா அவர்கள் கூறியதாவது: நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் ஓதப்பட்டதுதான் நபி(சல்) அவர்களது ஓதல் ஆகும். அதைதான் இன்று மக்கள் ஓதி கொண்டிருக்கிறார்கள் (முஸன்னஃப் இப்னு அபிஷைபா 30291) 
   உபைதா அவர்கள் அபூபகர்(ரலி) அவர்களது காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர், உஸ்மான்(ரலி) காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர் ஆவார். 

    மேற்குறிபிட்ட செய்திகள் ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் குர்ஆனை தொகுக்கும் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான தெளிவான காரணங்களை விளக்க போதுமானது. மேலும் மேற்குறிபிட்ட செய்திகளில் இடம் பெறும் அபூ அப்திர் ரஹ்மான் ஸ்லாமி, உபைதா, இப்னு சீரின் என்று அனைவரும் இப்னு மஸ்ஊத்(ரலி) உள்ளிட்ட பல நபிதோழர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆனிற்கு கலிஃபாக்களான அபூபக்ர்(ரலி), உஸ்மான்(ரலி) அவர்கள் வழங்கிய அங்கீகாரம், குர்ஆன் தொகுப்பினை கண்ட முதல் இரு தலைமுறையான சஹாபாக்கள் மற்றும் தாபீயீன்களின் சாட்சியங்கள் ஆகியவையே, ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு நபி(சல்) அவர்களது இறுதி ஓதல்தான் என்பதை நிறுவ போதுமானது.. மேற்குறிபிட்ட ஆதாரங்களை மறுக்கும் வண்ணம் நேரடியான எதிர் சாட்சியங்கள் எதையும் கொண்டு வரமுடியாத மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு குறித்த சில செய்திகளை தூக்கித்திரிகின்றன. அது குறித்து அடுத்த தொடரில் இன் ஷா அல்லாஹ் காண்போம்.

No comments:

Post a Comment