பக்கங்கள் செல்ல

Sunday, July 21, 2019

எறும்புகள் - திருக்குர்ஆன் சொல்வது அறிவியலா அல்லது அபத்தமா?

ஏக இறைவனின் திருப்பெயரால்

                இவ்வுலகில் எத்தனையோ சித்தாந்தங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் பல கடல் போல் பெருகி சிறிய குட்டையாக மாறி வழக்கொழிந்து சுவடுகளே இல்லாமல் காணமல் போனவையும் உண்டு. இப்படி தோன்றி மறையும் சித்தாங்கள் மத்தியில் வெறும் 14 நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 200 கோடி மக்களை வென்றெடுத்த, உலக மக்கள் தொகையில் 3ல் 1 வரை வென்றெடுத்த, அந்த மக்களின் வாழ்க்கையில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் நிர்ணயம் செய்த, செய்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் மார்க்கமான இஸ்லாம், இன்றும் அதன் எதிரிகளால் சித்தாந்த ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. எதிர்ப்பால் வளர்ந்த இஸ்லாம், இன்றும் மக்களை வென்றெடுத்த வண்ணமே உள்ளது. இப்படி கடும் எதிர்ப்புகளின் மத்தியிலும் மனிதனை தன் பால் ஈர்க்கும், அந்த மகத்தான மார்க்கமான இஸ்லாமில் என்னதான் உள்ளது என்பதையும் அதன் மீது வைக்கப்படும் சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் பதிலளிப்பதே இந்த தொடரின் நோக்கமாகும்.

குர்ஆன் கூறும் எறும்புகள் உலகம்:

     குர்ஆன் தன்னகத்தே அது இறைவேதம் என்பதை மெய்ப்பிக்கும் பல சான்றுகளை கொண்டாதாக விளங்குகிறது, அதன் வரிசையில் எறும்புகள் பற்றி குர்ஆன் கூறும் வசனமும் ஒன்று. அது என்னவென்றால் எறும்புகள் பேசியது என்பதும், அவைகள் வசிக்கும் இடமும் மேலும் பேசிய எறும்பின் பாலினம் பற்றிய தகவல்தான் அது.  இந்த தகவல் கட்டுக்கதை என்றும் அறிவியல் உண்மைக்கு புறம்பானது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே எறும்புகள் பற்றி திருக்குர்ஆன் சொல்வது அறிவியலா அல்லது அபத்தமா? என்பதை அறிவியல் துணையோடு அலசி ஆராய்வது இங்கே அவசியமாகிறது.

       பொதுவாக கூறுவது என்றால் குர்ஆனுக்கென்றே ஒர் தனித்துவம் உள்ளது. அதாவது சில வார்த்தைகளில் பரந்த பொருளை விவரிக்குமாறுதான் குர்ஆனின் வசனங்கள் அமைந்திருக்கும். எனவேதான்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

                      "நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப் பெற்று அனுப்பப்பட்டுள்ளேன். ......(புகாரி 7273) 


          அதற்கு ஏற்ப குர்ஆன் வசனமான் 27:18 வசனம் எறும்புகள் பற்றி குறிப்பிடுகிறது என்று கூறுவதை விட எறும்புகளின் உலகத்தை பற்றி விவரிக்கிறது என்றுதான கூறவேண்டும்

அல் குர்ஆன் அந்-நம்ல்:18

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لا يَشْعُرُونَ (١٨) 
فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ (١٩)

                    அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!'' என்றார். [27:18-19]

மேற்குறிபிட்ட வசனம் எறும்புகளின் உலகம் குறித்த சில அறிவியல் உண்மைகளை உணர்த்துகிறது
1.எறும்புகளின் பள்ளத்தாக்கு



              மேற்குறிபிடப்பட்ட வசனத்தில் அல்லாஹ் எறும்புகளின் இருப்பிடத்தை குறிக்க وَادِ النَّمْلِ (வாதில் நம்ல்) - எறும்புகளின் பள்ளத்தாக்கு என்ற சொல்லை பயன்படுத்துகிறான். எறும்புகள் குறித்து இந்நூற்றாண்டில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் எறும்புகளின் புற்றுகளின் அடியில் ஒரு நகரமே அமைந்திருப்பதாக கூறுகிறது. மேலும் அந்த நகரத்தில் தோட்டங்கள், சாலைகள், உணவு கிடங்குகள் என்று பல பகுதியாக பிரிக்கப்பட்டு திறம்பட பயன்டுத்துவதற்கு எதுவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெளிவான வீடியோ ஆவணப்படம் பெர்ட்ஹாஹால்டாப்லர் (Prof. Bert Holldobler) என்ற அறிவியலாளர் வழங்கினார். அதன் சிறு பகுதி இதோ (6)
லூயிஸ் ஃபோர்ஜ் என்பவரின் தலைமையில் எறும்பின் இருப்பிடம் குறித்த அகழ்வாராய்ச்சி குறித்த அவணப்படத்தின் பகுதிதான் அது. தரையின் அடியில் உள்ள இருப்பிடத்தின் வார்ப்பை பாதுகாக்க கிட்டத்தட்ட 10டண் சிமெண்ட் எறும்பின் புற்றினில் ஊற்றப்பட்டது. ஒருமாதத்திற்கு பிறகு அந்த பகுதி அகழப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் எறும்பின் பள்ளத்தாக்கு வெளிப்பட்டது. 
எறும்புகளின் வசிப்பிடமும் அதன் அமைப்பும் 
            அதில் பூன்சை தோட்டங்களும், சேமிப்பு கிடங்குகளும், நெடுஞ்சாலைகள் என்று அனைத்து விதாமான வசதிகளும் அமையப்பெற்றதாக இருந்தது என்று அந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இந்த நகரமானது 50 சதுர.மீ பரப்பளவும், 8 மீ ஆளம் கொண்டதாகவும், அதாவது ஒரு சிறிய பள்ளதாக்காக இருப்பதை அந்த ஆவணத்தில் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 40 டன் மண்ணை அந்த எறும்புக்கூட்டம் வெளியே எடுத்துள்ளது.

2. எறும்புகள் பேசுகின்றன:

             மேற்குறிபிட்ட இறைவசனம் எறும்புகள் பேசுவதாக ஒரு தகவலை தருகிறது. பல ஆண்டுகளாக அறிவியல், எறும்புகள் தான் உற்பத்தி செய்யும் பெர்மோன் என்னும் வேதியல் பொருளின் மூலமே தகவல் பரிமாற்றம் செய்வதாக நம்பி வந்தனர். இந்த பெர்மோனை கொண்டே தங்களது குடும்பத்தினர் அடையாளம் குறித்தும் எறும்புகள் அறிந்து வந்தன. எறும்புகளின் வாசனை அறியும் திரண் மனிதனை விட பலமடங்கு மேம்பட்டதாகவும் மாறுபட்டதாகவும் அறிவியல் கூறுகிறது. (P.No: 517 Ants: Thier Structure Development and Behaviour)(1). இவ்வாறாக தனது உடலில் இருந்து சுரக்கும் பெர்மோங்களை கொண்டு தனது புற்றின் உறுப்பினர்களை சரியாக அடையாளம் காண்கின்றன. மேலும் தான் உணவை நோக்கி சென்ற பாதையை மற்ற எறும்புகளுக்கு தெரிவிக்க இந்த பெர்மோன்களினால் பாதையில் தடத்தினை விட்டு செல்கின்றன. ஆனால் இவ்வாறான பெர்மோன் களை மட்டுமே கொண்டு தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தை செய்வதில்லை.
உணவைக் கண்டுபிடித்த எறும்பு, தன் சக எறும்புகள் அதை கண்டுபிடிக்கும் பொருட்டு "இரசாயன" சுவட்டை விற்றுச் செல்வதை பார்க்கலாம்.
சமிபகால ஆய்வுகள் எறும்புகள் சத்தத்தின் மூலமாகவும் தகவல் பரிமாற்றம் செய்வதாக குறிப்பிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் Stridulation என்று அழைப்பார்கள். இது பூச்சி இணங்கள் தங்களது உடல் உறுப்புகளை அதிர்வடைய செய்வதின் மூலமும் உறுப்புகள் ஒன்றை ஒன்று உராய்வதினாலும் ஏற்படுத்தும் சத்தமாகும்.மனிதர்கள் எப்படி தங்களது குறள்வளைகளின் மூலம் ஓலியை எழுப்புகிறோமோ, அதே போன்று எறும்புகள் தங்களது வயிற்றுப்பகுதியில் இருக்கும் ப்லெக்ட்ரம்(Plectrum) என்ற பகுதியை அதிரச் செய்வதன் மூலம் சத்ததை உற்பத்தி செய்கின்றன. இதனை ஹெர்மான் லேண்டாய்ஸ் என்ற ஜெர்மன் அறிஞர் 1874ல் தான் வெளியிட்ட Theirstimmen என்ற புத்தகத்தில் குறிப்பிட்டார். மேலும் எறும்புகளின் வயிற்று பகுதியில் மெல்லிய அரம் போன்ற அமைப்புகளால் அவை சத்தத்தை எழுப்புவதாக அறிவியலாளரான வில்லியம் மார்டான் வீலர் தனது புத்தகமான (P.No:26 "Ants: Thier Structure Development and Behaviour)(1) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பூச்சிகள் அதற்கென உரிய அதிர்வெண்களில் சத்தத்தை எழுப்புகின்றன. அதே போல் ஒவ்வொரு வகை எறும்புகளும் அதற்கென உரிய அதிர்வெண்களில் சத்தத்தை எழுப்புகின்றன.
Myrmica Schenki 'எறும்புகளின் இராணி எறும்பு, வேலை எறும்புகள், பூப்பா மற்றும் புழுக்களின் ஒலி உறுப்புகளும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட சத்தங்களின் அலைவரிசையை விளக்கும் படம் 
எறும்புகளின் காதுகள்:
                இவ்வாறாக எறும்புகள் தங்களுக்குள் எழுப்பும் சத்தம் கிட்டதட்ட 1KHz வரை உடையாதாக இருக்கிறது. இந்த சத்தங்களை எறும்புகள் தங்களது ஆண்டனாக்களின் மூலமும், கால்களில் உள்ள மெல்லிய முடிகளின் மூலமாகவும் அறிந்து கொள்கின்றன. P.No: 513 Ants: Thier Structure Development and Behaviour)(1)(5)(6) . கணுக்காலிகளான எறும்புகள் தங்களது உடலின் எந்த பகுதிகள் வழியாக சத்தத்தை உணர்ந்து கொள்கின்றன என்பதை கீழுள்ள படம் விளக்குகிறது




       இத்தகைய சத்தத்தை உணரும் உறுப்புகள் (Chordotonal Organs) இசை கருவிகளில் உள்ள கம்பி போன்ற அமைப்புகள் ஒலி அலைகளால் அதிர்வடைந்து எறும்பிற்கு ஒலியை உணர்த்துகின்றன். இத்தகைய ஒலி உறுப்புக்கள் எறும்பின் உடலில் இருப்பதை லப்பாக் என்ற அறிவியலாளர் 1877ல் கண்டறிந்தார். மேலும் அவர் காற்றில் பரவும் இத்தகைய சத்தங்களையும் எறும்புகள் உணரும் என வாதிட்டார். மேலும் காற்றில் ஏற்படும் சத்தங்களையும் எறும்புகள் அறிந்து கொள்கின்றன என வில்லியம் மார்ட்டான் வீலர் மற்றும் டர்னர் ஆகியோர் 1907 பல கட்ட ஆய்வுகளின் மூலம் நிறுவினர். டர்னர் அவர்கள் 3Khz சத்தத்தை கொண்டு எறும்புகளை சோதித்து அந்த சத்தத்திற்கு எறும்புகள் எதிர்வினையாற்றுகின்றன என்பதையும் நிறுவினார். இவ்வாறாக அவை உண்ணும் உணவின் தரம் குறித்தும், எச்சரிக்கை சமிக்கைகளையும், கட்டளைகளயும் இந்த சத்தங்களின் மூலமாகவே தெரிவிக்கின்றன(P.No:512-513 Ants: Thier Structure Development and Behaviour). இதன்மூலம் பல மீட்டர் தொலைவில் உள்ள தனது இணத்தாருக்கு தகவலை தெரிவிப்பதாக கணடறியப்பட்டது. உதரணமாக இலை வெட்டும் எறும்புகளில் உள்ள இந்த மேற்பார்வையாளர் எறும்பு தான் கண்டறிந்த உணவின் தரத்தை தனது வேலைகார எறும்புகளுக்கு எவ்வாறு தெரிவிக்கின்றது என்பதை விளக்கும் Prof. Bert Holldoblerன் ஆவணப்படத்தின் பகுதி (6) 

4. மேற்பார்வையிடும் பெண் எறும்புகள்: نَمْلَةٌ


          نمْل -- என்ற சொல்லானது எறும்பு என்ற பொருள் தரும் சொல்லாகும். இது ஆண்பால் ஒருமை சொல்லாகும். ஆயினும் இந்த சொல்லானது பன்மையை குறிக்கவும் பயன்படுத்த முடியும். அதாவது கூட்டு பெயர் சொல்லாக பயன்படுத்தும் போது பன்மையாக பயன்படுத்தப்படும்

نَمْلَة • ‎(namla) f ‎(singulative, collective نَمْل ‎(naml), plural نِمَال ‎(nimāl))

       உதாரணமாக அதே வசனத்தில் ‘வாதில் நம்ல்’ என்ற பதத்திலும் ‘யா அய்யுகள் நம்லு’ என்ற பதத்திலும் “எறும்புகளின் பள்ளதாக்கு” என்றும் “ஓ எறும்புகள் சமுதாயமே!” எனும் போதும் نمل என்ற சொல் பன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 
           قَالَتْ نَمْلَةٌ .-- என்ற பதத்தில் பயன்படுத்தப்பட்ட نَمْلَةٌ என்ற சொல்லானது எறும்பு என்ற பெண்பால் ஒருமையாகும். 

அரபு இலக்கணத்தில் மனிதனல்லாதவற்றின் பன்மையை குறிக்க பெண்பால் ஒருமையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

உதாரணமாக

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةُ وَالنَّحْلَةُ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ ‏.‏ 

நபி(சல்) அவர்கள் நான்கு உயிரின்ங்களை கொள்வதை தடை செய்தார்கள்: எறும்புகள், தேனீக்கள், சிட்டு குருவிகள் மற்றும் கொண்டலத்தி பறவைகள் ஆகியவையாகும் (அபூ தாவூத்: 5267)

        இங்கு கவனிக்கப்படவேண்டியது என்ன வென்றால் نمل என்ற ஒருமை சொல்லிருக்க இங்கு نَمْلَةٌபன்மைக்கு பயன்படுத்தும் பெண்பால் சொல் ஒர் எறும்பு என்ற பொருள் பட பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆக இந்த வசனத்தில் نَمْلَةٌ என்பது பெண் எறும்பு என்பதையே குறிக்கிறது. 

அத்தியாயம் மற்றும் வசனங்களின் அமைப்பு : 

       குர் ஆனில் ஒரு வசனத்தில் இடம் பெறும் கருத்தை அது இடம் பெற்றிருக்கும் இடம் மேலும் அந்த வசனத்தை தெளிவு படுத்தும். அந்த வகையில் மேற்கூறிய வசனத்திற்கு பிறகு இடம் பெறும் வசன்ங்கள் மேற்கூறிய வசனத்தில் இடம் பெறும்

               نَمْلَةٌ பெண் எறும்பைதான் குறிக்கும் என்பதை வலுவூட்டுகிறது. அதாவது இந்த வசனத்தை தொடர்ந்து இடம்பெறும் வசனங்கள் 27:19ல் இருந்து 27:40 வரை உள்ள வசன்ங்கள் ஒரு பெண் அரசியால் ஆளப்பட்ட சமுதாயத்தின் வரலாற்றை கூறுகிறது. அதாவது பெண் அரசியால் ஆளப்படும் சமுகம் குறித்த ஓர் முன்னறிவிப்பு சுலைமான்(அலை) அவர்களுக்கு வாதில் நம்லில் உணர்த்தப்படுகிறது. 
      பெண் எறும்புகள்தான் வேலை செய்யும் எறும்புகள். மேற்குறிபிட்ட வசனத்தில் கட்டளையிட்ட எறும்பு குறித்து பெண் எறும்பு என்ற சொல்லையே குர்ஆன் பயன்படுத்துகிறது. வேலை செய்யும் எறும்புகளில் ஒரு பிரிவு எறும்புகள் தான் மேற்பார்வை பணியை செய்கின்றன. 



இந்த எறும்புகள் வேலைகார எறும்புகளை கட்டுபடுத்துதல், மற்றும் எச்சரிக்கை செய்யும் பணியையும், கூடுகளை காக்கும் பணியையும் மேற்கொள்கிறது.


             இந்த மேற்பார்வை இடும் எறும்புகள் வேலைகார எறும்புகளைவிட அளவில் பெரியதாகவும் , பெரிய அலகுகளை உடையதாகவும் இருக்கும்.(2) இது குறித்து வீலர் அவர்களின் Polymorphism in Ants( எறும்புகளின் பல்லுருத்தோற்றம்- 1907) என்ற கட்டுரையில் முழுமையாக விளக்கியுள்ளார்.(3) மேற்கூறிய இறைவசனத்தில் இடம்பெறும் “ஓ எறும்புகள் சமுதாயமே!” என்ற அந்த மேற்பார்வையாளரின் அழைப்பை குர்ஆன் மிக அழகாக பதிவு செய்துள்ளது, இந்த வேதமானது அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனிடம் இருந்துதான் வந்தது என்பதை பறைசாட்டுகிறது. மேற்பார்வை என்னும் பணியை மேற்கொள்ளும் எறும்புகள் குறித்து பின்வருமாறு 2013 ல் நேசனல் ஜியோகிராஃபிக் சேனலினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் இது குறித்து விவரிக்கிறது.(7)

படிப்பினைகள்:

     அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; (17:41) எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.( 50:37) 
      
     அல்லாஹ் குர்ஆனில் சில படைப்பினங்களை சிலாகித்து கூறுகிறான். அதில் நமக்கு படிப்பினைகள் இருக்கின்றன. படைப்பை நம்பாத நாத்திக அறிவியலார்கள் பரிணாமத்தை நம்புவர். காலப் போக்கில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் உடலமைப்பை மாற்றிக் கொண்டன, நிறைய விஷயங்களை அதுவாகவே பெற்றுக் கொண்டன என்பதுதான் அது. நாம் இங்கே எறும்பை பற்றி பார்ப்போம். எறும்பும் குளவி போன்ற மூதாதையிடம் இருந்து 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு Cretaceous காலத்தில் பரிணாம அடைந்த ஒரு இனம் என்று கருதுகின்றனர். எல்லா படைப்புகளும் எறும்புகளும் மனித இனத்தை போன்ற ஒன்றே என்று குரான் கூறுகிறது. பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (6:38) இந்த எறும்பு சம்பவம் மூலம் என்ன படிப்பினைகளைநாம் பெறுகிறோம் என்பதை பார்ப்போம். 

1. எறும்பு போன்ற உயிரினங்களும் தனக்கென்று ஒரு வாழ்வையும், சமுதாய வாழ்வையும் வாழ்கிறது.
2. எறும்புகளுக்கும் இன்ன பிற எல்லா உயிரினங்களுக்கும் அதனுடைய வாழ்வியல் அமைப்பை கற்றுக் கொள்ளவும் மொழியை பேசவும் அதற்க்கான உள்ளணர்வை புரோகிராம் செய்யப்பட்டது போல அளிப்பவன் இறைவனே!
       மனிதர்கள் எவ்வாறு இனங்களாகவும், மொழி மூலம் விஷயங்களை பரிமாறிக் கொண்டும், ஒருவரை சார்ந்தும், தலைவன்-மக்கள் என்னும் ஒரு வகையான சமூக கட்டமைப்பு உடன் வாழ்வது போன்றே ஒவ்வொரு படைப்புகளும் அதன் இயல்புகளை ஏற்ப இருக்கின்றன. எறும்புகளும் உட்பட.. அவைகள் பேசும், உணவை சேமிப்பதற்கு, தேடுவதற்கு, தமது இனத்தை காப்பாற்றுவதற்கு, தலைமை நடத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் உள்ளடக்கியே இருக்கின்றன.. அல்லாஹ் அதை கொடுத்து இருக்கிறான் .

            வெறுமனே பரிணாமவியல் தியரியை நம்பிக் கொண்டு யதார்த்தமான fact களை தவற விட்டுவிடாதீர்கள். ஆகவே இந்த சம்பவங்களையும், அறிவியல் உண்மைகளையும் வெறுமனே கடந்து செல்லாமல் பயப்படுத்திக் கொள்ளவேண்டியது நமது பொறுப்பு. 


Updated on Sep 25th 2019:

எறும்புகள் தங்களின் ஆன்டெனா மூலம் தகவல்களை பெறுவது மட்டுமில்லாமல் தங்களின் சமூகம் சார்ந்த தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன.
125 வருடங்களுக்கு முன்பு புகழ் பெற்ற பூச்சியியல் வல்லுநர் அகஸ்டே ஃபோரல், நான்கு வகை எறும்புகளின் ஆன்டெனாவை நீக்கியபோது அவை தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல், அமைதியாக ஒற்றுமையுடன் இருந்ததை கண்டுபிடித்தார்.
"அகஸ்டேவின் ஆய்வு எறும்புகள் தகவல்களை ஆன்டெனா மூலம் பெறுகின்றன என்று நிரூபணமாகியது ஆனால் எங்களின் ஆய்வில் இருவழி தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது உறுதியாகியுள்ளது" என்று இந்த ஆய்வின் தலைமை அறிவியலார் வாங் கூறியுள்ளார்.







Books

1.Ants: Thier Structure Development and Behaviour By William Morton Wheeler

2.Ant Ecology By Lori Lach, Catherine L. Parr, and Kirsti L. Abbott

3.Poly morphism in Ants by William Morton Wheeler

4.Book of Common Ants by Eleanor

5.Chordotonal Organs of Insects By Lurence H. Field and Thomas Mathesan(1998)

6.Analysis of Accoustic Communication By Ants By Richard Hickling(2000)

Documentaries:


7. ANTS Nature's Secret Power Full With Bert Hölldobler

8. National Geographic Wild City Of Ants

Links:

9. http://acoustics.org/pressroom/httpdocs/137th/hickling.html

10. http://antark.net/

11. http://www.sciencemag.org/news/2013/02/shhh-ants-are-talking

12. http://www.cell.com/current-biology/abstract/S0960-9822(13)00013-4


நன்றி: திருக்குரானும் அறிவியலும் - ஆய்வுக் கட்டுரைகள்