பக்கங்கள் செல்ல

Friday, January 29, 2021

நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

variant readings of the quran,நபி(சல்) அவர்களிடம் இருந்து-கிராத்கள்,ஏழு கிராத்கள், ஹப்ஸ்,வர்ஸ்,தூரி,காலுன்,

       நாம் சென்ற தொடரில் ஏழு அஃரூஃபும் இன்றிருக்கும் கிராத்களும் தொடர்புடையவை என்பதை விளக்கியிருந்தோம். கிராத்கள் என்பது நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட மாறுபாட்டுடன் குர்ஆனை ஓதுவதாகும். இந்த கிராத்கள் ஒவ்வொன்றும் நபி(சல்) அவர்களிடம், வெகுஜன ஓதலினால் ஒவ்வொரு தலைமுறைகளிலும் கடத்தப்பட்டு இறுதியாக இன்று நம்மிடம் வந்தடைந்திருக்கிறது. அதன் அறிவிப்பாளர் தொடர் குறித்து சிறிய விளக்கத்தை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ்.

வெகுஜன ஓதல் கேட்டலால் கடத்தப்பட்டால் ஏன் ஹஃப்ஸ் கிராத், வர்ஸ் கிராத் என்று பெயரிடப்பட்டிருக்கிறது?

     வெகுஜன ஓதல் கேட்டலால் குர்ஆனின் மாறுபட்ட கிராத்கள் கடதப்பட்டாலும் அந்த கிராத்தினை தற்காலத்தில் ஹஃப்ஸ் அன் ஆஸிம் கிராத். வர்ஸ் அன் நாஃபியின் கிராத் என்று அழைக்கப்பட்டுகிறது. அவர்களது பெயர்களால் அழைக்கப்பட்டதால் அந்த கிராத்களை அவர்கள் தோற்றுவித்தார்கள் என்று பொருள் படாது. உதாரணமாக நாஃபீயின் கிராத்தை எடுத்துக்கொண்டோம் என்றால் அது மதீனாவில் ஓதப்பட்ட வெகுஜன கிராத் ஆகும். அதனை இமாம் நாஃபீ அவர்கள் திறம்பட கற்று அதனை சரியாக கற்று கொடுத்ததால் அது நாஃபீயின் கிராத் என்று அழைக்கபடலாயிற்று. அது போல் இன்று ஹஃப்ஸின் கிராத் என்று அழைக்கப்படுவது ஹஃப்ஸின் சமகாலத்தில், கிராத் அல் ஆம்மா- பெரும்பான்மை ஓதல் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது. உதாரணமாக ஹஃப்ஸின்( ஹி: 90-180 ) சமகாலத்தவரான அல் ஃபர்ரா (ஹி 140-207) தனது அல் மஆனீ அல் குர்ஆன் என்ற நூலில் பாகம் 1 பக்கம் 38ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்

وقوله: وَالَّذِي خَبُثَ لا يَخْرُجُ إِلَّا نَكِداً (58) قراءة العامة وقرأ بعضُ أهل المدينة: نَكَدا.

                 அதாவது அல்குர்ஆன் 7:58 இல் இடம் பெறும் -  وَالَّذِي خَبُثَ لا يَخْرُجُ إِلَّا نَكِداً என்பது பெரும்பான்மை ஓதல் மதீனாவாசிகளில் சிலர் - نَكَدا என்று  ஓதுகிறார்கள்.

        மேற்குறிபிட்ட ஓதலில் பெரும்பான்மை ஓதல் என்பது ஹஃப்ஸ் அன் ஆஸிமின் ஓதல் என்று இன்று அழைக்கப்படுகிறது. அதுபோல சில மதீனாவாசிகளின் ஓதல் என்பது இன்று அபூஜாஃபரின் ஓதல் என்று அழைக்கப்படுகிறது.( கிராத் அபூஜாஃபர் என்பது 7 முத்தவாதீரான கிராத் அல்லாத முன்று மஸ்ஹூர் கிராத்களில் ஒன்றாகும் ஆகும். ) மேலும் இது போன்ற பெரும்பான்மை ஓதல் குறித்து முன்சென்ற தொடரில் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்.

          இந்த கிராத்களின் பெயரால் அறியப்படும் இமாம்கள் தங்களது பகுதியில் குறிபிட்ட நபித்தோழர் அல்லது நபித்தோழர்கள் வழியாக பெறப்பட்ட ஓதலை திறம்பட கற்று அதனை பயிற்றுவித்தனர். குறிபிட்ட இந்த இமாம்கள் எந்த வழியாக இந்த ஓதலை நபி(சல்) அவர்களிடம் இருந்து பெற்றார்கள் என்பது இஸ்லாமிய வரலாற்றில் தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த ஏழு கிராத்களில் இன்று மக்களிடம் பெரும்பான்மையாக காணப்படும் நான்கு கிராத்களும் அது எவ்வாறு நபித்தோழர்கள் வழியாக நபி(சல்) அவர்களது ஓதலுடன், நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஓதலுடன் தொடர்புடையது என்பதை காண்போம்.

          இதுதான் கிராத் அல் ஆம்மா அல்லது பெரும்பான்மையினரின் ஓதல் ஆகும். நபி(சல்) அவர்களிடம் இருந்து உபை இப்னு கஅப்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அலி(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகிய நபித்தோழர்கள் குர்ஆன் ஓதலை பெறுகின்றனர். மேற்குறிபிட்ட நபித்தோழர்களின் கிராத்தை அபூஅப்துர் ரஹ்மான் அல் ஸுலாமி மற்றும் ஜிர் இப்னு ஹபீஸ் வழியாக ஆஸிம் அவர்கள் பெறுகிறார்கள். ஹஃப்ஸ், சுஅபா ஆகியோர் ஆஸிம் அவர்களது நேரடி மாணவர்கள் ஆவார்கள். இதில் ஹஃப்ஸின் ஓதல்தான் பெரும்பான்மையினரின் ஓதலாகும். அந்த அறிவிப்பாளர் தொடரை காண்போம்.


      இங்கு ஹஃப்ஸின் ஓதல் குறித்து பேசும் போது ஹஃப்ஸ் அவர்கள் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்ற குற்றச்சாட்டை இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கின்றனர். இவர்களின் இந்த விமர்சனம் முழுமையானது அல்ல. ஹஃப்ஸின் ஹதீஸ்கள் விடப்பட்டவை என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால் குர்ஆன் ஓதலை பொறுத்தவரை அவரது ஓதல் துல்லியமானது என்பதுதான் சரியானது. பெரும்பான்மை மக்களின் ஓதலுக்கு மாற்றமாக ஓதி இருந்தால் அவரது ஓதல் குர்ஆனின் வெகுஜன ஓதல் கேட்டல் கற்றல் முறைமையினால் காணாமல் போயிருக்கும். மாறாக அது பெரும்பான்மை மக்களின் ஓதலாகவே அது வரலாற்றில் காணப்பட்டது போல இன்றும் காணப்படுகிறது. அதனால்தான் அத்தஹபி இது குறித்து பேசும் போது. ஹஃப்ஸ், ஓதலில் துல்லியமானவர், ஹதீஸ்களில் பலவீனமானவர் ஏனென்றால் ஹதீஸ் துறையில் அவர் குர்ஆன் துறையை போன்று விற்பன்னர் அல்ல. மற்றபடி அவர் உண்மையாளரும், நேர்மையாளரும் ஆவார். (அல் மீஸான்)

           மேலும் ஹஃப்ஸ் நினைவாற்றல் குறைபாடு போன்றவற்றால் குறை கூறப்பட்டவர் அல்ல. ஆக ஹதீஸில் போதிய கவனமற்றவர் என்பதைத்தான் மேற்குறிபிட்ட தஹபி அவர்களது விளக்கம் நமக்கு எடுத்துரைக்கிறது. அது அவரது குர்ஆன் ஓதலில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.

              உபை இப்னு கஅப்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் கிராத்தை இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் அபூஹுரைரா(ரலி) வழியாக யஸீத் இப்னு காஃகா, அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர்முஸ் மற்றும் ஸாலிக் இப்னு ஹவாத் ஆகியோர் பெறுகிறார்கள். இவர்களது மாணவர் நாஃபீ ஆவார். வர்ஸ், காலுன் ஆகியோர் நாஃபீயின் நேரடி மாணவர்கள் ஆவர்.


           உபை இப்னு கஅப்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி),உஸ்மான்(ரலி), அலி(ரலி), உமர்(ரலி), அபூமூஸா அல் அஷ்அரீ(ரலி) ஆகியோர் கிராத்தை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹுரைரா(ரலி), மூலம் இப்னு அம்ர் அபூ அஸ்வதி அல் தூஃலி , ரபிஃ இப்னு மஹ்ரான் , ஹத்தான் இப்னு அப்துர் ரக்காஸ் ஆகியோர் பெறுகிறார்கள்.  அதாஃ இப்னு அபி ரபியா அல் குர்ஸி, இக்ரிமா இப்னு ஹாலித் அல் மக்ஸூமி , இக்ரிமா மவ்லா இப்னு அப்பாஸ், ஸயீத் இப்னு ஜபீர் அல் அஸதீ, முஜாஹித் இப்னு ஜப்ர், அல் ஹஸன் அல் பஸரீ, யஹ்யா இப்னு யஃமூர் ஆகியோர் மேற்குறிபிட்டவர்களிடம் இருந்து பெற்று அபூ அம்ரூ அவர்களுக்கு அறிவிக்கிறார்கள். அல் தூரி மற்றும் அல் ஸூஸி ஆகியோர் அவர்களிடம் இருந்து பெறுகிறார்கள். 


              நபிதோழர் அபூதர்தா(ரலி) அவர்களது ஓதலை இப்னு ஆமிர் வழியாக ஹிஸாம் இப்னு ஆமிர் அஸ்ஸலாமி மற்றும் இப்னு தக்வான் ஆகியோர் அறிவிக்கிறார்கள்.


         மேற்குறிபிட்ட அனைத்து அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் இமாம்கள் யாவரும் முன்சென்ற இமாம்களிடம் பயின்ற பல மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். உதாரணமாக நாஃபி அவர்கள் 70க்கும் மேற்பட்ட தாபியீக்களிடம் கல்வி பயின்றுள்ளார்கள். அது அனைத்தையும் நாம் குறிப்பிடவில்லை. அதில் முக்கியமான ஆசிரியர்கள் மட்டுமே மேற்குறிபிட்ட தொடரில் குறிப்பிட்டுள்ளோம்.  இவ்வாறான வெகுஜன ஓதல்களான ஏழு கிராத்களையும் , மூன்று மஸ்ஹூர் கிராத்களையும் மனனமிட்ட காரிகள் இன்றும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இஸ்லாமிய உலகில் குர்ஆனின் கிராத்கள் பின்வருமாறு பரவியுள்ளது.

1. ஹஃப்ஸின் ஓதல் இஸ்லாமிய உலகில் 95% மக்களின் பயன்பாட்டில் இருப்பதாகும்.

2.நாஃபீயின் ஓதல் இன்றைய இஸ்லாமிய உலகின் 3.7% பயன்பாட்டில் உள்ளது.

3.அல் தூரியின் ஓதல் இன்றைய இஸ்லாமிய உலகில் இன்று 0.3% பயன்பாட்டில் உள்ளது.

4. இப்னு ஆமிரின் ஓதல் இன்றைய இஸ்லாமிய உலகின் 1% பயன்பாட்டில் இருப்பது ஆகும்.


              அதுபோல இன்றைக்கு இவை அனைத்தும் எழுத்து வடிவிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக வேறுபட்ட ஓதல்கள் இருப்பதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பது குருட்டுத்தனமான வாதமாகும். குர்ஆனின் பெரும்பான்மை ஓதலும், மக்களின் ஓதலில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு ,அல்லாஹ்வின் மகத்தான் கருணையினால் நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஏனைய அஃரூஃப்களும் இன்றும் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது நிறுவப்பட்டுள்ளது .அதனால்தான் குர்ஆன் குறித்து ஆட்ரியன் புரோகெட் என்ற ஆங்கில அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்
   குர்ஆன் வாய்வழியாக மட்டுமே முதன் நூற்றாண்டில் கடத்தப்பட்டிருந்தால், ஹதீஸ்களிலும், இஸ்லாமிற்கு முந்தைய அரேபிய பாடல்களிலும் காணப்படும் கணிசமான உரைமாறுபாடுகள் போன்று காணப்பட்டிருக்கும். அதேபோல் எழுத்து வடிவில் மட்டுமே கடத்தப்பட்டிருந்தால் மதீனா சாசனத்தின் வேறுபட்ட வழிகளில் பெறும் மூல பிரதிகளில் காணப்படும் கணிசமான மாறுபாடுகள் போன்று காணப்பட்டிருக்கும். இவை இரண்டுமே குர்ஆனின் விஷயத்தில் பொறுந்தாது. அன்று நிச்சயமாக குர்ஆனின் வாய்வழி பரவலில் தோன்றும் மாறுபாடுகளை கட்டுப்படுத்தும் அதற்கு இணையான எழுத்து வடிவிலான பரவல் இருந்திருக்க வேண்டும். அதேபோன்று எழுத்து வடிவிலான பரவலை பாதுக்காக்கும் வாய்வழி பரவல் இருந்திருக்க வேண்டும். முஹம்மதின் மரணத்திற்கு பிறகான குர்ஆன் பரவல் அடிப்படையில் மாறக்கூடியதாய் இல்லாமல் நிலைத்தன்மை உடையதாய் இருந்தது.   ( P.No:44,Adrian Brockett, “The Value of the Hafs and Warsh Transmissions for the Textual History of the Qur’ an,” in Approaches to the History of the Interpretation of the Qur’ an, ed. Andrew Rippin (Oxford: Clarendon Press,
1988),  & P.No: 99 Story of the Qur'an_ Its History and Place in Muslim Life by Ingrid Mattson)
ஹதீஸ்களில் காணப்படும் நபிதோழர்களின் மாறுபட்ட ஓதல்கள்:
          குர்ஆனின் பெரும்பான்மை ஓதல் குறித்தும் குர்ஆன் எப்படி ஓதலினால் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதையும் சென்ற கட்டுரைகளில் விரிவாக கண்டோம். குர்ஆனின் முத்தவாதிரான ஓதல்கள் எப்படி நபி(சல்) அவர்களோடு தொடர்புடையது என்பதை விளக்கி உள்ளோம். முன் சென்ற தொடர்களை விரிவான ஆதாரங்களுடன் கண்டதின் நோக்கம், இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களுக்கான பதில்களை எளிமையாக விளங்கிக்கொள்வதற்கே. இனி வரும் தொடர்களில் சில ஹதீஸ்களில் காணப்படும் நபித்தோழர்களின் மாறுபட்ட ஓதல்கள் குறித்து இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் விமர்சனத்தையும் விளக்கத்தையும் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக நாம் முன்சென்ற கட்டுரைகளின் சில பகுதிகளை நாம் நினைவு கூறுவோம்,

1. குர்ஆன் என்னும் வெகுஜன ஓதல்:
இமாம் சுயூத்தி அவர்கள் குர்ஆன் குறித்த தனது இத்கான் ஃபீ உளூம் அல் குர் ஆன் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

الْأَوَّلُ: لَا خِلَافَ أَنَّ كُلَّ مَا هُوَ مِنَ الْقُرْآنِ يَجِبُ أَنْ يَكُونَ مُتَوَاتِرًا فِي أَصْلِهِ وَأَجْزَائِهِ وَأَمَّا فِي مَحَلِّهِ وَوَضْعِهِ وَتَرْتِيبِهِ فَكَذَلِكَ عِنْدَ مُحَقِّقِي أَهْلِ السُّنَّةِ لِلْقَطْعِ بِأَنَّ الْعَادَةَ تَقْضِي بِالتَّوَاتُرِ فِي تَفَاصِيلِ مِثْلِهِ لِأَنَّ هَذَا الْمُعْجِزَ الْعَظِيمَ الَّذِي هُوَ أَصْلُ الدِّينِ الْقَوِيمِ وَالصِّرَاطِ الْمُسْتَقِيمِ مِمَّا تَتَوَفَّرُ الدَّوَاعِي عَلَى نَقْلِ جُمَلِهِ وَتَفَاصِيلِهِ فَمَا نُقِلَ آحَادًا وَلَمْ يَتَوَاتَرْ يُقْطَعُ بِأَنَّهُ لَيْسَ مِنَ الْقُرْآنِ قَطْعًا.
     குர்ஆன் முழுமையாகவும், பகுதியாகவும் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அஹ்லுஸ் சுன்னாவை பொருத்தவரை அதன் அமைப்பும், அதன் வரிசை முறையும் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது , அதனால் அது எந்த சர்ச்சைக்கும் அப்பார்பட்டது.  ஏனென்றால் இந்த மகத்தான அற்புதம்,  உண்மையான மார்க்கத்தின் அடிப்படையாகவும், நேரான பாதையுமாக இருக்கிறது. அது அமோதிக்கப்பட்ட உண்மையாகும். அதன் விளைவாக எண்ணிலடங்கா அறிவிப்பாளர் இன்றி ஒற்றை அறிவிப்பாளர் வழியாக வந்த எதுவும் குர்ஆன் ஆகாது (இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் 1/266)

             இந்த கூற்றின் விளக்கத்தை இங்கு விளக்குவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதனால் இந்த கூற்றை சற்று விரிவாக காண இருக்கிறோம். 

மேற்குறிபிட்ட கூற்றான குர்ஆன் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது என்பதின் பொருள்:

     குர்ஆன் என்பது ஒரே நேரத்தில் பலர் ஓதி, பலர் கேட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது ஆகும். இதை நாம் முன்சென்ற தொடரில் கண்டோம். அபூதர்தா(ரலி) அவர்கள் குர்ஆனை எப்படி கற்பிப்பார்கள் என்ற முறையை நாம் பதிவிட்டிருந்தோம். சிறுவயதிலான பாலர் பாடம் போல  குர்ஆனை ஒரு தருணத்தில் பலர் ஓத அதை பலர் கேட்டு வெகுஜன ஓதல் கேட்டலால் கடத்தப்பட்டது. ஆக ஒரு சில அறிவிப்பாளர் வழியாக வரும் ஹதீஸ்களில் இடம்பெறும் குர்ஆன் குறித்த குறிப்புகள் , இன்றிருக்கும் முத்தவாதீரான குர்ஆனில் இருந்து முரண்பட்டால் அது ஏற்கப்படாது. இது வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட உண்மை. ஒரே நேரத்தில் பலர் ஓதியும் பலர் கேட்டும் வெகுஜன ஓதல் கேட்டல் முறையில் கிடைத்த ஒரு விசயம் ஒரு சிலரால மறுக்கப்பட்டால் அது ஏற்புடையாதாக இருக்காது என்பது நாம் அறிந்ததே.

2.நாஸிக் மன்ஷுக்:
         நபி(ஸல்) அவர்களது இறுதி ஓதலின் சாட்சியாக இருந்தவர் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆவார்கள். அது தலைசிறந்த நபிதோழர்களால் ஒத்த கருத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் முன் சென்ற தொடரில் கண்டோம். இதற்கு மாற்றமாக இடம் பெறும் செய்திகள் எந்த மதிப்பும் அற்றது. நபி(சல்) அவர்களது இறுதி ஓதலுக்கு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) சாட்சியாக இருந்தார்கள் என்பதையும், அவர்கள் அபூபகர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) போன்றோர்களாலும் இந்த விசயத்தில் முன்னிறுத்தப்பட்டவர் என்பதை நாம் முன்பே கண்டிருக்கிறோம். ஆக இறுதி ஓதலில் இருந்த நபி(சல்) அவர்களது சேர்த்தல், விலக்கலுக்கு மாற்றமாக இடம்பெறும் செய்திகள் எந்த மதிப்பும் அற்றது.

        மேற்குறிபிட்ட இரண்டு அடிப்படைகளில் குர்ஆன் மாறுபாடுகள் குறித்த அனைத்து ஹதீஸ்களையும் வகைபடுத்தி விடலாம். குர்ஆனின் இத்தகைய மாறுபாடுகள் குறித்த ஹதீஸ்களை நாம் எளிமையாக தேடி எடுக்க வசதியாக பல இஸ்லாமிய எதிர்ப்பு வலைத்தளங்கள் இத்தகைய ஹதீஸ்களை வரிசைபடுத்தி அளித்துள்ளன. அல்லாஹ் எதிரிகளின் மூலமாகவும் இஸ்லத்தை எளிமையாக்குகிறான் என்பதுதான் உண்மை. அல்ஹம்துலில்லாஹ்….இந்த வரிசையில் சில ஹதீஸ்களையும், அதன் விளக்கத்தையும் இனி வரும் கட்டுரைகளில் காண இருக்கிறோம். இன் ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment