ஞாயிறு, 20 நவம்பர், 2022

இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ    குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அடிப்படியாக கொண்டது. அவர்கள் அதற்கு முன்வைக்கும் ஆதாரத்தையும் அதன் அடிப்படையில் எழுப்பப்படும் விமர்சனத்தை முதலில் பார்ப்போம்.

இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும்
ஆதாரம் 1:
`Abdullah b. `Umar reportedly said, 'Let none of you say, "I have got the whole of the Qur'an." How does he know what all of it is? MUCH OF THE QUR'AN HAS GONE. Let him say instead, "I have got what has survived."' (Jalal al Din `Abdul Rahman b. Abi Bakr al Suyuti,al-Itqan fi `ulum al-Qur'an, Halabi, Cairo, 1935/1354, Volume 2, p. 25)

     இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனின் பெரும்பகுதி சென்றுவிட்டது. மாறாக அவர் " எது தப்பியதோ அதனை பெற்றுக்கொண்டேன்" என்று சொல்லட்டும். (அல் சுயூத்தி அவர்களது இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன், பாகம் 2 பக்கம் 25, ).

ஆதாரம் 2:
Isma’il b. Ibrahim related to us from Ayyub from Nafi‘ from Ibn ‘Umar who said – Let none of you say, “I have learned the whole of the Koran,” for how does he know what the whole of it is, WHEN MUCH OF IT HAS DISAPPEARED? Let him rather say, “I have learned what is extant thereof.” (Ibn Warraq, Origins of the Koran – Classic Essays on Islam’s Holy Book [Prometheus Books, Amherst, NY 1998], Part Two: The Collections and the Variants of the Koran, 9. Abu ‘Ubaid on the Verses Missing from the Koran, by Arthur Jeffery, p. 151: bold, capital and underline emphasis ours)
    இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனின் பெரும்பகுதி மறைந்து போய்விட்டது. மாறாக அவர் " அதில் எது இருக்கிறதோ அதை கற்றுக்கொண்டேன்" என்று சொல்லட்டும்.
ஆதாரம் 3:
حدثنا إسماعيل بن إبراهيم ، عن أيوب ، عن نافع ، عن ابن عمر ، قال : « لا يقولن أحدكم قد أخذت القرآن كله وما يدريه ما كله ؟ قد ذهب منه قرآن كثير ، ولكن ليقل : قد أخذت منه ما ظهر منه
Ismail bin Ibrahim narrated from Ayub from Naf’ee from Ibn Umar who said: ‘Verily among you people one would say that he has found the Quran whilst he is unaware of what the total quantity of the Quran was, because most of the Quran has been lost. Rather one should say that verily he has found the Quran that has appeared.’(Fadhail al-Quran by Qasim bin Salam, Volume 2 p. 135)
இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். குர்ஆன் முழுவதும் என்ன என்று அவர் அறிவாரா? ஏனென்றால் குர்ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது. மாறாக அவர் " குர்ஆனில் எது இருக்கிறதோ அதை கண்டுகொண்டேன்" என்று சொல்லட்டும்.(காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆன், பாகம் 2 பக்கம் 135)
இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதம்:
       மேற்குறிபிட்ட ஆதாரங்களை அடிப்படையில் அல் குர்ஆனின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டதாக நபித்தோழரான இப்னு உமர்(ரலி) கூறுகிறார்கள். எனவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம்.

    மேற்குறிப்பிட்ட மூன்று ஆதாரங்களை பொறுத்தவரையில் இரண்டாவது ஆதாரம், இஸ்லாமோஃபோபியாவை பரப்புவதையே முழுநேர தொழிலாக கொண்ட இப்னு வராக்கின் புத்தகத்தில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அபூ உபைத் அவர்களின் நூலில் இருந்து மேற்கோள் காட்டி ஆர்தர் ஜெஃப்ரியின் நூலில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்னு வராக் மேற்கோள்காட்டும் ஆர்த்தர் ஜெஃப்ரியின் ஆதாரமும் அபூ உபைத்தின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதால் 1 மற்றும் 3ம் ஆதாரத்தை மட்டும் நாம் ஆய்வுக்கு உட்படுத்துவதே போதுமானது.

மொழியாக்க பித்தலாட்டம்

        இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த ஆதாரங்களான அல் சுயூத்தி அவர்களது இத்கான் மற்றும் அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆன் ஆகிய இரண்டுமே ஒரே வாசகத்தையே கொண்டிருக்கிறது.


            அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு ஆதாரமும் வேறு பட்ட பொருளை தரும். இவர்கள் மொழிபெயர்ப்பில் மொசடி செய்துள்ளனர். இரண்டு நூற்களிலும் " قد ذهب منه قرآن كثير " என்ற வாசகமே இடம் பெற்றிருக்கிறது. அதனை மொழியாக்கம் செய்த இஸ்லாமோஃபோபுகள் அல் சுயூத்தி அவர்களது இத்கானின் ஆதாரம் என்று குறிப்பிடுவதில் "குர்ஆனின் பெரும்பகுதி சென்றுவிட்டது" என்றும், அபூ உபைத் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆனின் ஆதாரம் என்று குறிப்பிடுவதில் "ஏனென்றால் குர்ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது" என்றும் மொழியாக்கம் செய்துள்ளனர். இவ்வாறு மொழியாக்கத்தில் தில்லு முல்லு செய்துவிட்டு இஸ்லாமோஃபோபியா பிடித்த இப்னு வராக்கின் மேற்கோளில் "குர்ஆனின் பெரும்பகுதி மறைந்து போய்விட்டது" என்று இடம்பெறுவதாக கூறுகின்றனர். இப்படி இடத்துக்கிடம் மொழியாக்கம் மாறுவதே இவர்கள் மொழியாக்கத்தில் பெரும் மோசடி செய்துள்ளனர் என்பதற்கு போதிய சான்று.

    மேற்குறிபிட்ட ஆதாரங்களில் இரண்டு சொற்களின் மொழியாக்கத்தில் மோசடி செய்துள்ளனர்.
1. ذهب
2. كثير

ذهب  - என்ற சொல்லின் பொருள்:

    “ذهب " - என்ற சொல்லின் பொருள் மிகவும் பறந்து விரிந்த பொருளை கொண்டது. அல்மானி அரபிய அகராதி அல்குர்ஆனில் பின்வரும் பொருளில் இந்த சொல்  1.புறப்படுதல், 2.சென்று விடுதல் 3.தொலைதூரம் சென்று விடுதல் 4.எடுத்துக்கொள்ளுதல். ஆகிய பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது. இந்த நான்கு பொருளில் எது இவர்கள் குறிப்பிடும் செய்தியில் இடம் பெறும் என்பதை இரண்டு முறைகளில் அறிந்து கொள்ளலாம்.

1.வேறு நூல்களில் இடம்பெறும் இப்னு உமர்(ரலி) அவர்களது அறிவிப்புகளின் அடிப்படையில்

2. எந்த தலைப்பின் கீழ் இந்த ஆதாரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்ற அடிப்படையில்

1.வேறு நூற்களில் இடம்பெறும் இப்னு உமர்(ரலி) அவர்களது அறிவிப்புகள்:

            வேறு எந்த நூற்களில் அல்லது அறிவிப்பாளர்கள் வழியாக இந்த செய்தி இடம்பெறுகிறது என்பதை அல் இத்கானின் ஆசிரியரான அல் சுயூத்தி அவர்கள் தனது துர்ருல் மன்சூரில் பதிவிட்டுள்ளார்.
ﻭﺃﺧﺮﺝ ﺃﺑﻮ ﻋﺒﻴﺪ ﻭاﺑﻦ اﻟﻀﺮﻳﺲ ﻭاﺑﻦ اﻷﻧﺒﺎﺭﻱ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻻ ﻳﻘﻮﻟﻦ ﺃﺣﺪﻛﻢ ﻗﺪ ﺃﺧﺬﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ ﻣﺎ ﻳﺪﺭﻳﻪ ﻣﺎ ﻛﻠﻪ ﻗﺪ ﺫﻫﺐ ﻣﻨﻪ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ ﻭﻟﻜﻦ ﻟﻴﻘﻞ: ﻗﺪ ﺃﺧﺬﺕ ﻣﺎ ﻇﻬﺮ ﻣﻨﻪ
    அபூ உபைத் , இப்னு தூரைஷ், இப்னு அன்பாரியின் முஸ்ஹஃப்பில் ஆகிய அறிவிப்புக்களில் இப்னு உமர் கூறுவதாக அமைந்த செய்தி என்று மேற்குறிப்பிட்ட செய்தியை துர்ருல் மன்சூர் 1/258ல் அல் சுயூத்தி அவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

    அபூ உபைத் அவர்கள் மட்டும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. இப்னு தூரைஷ் அவர்களும் இந்த செய்தியை அறிவித்துள்ளதாக அல் சுயூத்தி அவர்கள் கூறுகிறார்கள். இப்னு தூரைஷ் அவர்களது அறிவிப்பை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரியில் பதிவிட்டுள்ளார்கள்.

ﺃﺣﺎﺩﻳﺚ ﺻﺤﻴﺤﺔ ﻭﻗﺪ ﺃﺧﺮﺝ ﺑﻦ اﻟﻀﺮﻳﺲ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺑﻦ ﻋﻤﺮ ﺃﻧﻪ ﻛﺎﻥ ﻳﻜﺮﻩ ﺃﻥ ﻳﻘﻮﻝ اﻟﺮﺟﻞ ﻗﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ ﻭﻳﻘﻮﻝ ﺇﻥ ﻣﻨﻪ ﻗﺮﺁﻧﺎ ﻗﺪ ﺭﻓﻊ

    இப்னு தூரைஷ் ஸஹீஹான் அறிவிப்பாளர் வரிசையில் பின்வருமாறு அறிவிக்கிறார். இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒரு மனிதர் " நான் முழு குர்ஆனையும் ஓதிவிட்டேன் " என்று கூறுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள். குர்ஆனின் ஒரு பகுதி உயர்த்தப்பட்டுவிட்டது (எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது) என்று கூறுவார்கள். ( ஃபத்ஹுல் பாரி 9/65)
அதே போல் மேற்கொண்ட செய்தியை அதே அறிவிப்பாளர் வரிசையில் இப்னு வஹ்ப் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்கள்.
ﻗﺎﻝ: ﻭﺣﺪﺛﻨﻲ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ﻋﻦ ﺃﻳﻮﺏ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﺃﻥ اﺑﻦ ﻋﻤﺮ ﻛﺎﻥ ﻳﻜﺮﻩ ﺃﻥ ﻳﻘﻮﻝ: ﻗﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ، ﻭﻗﺎﻝ: ﺇﻥ ﻣﻨﻪ ﻣﺎ ﻗﺪ ﺭﻓﻊ، ﺃﻭ ﻧﺴﻲ.
    இப்னு உமர்(ரலி)  "நான் முழு குர்ஆனையும் ஓதிவிட்டேன்",என்று கூறப்படுவதை வெறுப்பார்கள். மேலும் அவர்கள், "அதில் சில உயர்த்தப்பட்டுவிட்டது (எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது) அல்லது மறக்கச் செய்யப்பட்டுவிட்டது", என்று கூறினார்கள்.(இப்னு வஹ்ப் அவர்களது தஃப்ஸீர் அல் குர்ஆன் மின் ஜாமீ 3/19 ஹதீஸ் 24)
அல்லாஹ்வும் அல் குர்ஆனில் இதே அடிப்படையில் கூறுவதை நாம் காணலாம்
        ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? [அல்குர்ஆன் 2:106]
    எனவே இப்னு உமர்(ரலி) அவர்களது மேற்குறிபிட்ட ஹதீகளின் அடிப்படையில்,  "ذهب " என்ற சொல் "எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.


        மேற்குறிபிட்ட செய்தியை அல் சூயூத்தி அவர்கள் நாஸிஹ் மன்சூஹ் குறித்த பகுதியில் கொண்டுவந்துள்ளார். குர்ஆனை பொறுத்தவரை "நாஸிஹ் மன்சூஹ் " என்ற சொல்லாடல் எது குறித்தது என்பது அனைவரும் அறிந்தது.  இந்த தலைப்பானது 462 முதல் 475 வரை உள்ள பக்கங்களை உள்ளடக்கியது. மேற்குறிபிட்ட செய்தி 470ம் பக்கத்தில் இடம்பெறுகிறது.        மேலும் இந்த பகுதியில் இப்னு உமர்(ரலி) இது போன்று அறிவிக்கும் ஏனைய செய்திகளையும் பதிவிட்டுள்ளார். அதில் தப்ரானீ அவர்களது அல் கபீர் என்ற நூலில் 13141 ஹதீஸாக இடம் பெறும் இந்த செய்தியையும் கொண்டுவருகிறார்.

இப்னு உமர்(ரலி) கூறியதாவது
        இருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிய ஒரு சூராவை மனனமிட்டிருந்தார்கள். ஒர் இரவு அவர்கள் தொழுகையில் நின்ற போது , ஒரு எழுத்தை கூட ஓத இயலவில்லை. காலையில் இருவரும் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களிடம் வந்து இது குறித்து கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ," அது ரத்து செய்யபட்டுவிட்டது.( ரத்து செய்யப்பட்டு, மறக்க செய்யபட்டுவிட்டது என்று தப்ரானீயில் இடம்பெற்றுள்ளது) எனவே அதை விட்டுவிடுங்கள் " என்று கூறிவிட்டார்கள். (அல் இத்கான் பக்கம் எண்: 472)

        மேற்குறிபிட்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது. ஆனால் சூயுத்தி அவர்கள் "ذهب " என்ற சொல்லை "எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற பொருளில்தான் பதிந்துள்ளார்கள் என்பதை உறுதிப்பட நிறுவவே இந்த செய்தியை இங்கு கொண்டுவந்துள்ளோம்.

எந்த தலைப்பின் கீழ் அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்கள் தனது ஃபதாயில் அல் குர்ஆன் என்ற நூலில் இந்த செய்தியை கொண்டுவதுள்ளார்கள்.

       அதுபோல அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களும் இந்த செய்தியை "அல் குர்ஆனில் இறங்கிய பிறகு எடுத்துக்கொள்ளப்பட்டவையும், அவை அல் மஸாஹிஃப்பில் இடம்பெறாமையும் குறித்த பாடம்" என்ற தலைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள்.

    மேலும் இப்னு உமர்(ரலி) அவர்களை பொறுத்தவரையில் குர்ஆனில் யாரும் எந்த மாற்றமும் செய்ய இயலாது, அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டது என்பதுதான் அவர்களது நிலைபாடு. அதனை பின்வரும்செய்தி விளக்குகிறது.
ﺣﺪﺛﻨﻲ ﻳﻌﻘﻮﺏ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ ﻗﺎﻝ، ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻋﻠﻴﺔ، ﻋﻦ ﺃﻳﻮﺏ، ﻋﻦ ﻧﺎﻓﻊ ﻗﺎﻝ: ﺃﻃﺎﻝ اﻟﺤﺠﺎﺝ اﻟﺨﻄﺒﺔ، ﻓﻮﺿﻊ اﺑﻦ ﻋﻤﺮ ﺭﺃﺳﻪ ﻓﻲ ﺣﺠﺮﻱ، ﻓﻘﺎﻝ اﻟﺤﺠﺎﺝ: ﺇﻥ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﺑﺪﻝ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ! ﻓﻘﻌﺪ اﺑﻦ ﻋﻤﺮ ﻓﻘﺎﻝ: ﻻ ﺗﺴﺘﻄﻴﻊ ﺃﻧﺖ ﺫاﻙ ﻭﻻ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ! ﻻ ﺗﺒﺪﻳﻞ ﻟﻜﻠﻤﺎﺕ اﻟﻠﻪ!
       நாஃபீ கூறியதாவது, " அல் ஹஜ்ஜாஜ் குத்பாவை நீட்டிவிட்டார். இப்னு உமர்(ரலி) என் மடிமீது தலையை சாய்த்துக்கொண்டார்கள். அப்போது ஹஜ்ஜாஜ் " இப்னு ஜுபைர் அல்லாஹ்வின் வேதத்தை மாற்றிவிட்டார்" என்று கூறினார். உடனே நிமிர்ந்து அமர்ந்த இப்னு உமர்(ரலி) அவர்கள், "நீயோ , இப்னு ஜுபைரோ அதை செய்ய இயலாது. அல்லாஹ்வின் வாக்கிற்கு எவ்வித மாற்றமும் இல்லை", என்று கூறினார்கள். (தஃப்ஸீர் தபரி 15/141, முஸ்தத்ரக் அல் ஹாகிம் 3301)
            அல் குர்ஆன் அல்லாஹ்வால் பாதுக்காக்கப்பட்டது (அல் குர்ஆன் 15:9) என்பதை உறுதியாக நம்பும் ஒருவர், அல்லாஹ் அளித்த வாக்குறுதியை யாராலும் மாற்ற முடியாது என்பதை நம்பும் ஒருவர்,  குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று நிச்சயம் கூறமாட்டார், என்பதை மேற்குறிபிட்ட செய்தி ஆணித்தரமாக உணர்த்துகிறது.

كثير -  என்ற சொல்லின் பொருள்

        அடுத்ததாக كثير என்ற சொல்லை இஸ்லாமோஃபோபுகள் பெரும்பகுதி என்று மொழியாக்கம் செய்து குர்ஆனின் பெரும்பான்மையான பகுதிகள் காணாமல் போய்விட்டதாக பொய் கூறி திரிகின்றனர். கஸீர் என்ற சொல் எப்படி பயன்படுத்தப்படும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் இங்கு முன்வைக்கப்படுகிறது
ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﻨﻀﺮ اﻷﺯﺩﻱ، ﺛﻨﺎ ﺧﺎﻟﺪ ﺑﻦ ﺧﺪاﺵ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻣﺤﻤﺪ اﻟﺪﺭاﻭﺭﺩﻱ، ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮﻭ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﻋﻦ ﺧﺎﺭﺟﺔ ﺑﻦ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻗﺎﻝ: §ﻟﻤﺎ ﻛﺎﻥ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﺃﺻﻴﺐ ﻣﻤﻦ ﻳﻘﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﻧﺎﺱ ﻛﺜﻴﺮ
    ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது: யமாமா யுத்த நாளில் குர்ஆன் காரிகள் உட்பட மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டனர்.(மஜ்மவுல் கபீர் 4843)
    மேற்குறிபிட்ட செய்தியில்  "كثير" - என்ற பதத்திற்கு மக்களில் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டுவிட்டார்கள், அதாவது மக்களில் 60% கொல்லப்பட்டுவிட்டார்கள், என்று பொருள் கொடுப்பார்களா??? அல்லது மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பொருள் கொடுப்பார்களா???

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ، وَهْوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ "" يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ الثُّلُثُ. قَالَ "" فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ.......
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
            மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) 'அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்' என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)' என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். ......   (ஸஹீஹ் புகாரி : 2742)
        மேற்குறிபிட்ட செய்தியில் மூன்றிலொரு பகுதியே அதிகம் தான் என்று கூறுவது சரியா அல்லது மூன்றில் ஒரு பகுதி பெரும் பகுதி அல்லது 60% பகுதி என்று கூறுவார்களா???

    எனவே கஸீர் என்ற சொல், "அதிகமான பகுதி” , "பல:”,  "கணிசமான" போன்ற பொருளில் பயன்படுத்தும் சொல். இதற்கு பெரும்பான்மை பகுதி என்று மொழியாக்கம் செய்துவிட்டு குர் ஆனின் பெரும்பான்மை பகுதி காணாமல் போய்விட்டது என்று பித்தலாட்டம் செய்துள்ளனர் அன்ஸரிங் இஸ்லாம் வளைதளத்தினர்.......

        மேற்குறிப்பிட்ட வாதங்கள், ஆதாரங்கள், அரபு அகராதிகளின் குறிப்புக்கள், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் குறிபிட்ட பதங்களின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் சரியான மொழியாக்கம் இதுவே  
 இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனில் கணிசமானது எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. மாறாக அவர் " அதிலிருந்து தெரியவந்ததை எடுத்துக்கொண்டேன்" என்று சொல்லட்டும். (ஃபாதாயில் அல் குர்ஆன் 1/320).
            குர்ஆனின் பாதுகாப்பு குறித்து மோசடியாக மொழியாக்கம் செய்துதான் கேள்வி எழுப்ப வேண்டிய அவலநிலையே இஸ்லாமோஃபோபுகளுக்கு உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் இவர்களது இருட்டடிப்பு வேலைகளே குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை பறைசாட்ட போதிய சான்று.. அல்ஹம்துலில்லாஹ்....

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


            
    குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்பதாகும். யமாமா யுத்தமானது ஹிஜ்ரி 11-12ல் , தன்னைதானே இறைத்தூதர் என்று அறிவித்து இஸ்லாமிய அரசிற்கு எதிராக பனு ஹனிஃபா கிளையாரின் இனவெறியை தூண்டி , போர்பிரகடனம் செய்த முஸைலாமா என்ற பொய்யனுக்கு எதிராக நடைபெற்றதாகும். இந்த போரில் குர்ஆனை மனனமிட்ட பல ஹாஃபிழ்கள் கொல்லப்பட்டனர்.
           இந்த விஷயத்தை கையில் எடுத்த இஸ்லாமோஃபோபுகள் "இந்த யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டன.எனவே இன்றைய குர்ஆனில் அந்த பகுதிகள் இல்லை. எனவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை" என்று விமர்சனம் செய்துவருகின்றனர். அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அவர்களது வாதங்களையும் அதற்கு உரிய தக்க பதில்களையும் காண்போம் இன் ஷா அல்லாஹ்.
இதற்கு ஆன்சரிங் இஸ்லாம் போன்ற இஸ்லாமோஃபோபியா பிடித்த வலைத்தளங்கள் முதல் ஆதாரமாக முன்வைப்பது The True Guidance - An Introduction To Qur'anic Studies, published by Light of Life, P.O. BOX 13, A-9503 Villach, Austria, part 4, p. 47– என்ற மிசனரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலில் இருந்துதான். அதனை முதலில் காண்போம்.
“During the battle of Yamama, 450 reciters of the Qur'an were killed.” (The True Guidance - An Introduction To Qur'anic Studies, published by Light of Life, P.O. BOX 13, A-9503 Villach, Austria, part 4, p. 47– citing Ibn Kathir’s Al-Bidaya wa al-Nihaya, chapter on Battle of Yamama)
யமாமா யுத்தத்தின் போது 450 குர்ஆன் காரிகள் (குர்ஆனை மனனமிட்டவர்கள்) கொல்லப்பட்டார்கள். இப்னு கதீர் அவர்களது பிதாயா வந் நிஹாயா , பாடம் யமாமா யுத்தம் பகுதி 4, பக்கம் 47 குறிப்பின் மேற்கோள்படி.
            இதில் யமாமா யுத்தத்தில் 450 காரிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி 4ம் பாகத்தில் எங்கும் இடம் பெறவில்லை. மாறாக இப்னு கதீர் அவர்களது பிதாயா வந் நிஹாயாவில் 6ம் பாகம் 332ம் (அல்லது 6/373) பக்கத்தில் யமாமாவில் கொல்லப்பட்டவர்கள் குறித்த குறிப்பு பின்வருமாறு இடம் பெறுகிறது.


       குர்ஆனை மனனமிட்டவர்கள் மட்டும் 450 பேர் கொல்லப்பட்டதாக இஸ்லாமோஃபோபியா வலைத்தளங்கள் கூறுவது வடியகட்டிய பொய் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இப்படி ஒரு அறிஞரின் கருத்தை மேற்கோள் காட்டுவதில் கூட நேர்மையற்றவர்கள்தான் இஸ்லாமோஃபோபுகள். மேலும் இமாம் குர்துபி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்
ﻭﻗﺎﻝ اﻟﻘﺮﻃﺒﻲ: ﻗﺪ ﻗﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﺳﺒﻌﻮﻥ ﻣﻦ اﻝﻗﺮاء
  குர்துபீ அவர்கள் கூறியதாவது: யமாமாவில் கொல்லப்பட்டவர்களில் 70 பேர் காரிகள் ஆவர்.(அல் இத்கான் 1/245).
    இந்த கூற்றுதான் இஸ்லாமிய அறிஞர்களின் பெரும்பான்மையினரால் ஏற்கபட்ட கருத்து. இது போக இன்னொரு விஷயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது 450 பேர் கொல்லப்பட்ட யுத்தத்தில் 70 பேர் காரிகள் என்றாலே மக்களில் 7ல் 1 நபர் குர்ஆனை மனனமிட்டவர் என்றாகிவிடும். அன்றைய மொத்த சமூகத்தில் எத்துனை நபர்கள் இருந்திருப்பார்கள் என்ற கணிப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.......அல்லாஹு அஃலம்.

ஆதாரம் 2: உமர்(ரலி) குர்ஆன் ஆயத்தை தேடினார்களா??

           அடுத்ததாக யமாமா யுத்தம் குறித்த செய்தியின் அடிப்படையில் இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும் இதோ.
அல் ஹஸன் அல் பஸ்ரி கூறியதாவது:
                உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார். ( கிதாப் அல் மஸாஹிஃப் 1/60,துர்ருல் மன்சூர் 6/558 , கன்சூல் உம்மால் 2/574 )
                மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு இஸ்லாமோஃபோபுகள், உமர்(ரலி) ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். அது யமாமாவில் கொல்லப்பட்டவருடன் சென்று விட்டது எனவே அது குர்ஆனில் இல்லை. இவ்வாறு குர்ஆனின் பலவசனங்கள் யாமாமாவில் கொல்லப்பட்டவர்களுடன் சென்று விட்டது என்பதால் அல் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அந்த ஹதீஸின் நிலை குறித்து முதலில் பார்ப்போம்.

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺧﻼﺩ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻳﺰﻳﺪ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺒﺎﺭﻙ، ﻋﻦ اﻟﺤﺴﻦ، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻓﻘﻴﻞ ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻓﻘﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ ﻭﺃﻣﺮ ﺑﺎﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻊ، ﻭﻛﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ
அல் ஹஸன் அல் பஸ்ரி கூறியதாவது:
          உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார். ( கிதாப் அல் மஸாஹிஃப் 1/60,துர்ருல் மன்சூர் 6/558 , கன்சூல் உம்மால் 2/574 )
மேற்குறிபிட்ட செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
        1. அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத்
        2. முபாரக் இப்னு ஃபதாலா

1)அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லத் குறித்த விமர்சனம்
            இப்னு ஹிப்பான் அவர்களை தவிர யாரும் இவர் குறித்து பேசவில்லை.
عبد الله بن محمد بن خلاد الواسطي أبو أمية يروى عن يزيد بن هارون ثنا عنه محمد بن يحيى بن لؤي بفم الصلح

        அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத் அல் வாஸ்தீ அபூ  உமியா என்பவர் யஸீத் இப்னு ஹாரூன் என்பவரிடம் இருந்து அறிவிக்கிறார். இவரிடம் இருந்து செவியுற்று முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு லூஐ, அல் சுல்ஹ் வழியாக அறிவிக்கிறார்.( திக்காத் இப்ன் ஹிப்பான் 13916).

    இதிலும் கூட இப்னு ஹிப்பான் இவரது தரம் குறித்து எதுவும் கூறவில்லை. இவரிடம் கேட்டவராக கூறப்படுபவரும் இப்னு ஹிப்பான் அவர்களால் கூறப்பட்டவர் இல்லை. அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஃகல்லாத்  தரம் அறியப்படாதவர் ஆவார்.

2)முபாரக் இப்னு ஃபதாலா குறித்த விமர்சனம்

وقال الدارقطني لين كثيرالخطأ يعتبر به

    முபாரக் இப்னு ஃபதாலா குறித்து தாரகுத்நீ கூறுகையில் பொடும்போக்கானவர். அதிகம் தவறுவிடுபவர் என்று விமர்சிக்கிறார் (தஹ்தீப் அல் தஹ்தீப் 9050). இருட்டடிப்பு செய்பவர் என்று இப்னு ஹஜர் தக்ரீப் அல் தஹ்தீப் 6464 ல் கூறுகிறார்.

இந்த செய்தி குறித்து அறிஞர்களின் கருத்து
ﻓﻀﺎﻟﺔ ﻋﻦ اﻟﺤﺴﻦ ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ، ﻓﻘﻴﻞ: ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻓﻘﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ، ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ، "ﻓﺄﻣﺮ" ﺑﺎﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻊ، ﻓﻜﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻰ اﻟﻤﺼﺤﻒ. ﻭﻫﺬا ﻣﻨﻘﻄﻊ؛ ﻓﺈﻥ اﻟﺤﺴﻦ ﻟﻢ ﻳﺪﺭﻙ ﻋﻤﺮ
    இதே செய்தியை பதிவிட்டு தனது ஃபாதாயில் அல் குர்ஆன்(1/59) மற்றும் முஸ்னத் அல் ஃபாரூக் (2/561) ஆகிய நூல்களில் இப்னு கதீர் அவர்கள் இது அறிவிப்பாளர் முறிந்த செயதி என்றும், இதனை அல் ஹஸன், உமர்(ரலி) அவர்களிடம் செவியுறவில்லை என்றும் கூறுகிறார்.

        இஸ்லாமோஃபோபுகள் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சிக்கும் போதெல்லாம் இந்த நூலில் இருந்து மேற்கோள் காட்டாத கட்டுரைகளே இல்லை எனும் அளவுக்கு அல் சூயூத்தியின் இத்கான் எனும் நூலை கையாண்டிருப்பார்கள். அந்த நூலில் அல் சூயூத்தி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
ﻭﺃﺧﺮﺝ اﺑﻦ ﺃﺑﻲ ﺩاﻭﺩ ﻣﻦ ﻃﺮﻳﻖ اﻟﺤﺴﻦ ﺃﻥ ﻋﻤﺮ ﺳﺄﻝ ﻋﻦ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻓﻘﻴﻞ: ﻛﺎﻧﺖ ﻣﻊ ﻓﻼﻥ ﻗﺘﻞ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﻓﻘﺎﻝ: ﺇﻧﺎ ﻟﻠﻪ! ﻭﺃﻣﺮ ﺑﺠﻤﻊ اﻟﻘﺮﺁﻥ ﻓﻜﺎﻥ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻌﻪ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ. ﺇﺳﻨﺎﺩﻩ ﻣﻨﻘﻄﻊ
      "உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து கேட்டார்கள். யமாமாவில் கொல்லப்பட்ட ஒரு நபரிடம் இருந்ததாக கூறப்பட்டது. உடன் (உமர்(ரலி)) அவர்கள், "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள்," என்று கூறிவிட்டு குர்ஆனை தொகுக்க கட்டளையிட்டார்கள். அவரே முதன் முதலில் குர்ஆனை தொகுத்தவர் ஆவார் என்ற செய்தி இப்னு அபீதாவுத் அவர்கள் அல்ஹஸன் வழியாக அறிவிக்கிறார்கள்.  இது அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தி ஆகும். (அல் இத்கான் 1/205).
    அல் ஸவ்ரி கூறியதாவது: அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் முஸைலமாவுடனான போரின் நாளில் கொல்லப்பட்டனர். குர்ஆனின் அவர்களது ஓதல் முறை அத்துடன் சென்றுவிட்டது. (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13363)
            மேற்குறிபிட்ட செய்தியின் அடிப்படையில், யமாமாவில் குர்ஆன் காரிகள் இறந்து போனதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகள் முவைக்கும் வாதம். அதற்கான பதிலை காண்போம். 

ﻗﺎﻝ اﻟﺜﻮﺭﻱ: ﻭﺑﻠﻐﻨﺎ ﺃﻥ ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻧﻮا ﻳﻘﺮءﻭﻥ اﻟﻘﺮﺁﻥ ﺃﺻﻴﺒﻮا ﻳﻮﻡ ﻣﺴﻴﻠﻤﺔ ﻓﺬﻫﺒﺖ ﺣﺮﻭﻑ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ "
அஸ்ஸவ்ரி கூறியதாவது:
    அல்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் முஸைலமாவுடனான போரின் நாளில் கொல்லப்பட்டனர். குர்ஆனின் அவர்களது ஓதல் முறை அத்துடன் சென்றுவிட்டது என்ற செய்தி மேலும் எங்களுக்கு கிடைத்தது. (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13363)
    இது அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தி (முன்கத்தீ) ஆகும். சுஃப்யான் அஸ்ஸவ்ரி அவர்களுக்கு யார் மூலம் இந்த செய்தி கிடைத்தது என்ற எந்த தகவலும் இல்லை. சுஃபயான் அஸ்ஸவ்ரி ஒரு தபா தாபியீ ஆவார். அதாவது ஸஹாபாக்களை கண்டவர்களை கண்டவர். இவர் யமாமா யுத்தம் நடைபெற்ற காலத்தை சார்ந்தவர் அல்ல. ஆக இந்த செய்தியை இவருக்கு அறிவித்தவர் யார் என்ற எந்த தகவலும் இல்லாத பட்சத்தில் இந்த செய்தி முன்கத்தீ (அறிவிப்பாளர் தொடர் முறித்த செய்தி) எனும் பலவீனமான ஹதீஸ் வகையை சார்ந்தாகும்.

ஆதாரம் 4: குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறிய அல் ஜுஹ்ரி
        அல் ஜுஹ்ரி கூறியதாவது: இறங்கிய குர் ஆனின் பகுதிகளை மனனமிட்ட நபித்தோழர்கள் யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகள் எழுதப்படவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அது அதற்கு பிறகு அறியப்படவில்லை. அபூபக்ரோ, உமரோ , உஸ்மானோ அப்போது குர்ஆனை தொகுத்திருக்கவில்லை. அவ்வாறு காணாமல் போன பகுதிகள் அதனை மனனமிட்டவர்கள் மரணித்த பிறகு யாரும் அவற்றை கொண்டிருக்கவில்லை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது.எனவே என்னை பொறுத்தவரை, இதுவே அவர்களை, குர்ஆனை கவனிக்க செய்தது. நாட்டின் முஸ்லீம்களில், குர்ஆனின் குறிப்பிடப்படும்படியான பகுதியினை கொண்டிருந்த மனிதர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சம்தான் கலிஃபா அபூபகர் அவர்களை குர்ஆனை ஒரே ஏடாக தொகுக்க செய்தது. ( அல் மஸாஹிஃப் 1/99)

            மேற்குறிபிட்ட செய்தியின் அடிப்படையில், யமாமாவில் குர்ஆன் காரிகள் இறந்து போனதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகள் முவைக்கும் வாதம். அதற்கான பதிலை காண்போம்.

நமது பதில்: அல் ஜுஹ்ரியின் முர்ஸல் அறிவிப்பு
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ ﻭﻫﺐ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻳﻮﻧﺲ ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ ﻗﺎﻝ: «ﺑﻠﻐﻨﺎ ﺃﻧﻪ ﻛﺎﻥ ﺃﻧﺰﻝ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ، ﻓﻘﺘﻞ ﻋﻠﻤﺎﺅﻩ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ، اﻟﺬﻳﻦ ﻛﺎﻥﻭا ﻗﺪ ﻭﻋﻮﻩ ﻓﻠﻢ ﻳﻌﻠﻢ ﺑﻌﺪﻫﻢ ﻭﻟﻢ ﻳﻜﺘﺐ، ﻓﻠﻤﺎ ﺟﻤﻊ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻋﻤﺮ ﻭﻋﺜﻤﺎﻥ اﻝﻗﺮﺁﻥ ﻭﻟﻢ ﻳﻮﺟﺪ ﻣﻊ ﺃﺣﺪ ﺑﻌﺪﻫﻢ، ﻭﺫﻟﻚ ﻓﻴﻤﺎ ﺑﻠﻐﻨﺎ، ﺣﻤﻠﻬﻢ ﻋﻠﻰ ﺃﻥ ﻳﺘﺒﻌﻮا اﻟﻘﺮﺁﻥ ﻓﺠﻤﻌﻮﻩ ﻓﻲ اﻟﺼﺤﻒ ﻓﻲ ﺧﻼﻓﺔ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺧﺸﻴﺔ ﺃﻥ ﻳﻘﺘﻞ ﺭﺟﺎﻝ ﻣﻦ اﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻓﻲ اﻟﻤﻮاﻃﻦ ﻣﻌﻬﻢ ﻛﺜﻴﺮ ﻣﻦ اﻝﻗﺮﺁﻥ،
    அல் ஜுஹ்ரி கூறியதாவது: இறங்கிய குர்ஆனின் பகுதிகளை மனனமிட்ட நபித்தோழர்கள் யமாமா யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அந்த பகுதிகள் எழுதப்படவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அது அதற்கு பிறகு அறியப்படவில்லை. அபூபக்ரோ, உமரோ , உஸ்மானோ அப்போது குர்ஆனை தொகுத்திருக்கவில்லை. அவ்வாறு காணாமல் போன பகுதிகள் அதனை மனனமிட்டவர்கள் மரணித்த பிறகு யாரும் அவற்றை கொண்டிருக்கவும்வில்லை,  யாரும் எழுதியிருக்கவும் இல்லை  என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. எனவே என்னை பொறுத்தவரை, இதுவே அவர்களை, குர்ஆனை கவனிக்க செய்தது. நாட்டின் முஸ்லீம்களில், குர்ஆனின் குறிப்பிடப்படும்படியான பகுதியினை கொண்டிருந்த மனிதர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சம்தான் கலிஃபா அபூபகர் அவர்களை குர்ஆனை ஒரே ஏடாக தொகுக்க செய்தது. ( அல் மஸாஹிஃப் 1/99)
        இது முர்ஸல் செய்தி ஆகும். இப்னு ஸிஹாப் அல் ஜுஹ்ரி அவர்களுக்கு யார் மூலம் இந்த செய்தி கிடைத்தது என்ற எந்த தகவலும் இல்லை. அல் ஜுஹ்ரி அவர்கள், இறுதி தலைமுறை தாபியீ ஆவார். இவர் யமாமா யுத்தம் நடைபெற்ற காலத்தை சார்ந்தவர் அல்ல. ஆக இந்த செய்தியை இவருக்கு அறிவித்தவர் யார் என்ற எந்த தகவலும் இல்லாத பட்சத்தில் இந்த செய்தி முர்ஸல் எனும் பலவீனமான ஹதீஸ் வகையை சார்ந்தாகும்.
الشافعي يقول: وإرسال الزهري ليس بشيء ذلك أن نجده يروي عن سليمان بن أرقم.

        ஷாஃபீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது மேலும் ஜுஹ்ரியின் இர்ஸால் (யார் தனக்கு அறிவித்தார் என்ற குறிப்பில்லாத செய்தி) என்பது ஒன்றும் இல்லாதது. அவர் அறிவிப்பது ஸுலைமான் இப்னு அர்கம் என்பவரின் அறிவிப்பு என்பது அறியப்பட்டுள்ளது.(ஸரஹ் இலல் திர்மிதீ 1/535)

       மேலும் ஸுலைமான் இப்னு அர்கம் பலவீனமானவர், கைவிடப்பட்டவர் ஆவார். (தக்ரீப் அல் தஹ்தீப் ப.எண்:249). மேலும் முன்சென்ற செய்தியை அறிவிக்கும்  ஸுஃப்யான் அஸ்ஸவ்ரியும் இவரது மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. (மீஸான் அல் இஹ்திதால் பாகம் 2)

        யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனமிட்ட பலர் கொல்லப்பட்டனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதனால் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்பது மிகைப்படுத்தப்பட்ட பொய். குர்ஆனை மனனமிட்ட நபித்தோழர்களில் பலர் யமாமா யுத்தத்திற்கு பிறகு உயிருடன் இருந்தனர் என்பது குறிபிடத்தக்கது. மனாஹில் அல் இர்ஃபான் என்ற 1/242ல் முஹம்மத் அல் ஜுர்கானி அவர்கள் வேறுபட்ட பல ஹதீஸ்களை ஆய்வு செய்து நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே பின்வரும் நபித்தோழர்கள் குர்ஆனை முழுமையாக கற்றிருந்தனர் என்று கூறுகிறார்.
முஹாஜிர்களில் 1.அபூபகர் அஸ்ஸித்தீக்(ரலி), 2.உமர் இப்னு அல் கத்தாப்(ரலி), 3.உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), 4.அலி இப்னு அபீதாலிப்(ரலி), 5.ஹுதைஃபா(ரலி), 6.அபூஹுரைரா(ரலி), 7.அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 8.அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), 9.அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி), 10.அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி), 11.மூஆவியா(ரலி), 12.அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி), 13.அப்துல்லாஹ் இப்னு ஸாயிப்(ரலி), 14.ஆயீஷா(ரலி), 15.ஹஃப்ஸா(ரலி), 16.உம்மு ஸலாமா(ரலி),
அன்ஸாரிகளில், 17.உபை இப்னு கஅப்(ரலி, 18.முஆத் இப்னு ஜபல்(ரலி), 19.ஸைத் இப்னு ஸாபித்(ரலி),20.அபூ தர்தா(ரலி), 21.முஜம்மிஃ இப்னு ஹாரிஸா (ஜாரியா), 22.அனஸ் இப்னு மாலிக்(ரலி), 23.அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி).
            அபூ ஹுதைஃபா(ரலி) அவர்களது அடிமை ஸாலிம்(ரலி) அவர்களையும் இந்த வரிசையில் முஹம்மத் அல் ஜுர்கானி கூறியுள்ளார். ஆனால் அவர் யமாமாவில் கொல்லப்பட்டுவிட்டதால் அதை நாம் விட்டுவிட்டோம். ஏனையோர் அனைவரும் யமாமாவிற்கு பிறகே இறந்தவர்கள். இல்லாத கருத்துக்களையும், அட்ரஸ் இல்லாத அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்திகளையும் முன்னிறுத்தி குர்ஆனின் பகுதிகள் யமாமா போரில் காணாமல் போய்விட்டது என்று கூறுவது என்பதெல்லாம் ஃபோபியாவால் உருவான மிகைபடுத்தப்பட்ட பொய் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.....அல்லாஹு அஃலம்.

புதன், 28 செப்டம்பர், 2022

உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

        
    குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களின் வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அதிகப்படியான இரண்டு சூராக்களை குர்ஆனின் பகுதியாக கொண்டிருந்தார்கள், அது இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் அதற்கான பதிலையும்  பார்ப்போம்.
عَنِ ابْن سِيرِينَ، قَالَ: كَتَبَ أُبَيُّ بْنُ كَعْبٍ فِي مُصْحَفِهِ فَاتِحَةَ الْكِتَابِ وَالْمُعَوِّذَتَيْنِ، وَاللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ، وَاللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ

இப்னு ஸீரின் கூறியதாவது, "உபை இப்னு கஅப்(ரலி) அவரது முஸ்ஹஃபில் அல் ஃபாத்திஹா, அல் முஅவ்விததைன் (113 மற்றும் 114 ஆகிய சூராக்கள்) அல்லாஹும்ம இன்னா நஸ்தயீனுக்க( அல் ஃஹலா) ,அல்லாஹும்ம இய்யாக நஃபுது (அல் ஹஃப்த்) ஆகியவற்றை எழுதியுள்ளார்கள். (நூல்:அபூ உபைத்யின் ஃபதாயில் அல் குர்ஆன் 1/318, அஸ்ஸுயூத்தியின் இத்கான் 1/226)


இஸ்லாமோஃபோபுகளின் வாதம்:

    மேற்குறிப்பிட்ட ஆதாரத்தின் அடிப்படையில் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் ஸூரத் அல்ஹஃப்த் மற்றும் ஸூரத் அல்ஃஹலா ஆகிய இரண்டு ஸூராக்கள் அதிகப்படியாக உள்ளன. இன்றைய குர்ஆனில் அது இடம்பெறவில்லை. ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம்.


        இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த ஆதாரத்தை ஆய்வு செய்வதற்கு முன்பு உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த ஒரு அடிப்படை தகவலை நாம் அறிந்து கொள்வோம். அரைகுறை ஓரியண்டலிஸ்ட் ஆர்தர் ஜெஃப்ரியின் நூலினை தொழுரிக்கும் போது முழுமையாக விளக்குவோம் இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக இந்த கட்டுரையின் தேவை கருதி ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு பதிகிறோம்.

               உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்பது உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தின் இறுதி அதாவது ஹிஜ்ரி 30க்குள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்படுவிட்டது.. அதனை பின்வரும் செய்தி நமக்கு தெளிவாக கூறுகிறது.
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ )ﻭﻫﺐ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺑﻜﻴﺮ: ﺣﺪﺛﻨﻲ ﺑﺴﺮ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺃﻥ §ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺪﻣﻮا ﺇﻟﻴﻪ ﻓﻘﺎﻟﻮا: ﺇﻧﻤﺎ ﺗﺤﻤﻠﻨﺎ ﺇﻟﻴﻚ ﻣﻦ اﻟﻌﺮاﻕ، ﻓﺄﺧﺮﺝ ﻟﻨﺎ ﻣﺼﺤﻒ ﺃﺑﻲ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ: " ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ ﻗﺎﻟﻮا: ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﺃﺧﺮﺟﻪ ﻟﻨﺎ ﻗﺎﻝ: ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ "
 பஸ்ர் இப்னு ஸயீத் கூறியதாவது: 
            இராக் வாசிகளில் சிலர் முஹம்மத் இப்னு உபை (உபை(ரலி) அவர்களது மகன் முஹம்மத்) அவர்களிடம் வந்து " நாங்கள் இராக்கில் இருந்து வருகிறோம். எங்களிடம் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃபை கொண்டு வாருங்கள் " என்று கூறினார்கள். அதற்கு முஹம்மத் அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ," அல்லாஹ் தூயவன். அதை எங்களிடம் கொண்டு வாருங்கள்", என்றனர். அதற்கு (முஹம்மத்) அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள்.
(மஸாஹிஃப் இப்னு அபீ தாவூத் 1/103)
    உபை இப்னு கஅப்(ரலி), ஸைத்(ரலி) ஆகியோரை உள்ளடக்கிய குர்ஆன் தொகுப்புக்குழுவின் அறிவுறைப்படி இவ்வாறு கைப்பற்றபட்ட முஸ்ஹஃப்களை உஸ்மான்(ரலி) அழிக்க உத்தரவிட்டார்கள என்பது நாம் அறிந்ததே. எனவே உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பும் ஹி.30 க்குள் அழிக்கப்பட்டுவிட்டது. இப்னு அபீதாவுத் அவர்களது மஸாஹிஃப் என்ற நூலில் இருந்து பல ஆதாரங்களை தூக்கித்திரியும் இஸ்லாமோஃபுகளின் கண்களில் இது போன்ற ஆதாரங்கள் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2. மேலே கூறப்படும் ஆதாரங்களில் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை கண்டாதாக கூறும் அஸ்ரா, மைமூன் இப்னு மஹ்ராம் மற்றும் ஹம்மாத் இப்னு ஸலாமா ஆகியோர் அனைவருமே ஹி 30 பிறகு பிறந்தவர்கள். இப்னு ஸீரின் அவர்களுக்கு அதிகபட்சம் ஹி.30ல். இரண்டு வயது. ஆகவே இவர்கள் நிச்சயம் பார்த்தது உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் அல்ல. ஹி.30க்கு முன்பாகவே உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் அழிக்கப்பட்டுவிட்டது.

3. அதே போல மேற்குறிபிட்ட ஒவ்வொரு ஆதாரங்களிலும் ஸூரத் அல் ஹ்ஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்களின் வாசகமும் மாறுபட்டு உள்ளது. எனவே இவர்கள் கண்ட முஸ்ஹஃப்புகள் ஒரே முஸ்ஹஃப் அல்ல. உபை (ரலி) அவர்களது பெயரால் இட்டுகட்டபட்ட முஸ்ஹஃப்புகள் என்பது இதன் மூலம் விளங்குகிறது. அறிவிப்பாளர்கள் இதனை தவறாக உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று எண்னிக்கொண்டார்கள் என்பது விளங்குகிறது.

4. இன்றைய குர்ஆன் என்பதே உபை(ரலி) மற்றும் ஸைத்(ரலி) ஆகியோரின் ஓதல் எனும் போது, அதில் ஸூரத் அல் ஹஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் இடம் பெறவில்லை என்பது, அறிவிப்பாளர்கள் கண்ட முஸ்ஹஃப்கள் உபை(ரலி) அவர்களுடையது அல்ல என்பதை உறுதி படுத்துகிறது.

5. இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக பின்வரும் செய்தி இடம்பெறுகிறது.
ﻗﺎﻝ ﺃﺑﻮ اﻟﺤﺴﻦ ﻋﻠﻲ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ اﻷﺷﻌﺮﻱ: "ﻭﻗﺪ ﺭﺃﻳﺖ ﺃﻧﺎ ﻣﺼﺤﻒ ﺃﻧﺲ ﺑﺎﻟﺒﺼﺮﺓ ﻋﻨﺪ ﺑﻌﺾ ﻭﻟﺪ ﺃﻧﺲ، ﻓﻮﺟﺪﺗﻪ ﻣﺴﺎﻭﻳﺎ ﻟﻣﺼﺤﻒ اﻟﺠﻤﺎﻋﺔ ﻻ ﻳﻐﺎﺩﺭ ﻣﻨﻪ ﺷﻴﺌﺎ" ﻭﻛﺎﻥ ﻳﺮﻭﻯ ﻋﻦ ﻭﻟﺪ ﺃﻧﺲ ﻋﻦ ﺃﻧﺲ ﺃﻧﻪ ﺧﻂ ﺃﻧﺲ ﻭﺇﻣﻼء ﺃﺑﻲ،

அபூ அல்ஹஸன் அல் அஸ்அரி கூறியதாவது:
                    நான் அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை பஸராவில் அவரது வழிதோன்றல்களிடம் கண்டேன். இன்றைய முஸ்ஹஃப்புடன் எந்த மாற்றமுமின்றி அது சரியாக ஒத்திருப்பதை கண்டேன். மேலும் இது உபை(ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனஸ்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது என்று அவரது வழித்தோன்றல்கள் கூறினார்கள்.(அல் இன்திஸார் 1/277)

6.மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலை அடிப்படையாக கொண்டே ஆறு முத்தவாத்திரான கிராத் ஒன்றிலும் இந்த அதிகப்படியான இந்த  இரண்டு ஸூராக்கள் இடம்பெறவில்லை

         மேற்குறிபிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் ஸூரத் அல் ஹஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் இடம் பெற்றிருந்தன என்பதற்கு எந்த உறுதியான தகவலும் இல்லை என்பது இங்கு நிறுவப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஸூரத் அல் ஹ்ஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் குர்ஆனின் பகுதியில்லை என்பதை உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை உள்ளடக்கிய குழுவால் தொடுக்கப்பட்ட இன்றைய குர்ஆனும் அவரது ஓதலை அடிப்படையாக கொண்ட ஆறு முத்தவாத்தீரான கிராத்களும் சந்தேகமின்றி உறுதிபடுத்துகிறது.  எனவே ஸூரத் அல் ஹ்ஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் இடம் பெறாததால் இன்றைய குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகளின் குருட்டு வாதம் என்பது உறுதியாகியுள்ளது. அல்லாஹு அஃலம்.


உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் ஓதலில் உமர்(ரலி) அவர்கள் சில பகுதிகளை விட்டு விட்டதாக கூறுகிறார்கள். என்வே உபை இப்னு கஅப்(ரலி) அல்லாத நபித்தோழர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட குர்ஆன்தான் இன்றிருப்பது என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.

ஆதாரங்களும் விமர்சனங்களும்

ஆதாரம் 1: அல்குர்ஆனை உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
         இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புஹாரி 3806)

ஆதாரம் 2: உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்ற உமர்(ரலி) அவர்களது கருத்து

உமர்(ரலி) அறிவித்தார்.
         எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். (புஹாரி 4481)
மேற்குறிபிட்ட ஆதாரங்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதம்:

            நபி(சல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட குர்ஆன் ஆசிரியரான உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்று உமர்(ரலி) கூறுகிறார். எனவே உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலின் மீது அமையாத இன்றைய குர்ஆன் நபி(சல்) அவர்களின் ஓதலில் அமையவில்லை. எனவே குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பதே இஸ்லாமோஃபோபுகளின் வாதம் ஆகும். இன் ஷா அல்லாஹ் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கான விளக்கத்தை காண்போம்.

உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள்

            முன்சென்ற தொடரில் இதே அறிவிப்பானது ((புஹாரி 3806) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் குர்ஆனை கற்றுக்கொடுக்க இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் நபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர் என்பதனை கூறுவதாக குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் இடம் பெறும் ஒவ்வொரு நபித்தோழர்களும் இதே நிலையில் இருப்பவர்கள்தான். ஆனால் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே குர்ஆனை முழுமையாக கற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகிறன.

கதாதா(ரஹ்) அறிவித்தார்.
                இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ

ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது:                                              
    நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸகரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது. ( மஜ்ம உல் கபீர் 2092)

                மேற்குறிபிட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் காணும் போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே முழு குர்ஆனையும் கற்றிருந்தார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆன் தொகுப்பு குழுவிலும் நியமித்தார்கள் என்பதை பின்வரும் செய்தி கூறுகிறது.
أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنبأ أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد قال وأنا محمد بن عمر حدثني هشيم عن المغيرة عن مجاهد أن عثمان أمر أبي بن كعب يملي ويكتب زيد بن ثابت ويعربه سعيد بن العاص وعبد الرحمن بن الحارث
முஜாஹித்(ரஹ்) கூறியதாவது:
        உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) அவர்களை ஓதவும், அதை ஜைத் இப்னு தாபித்(ரலி) அவர்கள் எழுதவும் , அதை ஸயீத் இப்னு அல் ஆஸ்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அல் ஹாரித்(ரலி) அவர்களை பிரதி எடுக்கவும் கட்டளை இட்டார்கள் (தாரிக் திமிஸ்க் 34/276:3779)

அதனால்தான் மேற்குறிப்பிட்ட செய்தியை ஒத்த செய்தியை அலி இப்னு அப்துல் மாலிக் தனது நூலான கன்சூல் உம்மாலில் பதிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
عن عطاء أن عثمان بن عفان لما نسخ القرآن في المصاحف أرسل إلى أبي بن كعب، فكان يملي على زيد بن ثابت وزيد يكتب ومعه سعيد بن العاص يعربه، فهذا المصحف على قراءة أبي وزيد.

அதாஃ அவர்கள் கூறியதாவது:                             
    உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுத்த போது, உபை இப்னு கஅப்(ரலி)யை அழைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் ஓதிக்காண்பிக்கவும்,அதை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) எழுதவும் கட்டளை இட்டார்கள். அவருடன் ஸயீத் (ரலி) அவர்களும் அதை செய்தார்கள். அதனால் இந்த முஸ்ஹஃப் உபை மற்றும் கஅப் அவர்களது ஓதலில் அமைந்ததாகும் .(கன்சூல் உம்மால் 4789)

            மேலே நாம் குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் முன்சென்ற தொடர்களில் வேறு பல கட்டுரைகளில் கண்டவைதான். எனவே இன்றைய குர்ஆன் என்பது உபை இப்னு கஅப்(ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரின் ஓதலில் அமைந்த குர்ஆன் எனும் போது இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் " உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலின் மீது அமையாத இன்றைய குர்ஆன் நபி(சல்) அவர்களின் ஓதலில் அமையவில்லை" என்ற வாதம் அர்த்தமற்றது.

    நிலை இப்படியிருக்க, உமர்(ரலி) அவர்கள் "நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம்.” என்று கூறுவதின் பொருள் என்ன என்பதையும் இப்போது காண்போம்.

முதலில் உமர்(ரலி) அவர்களால் அறிவிக்கப்படும் அந்த ஹதீஸை பார்ப்போம்.

உமர்(ரலி) அறிவித்தார்.
                   எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.(புஹாரி 4481)
             மேற்குறிபிட்ட செய்தியில் உபை(ரலி) அவர்களது சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்று உமர்(ரலி) கூறுவதன் காரணமும் முழுமையாக பதியப்பட்டுள்ளது. ஆகவே குர்ஆனில் அல்லாஹ்வால் எடுத்துக்கொள்ளப்பட்ட அல்லது மாற்றப்பட்ட சொற்களையும் உபை(ரலி) அறிவிப்பார் அந்த சொற்களை நாங்கள் விட்டுவோம் என்று உமர்(ரலி) கூறுகிறார்கள். மேலும் உபை(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகிய இருவருக்கும் மத்தியில் நிகழ்ந்த சில கருத்துரையாடல்களை இங்கு பதிவிட்டு விளக்கினால் உமர்(ரலி) அவர்கள் எந்த பொருளில் கூறுகிறார் என்பதும், உபை(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்புக்குழுவில் இடம்பெற்றும் உபை(ரலி) அவர்களது ஓதல் என்று ஹதீஸ்களில் காணப்படும் சில வசனங்களின் மிகைபடுத்துதல் ஏன் இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதும் விளங்கும்.

சம்பவம் 1: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது ஓதலை எழுத கூறிய உபை(ரலி)
حَدَّثَنَا عَمْرُو بْنُ قُسْطٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، وَغَيْرُهُ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، أَنَّ أَبَا الدَّرْدَاءِ، وَأَصْحَابًا لَهُ خَرَجُوا بِمُصْحَفِهِمْ حَتَّى قَدِمُوا الْمَدِينَةَ يُثْبِتُونَ حُرُوفَهُ عَلَى عُمَرَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ يَقْرَأُ عَلَيْهِمْ آيَ {إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ} [الفتح: 26] (وَلَوْ حَمَيْتُمْ كَمَا حَمَوْا لَفَسَدَ الْمَسْجِدُ الْحَرَامُ).........فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا أُبَيُّ، اقْرَأْ. فَقَرَأَ كَمَا أَخْبَرُوهُ فَقَالَ: يَا زَيْدُ، اقْرَأْ. فَقَرَأَ قِرَاءَةَ الْعَامَّةِ فَقَالَ عُمَرُ: اللَّهُمَّ لَا عِلْمَ إِلَّا كَمَا قَرَأْتَ فَقَالَ أُبَيٌّ: أَمَا وَاللَّهِ يَا عُمَرُ إِنَّكَ لَتَعْلَمُ أَنِّي كُنْتُ أَحْضُرُ وَيَغِيبُونَ،وَإِنْ شِئْتَ لَا أَقْرَأْتُ أَحَدًا آيَةً مِنْ كِتَابِ اللَّهِ،وَلَا حَدَّثْتُ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: اللَّهُمَّ غَفْرًا، قَدْ جَعَلَ اللَّهُ عِنْدَكَ عِلْمًا، فَأَقْرِئِ النَّاسَ وَحَدِّثْهُمْ. قَالَ: فَكَتَبُوهَا عَلَى قِرَاءَةِ عُمَرَ وَزَيْدٍ "
அபீ இத்ரீஸ் கூறியதாவது, 
      "அபூதர்தா(ரலி)யும் அவர்களது தோழர்களும் அவர்களது குர்ஆன் பிரதிகளுடன், உமர்(ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரிடம் தங்களது எழுத்துக்களை உறுதி செய்ய மதீனா மாநகரத்திற்கு வந்தார்கள். உபை இப்னு கஅப்(ரலி) "(ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்தியபோது, அவர்கள் வைராக்கியம் கொண்டது போல் நீங்களும் வைராக்கியம் கொண்டால் மஸ்ஜித் அல் ஹரம் பாழ்படுத்தப்பட்டிருக்கும் (அல்குர்ஆன் 48:26) என்று ஓதினார்கள்........ உமர்(ரலி), "உபையே! நீங்கள் ஓதுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போல ((உபை(ரலி))அவர்கள் ஓதினார்கள். பிறகு உமர்(ரலி) அவர்கள்" ஸைத்தே! நீங்கள் ஓதுங்கள்", என்று கூறினார்கள். கிராத் அல் ஆம்மா (பெரும்பான்மை ஓதல்)-ஐ ஸைத்(ரலி) ஓதினார்கள். பிறகு (உபை அவர்களிடம்) "அல்லாஹ்வின் மீதானையாக நீங்கள் ஓதியதை போன்று நான் அறியவில்லையே",என்று கூறினார்கள். அதற்கு உபை(ரலி) “அல்லாஹ்வின் மீதானையாக, நான் (நபி(ஸல்) அவர்களிடம்) இருந்த தருணங்களில் நீங்கள் இல்லாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கூறினீர்கள் என்றால் நான் அல்லாஹ்வின் வேதத்தின் ஒரு ஆயத்தையும் ஓத மாட்டேன், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸையும் அறிவிக்கவும் மாட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், "அல்லாஹ் பிழைபொறுப்பவன், அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தை அளித்துள்ளான். எனவே மக்களுக்கு ஓதிக்காட்டுங்கள், ஹதீஸ்களையும் அறிவியுங்கள்", என்று கூறிவிட்டார்கள். " உமர்(ரலி) மற்றும் ஸைத்(ரலி) ஆகியோரின் ஓதலை எழுதிக்கொள்ளுங்கள்" என்று (உபை(ரலி)) கூறிவிட்டார்கள்.....(இப்னு ஸப்பா அவர்களது தாரிக் அல் மதீனா 2/709-710)
சம்பவம் 2: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது ஓதலை சரிகண்ட உபை(ரலி)
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻐﻔﺎﺭ ﺑﻦ ﺩاﻭﺩ، ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ، ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ، ﻋﻦ ﺑﺠﺎﻟﺔ، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ، ﻣﺮ ﺑﺮﺟﻞ ﻳﻘﺮﺃ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ (اﻟﻨﺒﻲ ﺃﻭﻟﻰ ﺑﺎﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻣﻦ ﺃﻧﻔﺴﻬﻢ ﻭﺃﺯﻭاﺟﻪ ﺃﻣﻬﺎﺗﻬﻢ، ﻭﻫﻮ ﺃﺑﻮﻫﻢ) ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ: ﻻ ﺗﻔﺎﺭﻗﻨﻲ ﺣﺘﻰ ﻧﺄﺗﻲ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ . ﻓﺄﺗﻴﺎ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺃﺑﻲ، ﺃﻻ ﺗﺴﻤﻊ ﻛﻴﻒ ﻳﻘﺮﺃ ﻫﺬا ﻫﺬﻩ اﻵﻳﺔ؟ ﻓﻘﺎﻝ ﺃﺑﻲ: ﻛﺎﻧﺖ ﻓﻴﻤﺎ ﺃﺳﻘﻂ .

பஜாலா கூறியதாவது:   

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் ஒரு மனிதரை கடந்து செல்லும் போது குர்ஆன் பிரதியில் இருந்து "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். அவர் அவர்களுக்கு தந்தையாவார்" (அல்குர்ஆன் 33:6), (அவர் அவர்களுக்கு தந்தையாவார் என்பது அதிகமாக இடம்பெற்றுள்ளது) என்று ஓதுவதை செவியுற்றார்கள். உடனே, உமர்(ரலி) அவர்கள், " நாம் உபை இப்னு கஅப்பிடம் செல்லும் வரை எங்கும் சென்று விடாதே" என்று கூறினார்கள். அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) யிடம் சென்றவுடன் உமர்(ரலி), “ உபையே !இந்த மனிதர் ஓதியதை கேட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உபை(ரலி), “நான் கவனக்குறைவாக இருந்த போது ஏற்பட்டுவிட்டது" என்று பதிலளித்தார்கள். (ஃபாதாயில் அல் குர்ஆன் 1/322)

        இதே செய்தி ‘ அந்த மனிதர் "உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் இவ்வாறே இருந்தது" என்று கூறினார் என்பது உள்ளிட்ட அதிகப்படியான தகவலுடன் முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 18748ல் பதியப்பட்டுள்ளது.

மேற்குறிபிட்ட செய்திகளை பார்க்கும் போது, பின்வரும் முடிவுகளை நாம் பெறமுடியும்
      
     1. உபை(ரலி) அவர்களது ஓதலில் இருக்கும் அதிகப்படியான சொற்கள் நபி(சல்) அவர்களால் ஆரம்ப காலத்தில் ஓதிக்காண்பிக்கப்பட்டது. உபை(ரலி) அவர்களது ஓதலில் இருக்கும் அதிகப்படியான சொற்கள் கிராத் அல் ஆம்மா அல்லது கிராத் அல் ஆகிராவில் இடம் பெறவில்லை. ஆகவே கிராத் அல் ஆகிராவில் இடம் பெறாத அதிகப்படியான சொற்களையே உமர்(ரலி) விட்டுவிட கூறுகிறார்கள்.

    2. நபி(சல்) அவர்களால் இறுதியாக ஸைத் இப்னு ஸாபித்(ரலி)யிடம் கூறப்பட்ட கிராத்தே (கிராத் அல் ஆம்மா) முஸ்ஹஃப்பில் இடம்பெற தகுதிவாய்ந்த அதிகாரப்பூர்வ கிராத், என்பதே நபி(சல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட, நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே குர்ஆன் ஓதலை முழுமையாக கற்ற உபை(ரலி) அவர்களது முடிவாகும். அதனால்தான் உபை(ரலி) அவர்களது ஓதல் என்று ஹதீஸ்களில் காணப்படும் சில வசனங்களின் மிகைபடுத்துதல் இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை. அல்லாஹூ அஃலம்.  

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ        குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கு தொடர்ச்சியாக இந்த தொடரின் ஊடாக பதிலளிக்கப்பட்டுவருகிறது. அந்த வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் இன்றிருக்கும் குர்ஆனின் சில சூராக்களை குர்ஆனின் பகுதியாக ஏற்கவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் முதலில் பார்ப்போம்.

ஆதாரம் 1:
أخبرنا : محمد بن الحسن بن مكرم بالبصرة قال: ، حدثنا : داود بن رشيد قال : ، حدثنا : أبو حفص الأبار ، عن منصور ، عن عاصم بن أبي النجود ، عن زر بن حبيش قال: لقيت أبي بن كعب فقلت له: إن بن مسعود كان يحك المعوذتين من المصاحف ويقول: أنهما ليستا من القرآن فلا تجعلوا فيه ما ليس منه

            உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை சந்தித்து, "இப்னு மஸ்வூத் (ரலி) அல்முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல, அதன் பகுதியல்லாதவற்றை அதில் சேர்க்க வேண்டாம் என கூறி அவற்றை முஸ்ஹஃப்பில் இருந்து அழிக்கிறார்" என்று கூறினேன்.         (அறிவிப்பாளர்: ஸிர்ரு இப்னு ஹுபைஷ், நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 4429)
ஆதாரம் 2:
            இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தனது முஸ்ஹஃப்பில் அல் ஃபாத்திகா மற்றும் அல் முஅவ்விததைன் சூரக்களை எழுதவில்லை என்று அல்சூயூத்தி அவர்களது இத்கான், துர்ருல் மன்சூர் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இஸ்லாமோஃபோபுகளால் முன்வைக்கப்படும் வாதம்:

            இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களாலேயே குர்ஆனின் பகுதியல்ல என்று மேற் குறிப்பிடப்பட்ட அல்முஅவ்விததைன் ((113, 114 ஆகிய சூரக்கள்) மற்றும் அல் ஃபாத்திஹா ஆகிய சூராக்கள் இன்றைய குர்ஆனில் உள்ளது. எனவே குர்ஆனில் அதிகப்படுத்துதல் ஏற்பட்டிருப்பதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பதே இஸ்லாமோஃபோபுகளின் மேற்குறிபிட்ட ஆதாரங்கள் அடிப்படையிலான வாதம் ஆகும். இன்ஷா அல்லாஹ் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கான பதிலை காண்போம்.

நமது பதில்:

        மேற்குறிபிட்ட ஆதாரம் 1ம் அதை போல் இருக்கும் ஏனைய ஆதாரங்களின் நம்பகத்தன்மை மற்றும் அதன் அறிவிப்பாளர்கள் குறித்த விமர்சனத்தை இங்கு பதிவிட்டு அதன் நிலையை விளக்கினாலே மேற்குறிபிட்ட இஸ்லாமோஃபோபுகளின் வாதம் எவ்வளவு பலவீனமானது என்பதை விளங்க போதுமானதாக இருக்கும்.
        இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் அல்முஅவ்வித்தைன் (113 மற்றும் 114) சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுவதாக இடம் பெறும் அறிவிப்புக்கள் இரண்டு அறிவிப்பாளர்கள் 1.அபூ இஸ்ஹாக் மற்றும் 2.ஸிர்ரு இப்னு ஹுபைஷ் வழியாக பின்வருமாரு இடம் பெறுகிறது.மேற்குறிபிட்ட இவ்விரு அறிவிப்பாளர்கள் குறித்து சிறு விளக்கம்:


1. அபூ இஸ்ஹாக்
ﺃﺑﻲ ﺇﺳﺤﺎﻕ اﻟﺴﺒﻴﻌﻲ ﺃﺣﺪ اﻷﻋﻼﻡ اﻷﺛﺒﺎﺕ ﻗﺒﻞ اﺧﺘﻼﻃﻪ ﻭﻟﻢ ﺃﺭ ﻓﻲ اﻟﺒﺨﺎﺭﻱ ﻣﻦ اﻟﺮﻭاﻳﺔ ﻋﻨﻪ ﺇﻻ ﻋﻦ اﻟﻘﺪﻣﺎء ﻣﻦ ﺃﺻﺤﺎﺑﻪ ﻛﺎﻟﺜﻮﺭﻱ ﻭﺷﻌﺒﺔ ﻻ ﻋﻦ اﻟﻤﺘﺄﺧﺮﻳﻦ ﻛﺎﺑﻦ ﻋﻴﻴﻨﺔ ﻭﻏﻴﺮﻩ
        அபூ இஸ்ஹாக் அஸ் ஸுபையீ குழப்பம் ஏற்படுவதற்கு முன்பு நல்ல அறிஞராக இருந்தார். அல் புகாரியில் அவரிடம் இருந்து அவரது முற்கால தோழர்களான அஸ் ஸவ்ரி, ஸுஅபா போன்றவர்கள் அறிவித்தவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. பிறகாலத்தவர்களாகிய இப்னு உயைனா மற்றும் ஏனையோர் அறிவித்தவை இடம் பெறவில்லை....(ஃபத்ஹுல் பாரி 1/431)
قال بن الصلاح اختلط أبو إسحاق اختلط أبو إسحاق ويقال إن سماع سفيان بن عيينة منه بعدما اختلط وتغير حفظه قبل موته
இப்னு ஸலாஹ் கூறியதாவது :
            அபூ இஸ்ஹாக் குழம்பி போனவர். மேலும் கூறினார்கள்: இவரிடம் இருந்து ஸுஃப்யான் இப்னு உயயைனா இவருக்கு குழப்பம் ஏற்பட்ட பிறகு செவியேற்றவர். மரணத்திற்கு முன்பு இவரது நினைவாற்றல் தவறிவிட்டது. (அல் கவாகிப் அல் நய்யிராத் 1/349)
قرأ أبو إسحاق السبيعي القرآن على الأسود بن يزيد النخعي وأبي عبد الرحمن السُلميّ، وقد قرأ عليه القرآن عرضًا حمزة بن حبيب الزيات. وكان يقرأ القرآن كاملاً كل ثلاثة أيام.
        அபூ இஸ்ஹாக், அல் அஸ்வத் இப்னு யஸீத் அன் நகயீ மற்றும் அபூ அப்தி ரஹ்மான் அஸ்ஸுலாமி, ஆகியோரின் ஓதலை ஓதக்கூடியவர். இவரின் ஓதலை ஹம்ஸா இப்னு ஹபீப் அல் ஜய்யாத் ஓதினார். இவர் மூன்று நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதிவிடுபவர்.(ஸியார் உல் ஆலம் உல் நுபுலா 5/ 392-401)

மேற்குறிபிட்ட அபூ இஸ்ஹாக் குறித்த விமர்சனங்களை ஆய்வு செய்தால் பின்வரும் நிலைபாட்டை இவரது ஹதீஸ்களில் எடுக்க முடியும்.


1. இவர் ஒரு காரீ. குர்ஆனை முழுமையாக 3 நாட்களில் ஓதும் அளவிற்கு கிராத்தில் புலமை மிக்கவர். இவரது ஓதல் கிராத் அல் ஹம்ஸா என்ற முத்தவாதீர் கிராத் ஆகும். முத்தவாதீர் கிராத் என்பது ஒவ்வொரு தலைமுறையினராலும் சரிகாணப்பட்ட ஓதல் முறை ஆகும்.

2. இவரது ஹதீஸ்களை பொறுத்தவரை இவரது இறுதி காலத்தில் கூஃபாவாசிகளிடம் அறிவித்துள்ளார். அதில் இமாம் புஹாரி அவர்கள் தனது ஸஹீஹ் புகாரியில் முற்கால தோழர்களான அஸ் ஸவ்ரி, ஸுஅபா போன்றவர்கள் அறிவித்த அறிவிப்புக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த விமர்சனத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஆதாரத்தின் அறிவிப்பாளர் தொடர் 1-ஐ ஆய்வுக்கு உட்படுத்தினால் அபூ இஸ்ஹாக்கின் கூஃபாவாசிகள் வழியாக வரும் அறிவிப்புகள் ஸஹீஹ் புகாரியில் பின்வரும் எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அ). சுஅபா வழியாக 56 ஹதீஸ்கள், ஸுஃப்யான் அஸ் ஸவ்ரி வழியா 16 ஹதீஸ்கள், அல் அஹ்வஸ் வழியாக 5 ஹதீஸ்கள்

ஆ). ஸுலைமான் அல் அஃமஸ் வழியாகவும், அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் வழியாகவும் எதுவும் இடம் பெறவில்லை.
        எனவே மேற்குறிபிட்ட விளக்கத்தின் அடிப்படையில் அபூ இஸ்ஹாக்கின் அறிவிப்புக்கள் கூஃபாவாசிகள் வழியாக வரும் போது ஒன்று அவை அவரது முத்தவாதீர் கிராத்துடன் ஒற்றமைந்து இருக்க வேண்டும், அல்லது கூஃபா வாசிகளில், இவரது மாணவர்களில், முற்காலத்தவர்கள் என்று இமாம் புஹாரி அவர்களால் தரப்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அளவீட்டிலும் பொருந்தாத செய்திகள் மறுக்கப்படும் பலவீன்மான செய்திகளாகும்.

        எனவே மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் வேறுபட்ட பல கிரந்தங்களில் இடம் பெறும் இது குறித்த ஏற்கப்பட்ட ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்            மேற்குறிபிட்ட ஹதீஸ்களில் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள், அவர்களால் எழுதப்படாதவற்றை, அவர்களது முஸ்ஹஃப்பில் எழுதுவதை தடுத்தார்கள் என்று இடம் பெறுகிறது. குர்ஆனின் சேர்கக்கூடாது என்று இடம் பெறவில்லை.

        அதேபோல் மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் வேறுபட்ட பல கிரந்தங்களில் இடம் பெறும் இது குறித்து ஏற்கப்படாத ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்.


            மேற்குறிப்பிட்ட அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் வழியாக இடம் பெறும் ஹதீஸ் அறிவிப்பு அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் அவர்களால் மேலும் பலவீனமடைகிறது. இப்னு அபீ ஹாத்தம் அல் ராஸீ தனது ஜரஹ் வல் தஹ்திலில் கூறும் போது (பாகம் 6 பக்கம் 10 ) அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் பலவீனமானவர் என்று கூறுகிறார். எனவே அபூ இஸ்ஹாக் வழியாக வரும் ஹதீஸ்களில் ஏற்கப்படாத கூஃபா வாசிகளின் அறிவிப்பில் மட்டுமே அல்லாஹ்வின் வேதத்தில் அல்லது குர்ஆனில் இல்லாதவற்றை சேர்க்கக்கூடாது என்று இடம் பெறுகிறது. இவரது கிராத்தின் அடிப்படையிலும் இவரது செய்தியை தரப்படுத்த இயலும் அடுத்த அறிவிப்பளாரான ஆஸீம் இப்னு பஹ்தலா அவர்கள் குறித்த விமர்சனத்தையும் பார்த்து விட்டு அதையும் பதிவோம்.

2. அஸீம் இப்னு பஹ்தலா:
عاصم بن بهدلة وهو بن أبي النجود بنون وجيم الأسدي مولاهم الكوفي أبو بكر المقريء صدوق له أوهام حجة في القراءة وحديثه في الصحيحين مقرون من السادسة 
        ஆஸிம் இப்னு பஹ்தலா அவர் இப்னு அபீ நஜுத் என்பவராவார். இவரது கிளையார் அல் அஸத் கோத்திரதாரின் உதவியாளர்கள் ஆவர். இவரது ஆசிரியர் அல் கூஃபி அபூ பகர் அல் மக்ரிஃ ஆவார். உண்மையாளர் ஆனால் தவறிழைப்பவர். ஓதலில் நம்பகதன்மையுடையவர்.மேலும் இரண்டு சஹீஹிலும் இவரது ஹதீஸ்கள் ஒத்தமைந்தவைளுடன் உள்ளன. (தக்ரீப் அல் தஹ்தீப், ப.எண்:285)

மேற்குறிபிட்ட ஆஸிம் இப்னு பஹ்தலா குறித்த விமர்சனங்களை ஆய்வு செய்தால் பின்வரும் நிலைபாட்டை இவரது ஹதீஸ்களில் எடுக்க முடியும்.

1. முன்சென்றவர் போலவே இவரும் காரீ. இவரது கிராத் - கிராத் அல் ஹஃப்ஸ் என்ற முத்தவாதீர் கிராத் ஆகும். முத்தவாதீர் கிராத் என்பது ஒவ்வொரு தலைமுறையினராலும் சரிகாணப்பட்ட ஓதல் முறை ஆகும்.

2. இவரது ஹதீஸை பொறுத்தவரை ஹதீஸ்களில் தவறிழைப்பவர். இவரது ஹதீஸை வேறு ஒரு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரை கொண்ட ஹதீஸ் உறுதி படுத்தும் என்றிருந்தால் இவரது செய்தி ஏற்கப்படும்.

            எனவே மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் ஸஹீஹ் புகாரியில் இடம் பெறும் இது குறித்த ஏற்கப்பட்ட ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்.
அதேபோல் மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் வேறுபட்ட பல கிரந்தங்களில் இடம் பெறும் இது குறித்து ஏற்கப்படாத ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்.


        எனவே இவர் மட்டுமே தனித்து அறிவிக்கும், எந்த ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸாலும் உறுதி படுத்த முடியாத, ஏற்க்கபப்படாத ஹதீஸ்களில் மட்டுமே "குர்ஆனில் இல்லாதவற்றை சேர்க்கக்கூடாது" என்ற வாசகம் இடம் பெறுகிறது.

                மேலும் இவ்விருவரின் ஓதலின் அடிப்படையிலும் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்ட ஹதீஸ்களாக பின்வரும் ஹதீஸ்கள் உள்ளன.அல் ஃபாத்திஹா சூராவை இப்னு மஸ்வூத்(ரலி) மறுத்தார்களா?

    தலைப்பில் கொடுக்கப்பட்ட விமர்சனத்திற்கு இஸ்லாமோஃபோபுகள்  ஹதீஸ்களை முன்வைத்து எந்த வாதத்தையும் தங்களது வலைதளத்தில் வைத்திருப்பதாக நாம் தேடிய வரை இல்லை. இந்த செய்தியை இங்கு பதிவிட்டு விளக்குவோம்.
ﻭﺭﻭﻱ ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ اﻟﻨﺨﻌﻲ ﺃﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻛﺎﻥ ﻻ ﻳﻜﺘﺐ ﻓﺎﺗﺤﺔ اﻟﻜﺘﺎﺏ، ﻭﻳﻘﻮﻝ ﻟﻪ: "ﻟﻮ ﻛﺘﺒﺘﻬﺎ ﻟﻜﺘﺒﺘﻬﺎ ﻓﻲ ﺃﻭﻝ ﻛﻞ ﺷﻲء"،
        இப்ராஹீம் அந் நஃஹயீ கூறியதாவது: இப்னு மஸ்வூத்(ரலி) ஃபாத்திகத்துல் கிதாபை எழுதமாட்டர்கள். அது குறித்து "அதை எழுதவேண்டுமானால் நான் ஒவ்வொன்றின் துவக்கத்திலும் எழுதியிருப்பேன்" என்று கூறினார்கள்.
(அபூ பகர் அல் பாக்கிலானியின் அல் இன்திஸார் 1/320, துர்ருல் மன்சூர் 1/10)

        மேற்குறிபிட்டஹதீஸை பார்க்கும் எவரும் இப்னு மஸ்வூத்(ரலி), அல் ஃபாத்திகா சூராவை குர்ஆனின் பகுதியல்ல என்று கூறவில்லை என்று புரிந்து கொள்வார்கள். மேலும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை குர்ஆனின் பகுதிதான் என்று அல்குர்ஆன் அல்ஹிஜ்ர் சூராவின் 87 வது வசனத்தின் விளக்கத்தில் கூறுகிறார்கள்.
ﺣﺪﺛﻨﻲ اﻟﻤﺜﻨﻰ ﻗﺎﻝ: ﺛﻨﺎ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻋﻮﻥ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻫﺸﻴﻢ، ﻋﻦ ﻳﻮﻧﺲ، ﻋﻦ اﺑﻦ ﺳﻴﺮﻳﻦ، ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ: {ﺳﺒﻌﺎ ﻣﻦ اﻟﻤﺜﺎﻧﻲ}[ اﻟﺤﺠﺮ: 87] ﻗﺎﻝ: «ﻓﺎﺗﺤﺔ اﻟﻜﺘﺎﺏ»
            இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது "திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு" (அல்குர்ஆன் அல்ஹிஜ்ர்:87) என்பது ஃபாத்திஹ துல் கிதாப்.(அல் ஃபாத்திஹா ஸூரா) ஆகும். அறிவிப்பாளர்: இப்னு ஸீரின், நூல்: தஃப்ஸீர் தபரி 14/114.
மேற்குறிபிட்ட இந்த செய்தி அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களின் பின்வரும் கருத்தை உறுதிபடுத்துவதை நாம் காணமுடிகிறது.

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது
    நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழு.து முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்-(7). பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்-(8). எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள். புகாரி 4474)
        மேலும் இப்ராஹீம் அந் நஃஹயீ அவர்கள் அறிவிக்கும் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஒரு குறையும் உள்ளது. அதாவது இப்ராஹீம் அந் நஃஹயீ  அவர்களது பிறப்பு ஹிஜ்ரி 47,  இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது மரணம் ஹிஜ்ரி 50. இது குறித்து தஹ்தீப் அல் தஹ்தீப்பில்(1/178) பின்வருமாறு இடம் பெறுகிறது
ﻭﻗﺎﻝ اﺑﻦ اﻟﻤﺪﻳﻨﻲ: "ﻟﻢ ﻳﻠﻖ اﻟﻨﺨﻌﻲ ﺃﺣﺪا ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺁﻟﻪ ﻭﺳﻠﻢ"
        மேலும் இப்னு மதீனீ அவர்கள் "அந் நஃஹயீ அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களது எந்த தோழர்களையும் சந்தித்ததில்லை" என்று கூறுகிறார்கள்.

            அல் ஃபாத்திஹா சூரா குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) மீது கூறப்படும் கூற்று பின்வரும் முரண்களையும் பிழைகளையும் கொண்டுள்ளது

1. அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களின் கருத்துக்கு மாற்றமானது

2. அதை வழிமொழிந்த இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்துக்கு முரண்

3. இவை அனைத்தையும் விட அந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தி.
        மேலும் அல்ஃபாத்திஹா மற்றும் அல்முஅவ்வித்தைன் (113 மற்றும் 114) சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுவதாக இடம் பெறும் அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமான ஹதீஸ்கள் என்பதை அறிஞர்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.

இப்னு மஸ்வூத்(ரலி) மீதான இந்த கருத்தை மறுத்த நபித்தோழர்களும் அவரது மாணவரான அல்கமா(ரஹ்) அவர்களும்.

ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻳﺤﻴﻰ اﻷﺭﺯﻱ، ﻗﺎﻝ: ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻳﻌﻘﻮﺏ اﻟﻜﺮﻣﺎﻧﻲ، ﻗﺎﻝ: ﻧﺎ ﺣﺴﺎﻥ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ اﻟﺼﻠﺖ ﺑﻦ ﺑﻬﺮاﻡ، ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺃﻧﻪ ﻛﺎﻥ ﻳﺤﻚ اﻝﻣﻌﻮﺫﺗﻴﻦ ﻣﻦ اﻟﻤﺼﺤﻒ ﻭﻳﻘﻮﻝ: «ﺇﻧﻤﺎ §ﺃﻣﺮ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻥ ﻳﺘﻌﻮﺫ ﺑﻬﻤﺎ» ، ﻭﻛﺎﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻻ ﻳﻘﺮﺃ ﺑﻬﻤﺎ، ﻭﻫﺬا اﻟﻜﻼﻡ ﻟﻢ ﻳﺘﺎﺑﻊ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺃﺣﺪ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻗﺪ ﺻﺢ ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻧﻪ ﻗﺮﺃ ﺑﻬﻤﺎ ﻓﻲ اﻟﺼﻼﺓ ﻭﺃﺛﺒﺘﺘﺎ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ
            அல்கமா அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) முஸ்ஹஃபில் அல் முஅவ்விததைன் சூராக்களை அழிக்கக்கூடியவராக இருந்தார். மேலும் அவர்கள் "இவற்றை கொண்டு பாதுகாப்பு தேடவே நபி(சல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என்று கூறுவார்கள். மேலும் அப்துல்லாஹ்(ரலி) அல் முஅவ்விததைன் சூராக்களை ஓதமாட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மீதான இந்த தனித்த கருத்தை நபித்தோழர்கள் யாரும் ஏற்கவில்லை. மேலும் நபி(சல்) அவர்கள் இவ்விரண்டையும் தொழுகையில் ஓதியுள்ளார்கள் என்பதும், அவை முஸ்ஹஃபில் இடம் பெற்றுள்ளவை என்பதும் நிறுபிக்கபட்டவையாகும்.( முஸ்னத் பஸ்ஸார் 1586)
                நாம் முன்பே கூறியது போல் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம்
அல்முஅவ்விததைன் முஸ்ஹஃப்பின் பகுதி அல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான்" அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் ஓதியவாறு தான் ஓதுவதாக இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களே கூறுவதாக" அமையும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது அறிவிப்பு (முஸ்னத் அஹ்மத் 21181), அதைத்தான் கூறுகிறது. குர்ஆனின்  பகுதியை இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் மறுக்க வில்லை  என்பதை உபை இப்னு கஅப்(ரலி) அறிந்திருந்ததால்தான் எந்த சலனமும் (குர்ஆனின் ஒரு பகுதியை மறுப்பது இறைமறுப்பு) இன்றி அதற்கு பதிலளிக்கிறார்கள்.

இப்னு ஹஸ்ம் அவர்களது கருத்து
ﻭﻛﻞ ﻣﺎ ﺭﻭﻱ ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻣﻦ ﺃﻥ اﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ ﻭﺃﻡ اﻟﻘﺮﺁﻥ ﻟﻢ ﺗﻜﻦ ﻓﻲ ﻣﺼﺤﻔﻪ ﻓﻜﺬﺏ ﻣﻮﺿﻮﻉ ﻻ ﻳﺼﺢ؛ ﻭﺇﻧﻤﺎ ﺻﺤﺖ ﻋﻨﻪ ﻗﺮاءﺓ ﻋﺎﺻﻢ ﻋﻦ ﺯﺭ ﺑﻦ ﺣﺒﻴﺶ ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻭﻓﻴﻬﺎ ﺃﻡ اﻟﻘﺮﺁﻥ ﻭاﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ
        அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்விததைன் சூராக்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அல்முஸ்ஹஃப்பின் (குர்ஆனின் ) பகுதியல்ல என்று கூறுவாதாக வரும் அனைத்து அறிவிப்புக்களும் பொய்யானவை ,இட்டுக்கட்டபட்டவை. அவை ஸஹீஹானவை அல்ல. மாறாக அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்விததைன் சூராக்களை உள்ளடக்கிய இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் இருந்து ஜிர்ர் இப்னு ஹுபைஸ் வழியாக இடம்பெறும் ஆஸிமின் ஓதலே உண்மையானவை (இப்னு ஹஸம் அவர்களது முஹல்லாஹ் 1/32)

அந்நவவீ அவர்களது கருத்து
ﺃﺟﻤﻊ اﻟﻤﺴﻠﻤﻮﻥ ﻋﻠﻰ ﺃﻥ اﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ ﻭاﻟﻔﺎﺗﺤﺔ ﻭﺳﺎﺋﺮ اﻟﺴﻮﺭ اﻟﻤﻜﺘﻮﺑﺔ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ ﻗﺮﺁﻥ ﻭﺃﻥ ﻣﻦ ﺟﺤﺪ ﺷﻴﺌﺎ ﻣﻨﻪ ﻛﻔﺮ ﻭﻣﺎ ﻧﻘﻞ ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻓﻲ اﻟﻔﺎﺗﺤﺔ ﻭاﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ ﺑﺎﻃﻞ ﻟﻴﺲ ﺑﺼﺤﻴﺢ ﻋﻨﻪ .
        முஸ்லீம்கள் எந்த கருத்து வேறுபாடுமின்றி அல்முஸ்ஹஃப்பில் எழுதப்பட்டுள்ள அல் ஃபாத்திஹா , முஅவ்வித்தைன் மற்றும் ஏனைய சூராக்களை குர்ஆன் என்று ஏற்றுள்ளனர். அதில் எந்த ஒன்றையும் மறுப்பவர் இறைமறுப்பு செய்தவர் ஆவார். அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்விததைன் குறித்து இப்னு மஸ்வூத்(ரலி) கூறுவதாக வருபவை பொய்யானவை. அவரிடம் இருந்து நம்பகத்தன்மையுடன் அறிவிக்கப்படவில்லை. (அல் மஜ்மூ அந்நவவீ 3/396)

        எனவே அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்வித்தைன் சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) மீது கூறப்படும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவை. அதன் அடிப்படையில் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் வாதம் பிழையானது என்பது இந்த கட்டுரையின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.....