பக்கங்கள் செல்ல

Saturday, January 5, 2019

தொடர் 4:பரிணாமம் : உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


             பரிணாமவியலின் முக்கிய ஆவணம் அல்லது ஆதாரம் என்று அழைக்கப்படும் ஒரு இயங்கியல்(Process) இனப்பிரிகையாகும்(SPECIATION). இதன் வேர் சொல் அல்லது அடிப்படை இனம்(SPECIES) ஆகும்.    ஆம் பரிணாமவிலாளர்களின் இறுதி இலக்கான “ இனமாக பிரிதல்(speciation) என்னும் இயங்கியல் குறித்தும் அதன் மையமாக அமைந்த இனம்(species) என்ற பதம் குறித்தும் , உயிரியல் வகைபடுத்தலில் அடிப்படை அளகான அந்த இனம் என்ற சொல்லை வரையறுப்பத்திலும் அறிவியல் உலகம் பல்வேறு முரண்பட்ட விளக்கங்களை கூறி தத்தளித்து வருவதை காண்கையில் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆக எது இலக்கு என தெரியாமலேயே ஒரு அறிவியல் தியரி?? பயணிக்கிறது என்றால் அது பரிணாமவியலாகத்தான் இருக்கும் என்பதில் நமக்கு எல்லளவும் சந்தேகேம் இல்லை. அதாவது ஒரு இனம்(species) "பல இனங்கள்”(Multiple Species)ஐ தோற்றுவிக்கிறது. பல இனங்கள் பேரினத்தை தோற்றுவிக்கிறது என்பது டார்வினின் கூற்று.(1) ஆக இனம் என்பது பரிணாமத்தின் தயாரிப்பு என்பது டார்வினின் கூற்று. ஆனால் அந்த தயாரிப்பு எது என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது என்பது நகைப்புக்குறியது. அந்த தயாரிப்பு எந்த எந்த குணங்களை கொண்டிருக்கும், அது எப்படி ஏனைய தயாரிப்புகளில் இருந்து மாறுபடுகிறது. எந்த செயல்பாடு இந்த வேறுபாட்டை உற்பத்தி செய்கிறது. அதன் இயங்கியல் என்ன???? உள்ளிட்ட விசயங்களில் நிலவும் இந்த குழப்பங்களை அறிவியல் உலகம் “The Species Problem” என அழைக்கிறது. மேலும் இது குறித்து எர்ண்ஸ்ட் மைர் குறிப்பிடுகையில் இனம் என்பதை வரையறுக்காமல் “எவ்வாறு இனங்கள் தோன்றின” என்பதை விவாதிக்க இயலாது என்று கூறுகிறார்(2). இந்த குழப்பம் குறித்தும், அறிவியல் உலகம் கூறும் பல முரண்பட்ட கூற்றுகளை ஒன்றினைத்து எவ்வாறு நாம் விளங்க வேண்டும் என்பது குறித்தும் பல ஆய்வு கட்டுரைகள் வலையகம் முழுவதும் கொட்டிக்கிடப்பதே தனது இறுதி இலக்கான இனம் மற்றும் இனப்பிரிதல் குறித்தே போதிய விளக்கங்களை பெற முடியாமல் விழிபிதுங்கி உயிரியல் நிற்கிறது என்பதற்கு போதிய சான்று. இனம் என்றால் என்ன???? என்பதை இன் ஷா அல்லாஹ் இந்த தொடரில் சுருக்கமாக காணவிருக்கிறோம்.

இனம் எனும் கருத்தியல்:

                      இனம் எனும் கருத்தியல் பலவாராக விளக்கப்படுகிறது. அறிவியல் உலகம் கிட்ட்த்தட்ட 26 மாறுபட்ட வரைவுகளை இனம் என்பதற்கு தருகிறது. (3)அவற்றை எல்லாம் விளக்க வேண்டும் என்றால் தனி நூல தேவைப்படும். இது குறித்து விளக்கும் நூல்கள் குறித்த தகவல் இந்த கட்டுரையின் இறுதியில் இடம் பெறும். அவற்றுள் மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு விளக்க இருக்கிறோம். அவை:

1. உருவியல் இன கருத்து- MORPHOLOGICAL Species concept

2. பெயரளவிலான இன கருத்து- NOMINALISTIC Species concept

3. உயிரியல் இன கருத்து- BIOLOGICAL SPECIES CONCEPT

4. இனத்தோற்ற வரலாறு அடிப்படையிலான இன கருத்து PHYLOGENETIC SPECIES CONCEPT
உருவவியல் இன கருத்து:
           இந்த கருத்தானது உயிர்களின் அமைப்பு ரீதியில் வகைப்படுத்தும் கருத்தியலாகும். இந்த கருத்து பிளாட்டோ முதல் பலரால் வரலாறு நெடுக எடுத்துகொள்ளப்பட்ட கருத்தியல் ஆகும். இதன் அடிப்படையில்யே கார்லோஸ் லினேயஸ் உயிரியல் வகைபடுத்தலை மேற்கொண்டார். இதனாலே அவர் உயிரியல் வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இது மிக அடிப்படையிலான பாகுபாட்டியல் ஆகும். 


              ஆக மேற்குறிபிட்ட வரைபடமே போதுமானது உருவவியல் இன கருத்து என்றால் என்ன என்பதை விளங்க. இந்த கருத்து விளங்க எளிமையாக இருந்த போதிலும் இதில் சில குறைகளும் இருக்கின்றன. அதாவது ஒரே உயிரில் இருக்கும் பாலின உடற் பகுபாடு, (Sexual Dimorphism), பல்லுயிர் தோற்றம் (polymorphism) , வயது மாற்றம் போன்ற காரணங்களினாலும் உருவ அமைப்பில் வேறுபாடுகள் இருக்கும்.


            மனிதன் போன்ற உயிரினத்தில் பாலின பாகுபாடு பெரிதாக இருப்பதில்லை. ஆனால் தூண்டில் மீன் (Angler Fish) போன்றவற்றில் ஆண் மீனிற்கும் பெண் மீனிற்கும் பெரும் உருவவேறுபாட்டை காணமுடிகிறது இது போன்ற உயிரினங்களில் இத்தகைய இன கருத்து செல்லுபடியாகாது. அதே போல் குறிபிட்ட அளவு கோலை இந்த உடலியல் வேறுபாட்டிற்கு கூறவியலாது. மேலும் இதில் ஒரு கோட்பாட்டியல் சிக்கல் பரிணாமவியலாளர்களுக்கு இருக்கிறது. இன பிரிகையின் அடிப்படை அளகாக உடலியலை எடுத்துக்கொண்டோம் என்றால், இனப் பிரிகையின் ஆரம்பம் உடல் அமைப்பியலில் தோன்றும் மாற்றமாக எடுக்க நேரிடும். இது நாம் முன் சென்ற தொடர்களில் விளக்கியது போல் நிறுவப்பட்ட வைஸ்மேனின் ஆய்வுகளுக்கு மாற்றமாக அமைந்துவிடும். மேலும் இந்த சிக்கலை தீர்க அவர்களுக்கு இடைநிலை உயிர்கள் தேவைபட்டன. ஆனால் என்ன முயற்சித்தும் அது நடக்கவில்லை. ஆக இதை பரிணாமவியலாளர்களால் ஏற்க முடியாது.(4)
பெயரளவிலான இன கருத்து- NOMINALISTIC Species concept
                     லாமார்க் போன்றவர்கள் இந்த கருத்தை முன்வைத்தனர். அதாவது நமது தேவைக்காகத்தான் இனமாக உயிர்களை பிரிக்கிறோமே ஒழிய எல்லாம் ஒரே இனம்தான் என்ற கருத்தை முன் வைத்தாரகள். அதாவது இவர்கள் தங்களது ஆர்தோஜெனிஸிஸின் அடிப்படையில் இந்த கருத்தை முன்வைத்தனர். ஆக உயிர்கள் பல்வேறு வகைபட்டவை. அந்த வேறுபாடுகள் தெளிவாக தெரிகின்றன். டார்வின் கூறுவது போல் பரிணாமத்தின் உற்பத்திப்பொருளே இனம் தான் எனும் போது,….இனம் என்ற ஒன்றே இல்லை என்ற வாதத்தை எப்படி பரிணாமவியலாளர்களால் ஏற்கமுடியும்…...

உயிரியல் இன கருத்து- BIOLOGICAL SPECIES CONCEPT
                   இந்த கருத்து கே.ஜோர்டான் அவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்று இந்த கருத்தியல்தான் பெரும்பான்மை உயிரியலாளர்களாலும், பரிணாமவியலாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒன்றாகும். இந்த வரைவிற்கு முழு வடிவம் கொடுத்தவர் எர்ண்ஸ்ட் மைர் ஆவார். “ஒரு இனம் என்பது இயற்கையாக தனக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும், தனித்த இயற்கை வாழிடங்களை கொண்ட உயிர்களின் தொகுதி” என்று வரையறுத்தார். 

அதாவது ஒரு இனம் என்பது
1.ஒரு உயிரினக்கூட்டம். 
2.அவை தனக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும்
3.அவற்றிற்கு தனித்த வாழிடம் இருக்கும். அதாவது அவை தங்களுக்குள் மாறுபாடுகளை கொண்டிருக்கும். அவை அனைத்தும் இனைந்த ஒரு தொகுதியாக இருக்கும். அவை ஏனைய இத்தகைய தொகுதிகளுடன் ஒரு சூழலில் ஒன்றுடன் ஒன்று செயலாற்றும்.
          உதாரணமாக வரிகுதிரைகளை எடுத்துக்கொள்வோம். அவை இயற்கையாக வரிகுதிரைகளுடன் இனப்பெருக்கம் செய்யும். அவை ஆப்ரிக்க காடுகளில் ஒரே சூழலில் காட்டுக்கழுதைகளுடன் இணைந்திருந்தாலும் அவை அவற்றுடன் இயற்கையாக இனப்பெருக்கம் செய்யாது. இதில் வரிகுதிரை என்பது ஒரு இனம். அது போல் காட்டுக்கழுதைகள் தனி இனம். இவ்விரண்டு இனங்களும்  இயற்கையாக ஒன்றுடன் ஒன்று இனப்பெருக்கம் இயற்கையாக செய்யாததால் இவை இரண்டும் தனித்த இரண்டு இனங்கள்.

இந்த கருத்தும் ஏகமனதாக பலரால் ஏற்கப்பட்டாலும் இதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.

1.இதில் முதல் சிக்கல் பரிணாமவியலாளர்களுக்கு எங்கு எழுகின்றது என்றால் பழைய படிமங்களின் இன வகைபடுத்தல் சாத்தியமற்றதாகிவிடும். அதாவது படிமத்தில் இருக்கும் மூதாதை இனங்களும் இன்றிருக்கும் இனங்களும் இணைந்து இனப்பெருக்கம் செய்தனவா என்பதை படிமங்களை கொண்டு அறியமுடியாது. உதாரணமாக மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைபட்ட ஒரு இடைநிலை மூதாதை படிமம் கிடைக்கிறது என்று கொள்வோம். இந்த மூதாதை முதலில் தோன்றிய குரங்கு மூதாதை எனும் மாறலுடனும் மனிதன் மூதாதை என்ற மாறலுடனும் இனப்பெருக்கம் செய்திருக்குமா????அவை மனித மூதாதையுடன் மட்டும் இனப்பெருக்கம் செய்திருந்தால் அவை தனி இனமாக இருக்கும். அல்லது அது மனித இனமாக இருக்கும் என வரையறை செய்யலாம். ஆனால் அது படிமங்களில் சாத்தியமற்றது. ஆக இன்று இருக்கும் விலங்குகளை வேண்டும் என்றால் இந்த இன கருத்தியல் அடிப்படையில் வகைபடுத்தலாம்….படிமங்களில் அது சாத்தியம் இல்லை. ஆனால் படிமங்களை இன பாகுபாடுபடுத்த முடியவில்லை என்றால் பரிணாமம் மண்ணைக்கவ்விவிடும். பரிணாமத்திற்கு ஆதாரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் படிமங்களின் மேலும் சார்ந்து இருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்று. ஆக இதுவும் பரிணாமத்திற்கு ஒவ்வாத கோட்பாடுதான்

2. வளைய இனங்கள்.(Ring Species)
இதை கொஞ்சம் விரிவாக பார்த்துவிடுவோம். அதாவது வளைய இனங்கள் என்பவை அருகருகே அமைந்த வாழிடங்களில் இருப்பவை. அவை தோற்றத்தால் ஒன்றி இருந்த போதிலும் தங்களது வாழிடங்களின் அருகாமையில் இருக்கும் இனங்களுடன் மட்டுமே இனப்பெருக்கம் செய்யக்கூடியவை.(5) அதை பின் வரும் படம் தெளிவாக விளக்கும் 


       மேற்குறிபிட்ட பல்லி இனமான (Ensatina Eschscholtzii) தனக்குள்ளே 7 சிற்றினங்களை கொண்டிருக்கிறது. இவை கலிஃபோர்னியாவை சுற்றி தங்களது வாழிடங்களை கொண்டுள்ளன. அவற்றில் ‘B’ என்ற சிற்றினம் ‘A’ மற்றும் ‘C’ சிற்றினங்களுடன் இனபெருக்கம் செய்கின்றன. ஆனால் இதர சிற்றினங்களுடன் இனபெருக்கம் செய்வதில்லை. இதே போன்று தனது அருகாமை சிற்றினங்களுடன் ஒவ்வொரு சிற்றினங்களும் இனப்பெருக்கம் செய்கின்றன A மற்றும் G ஐ தவிர. இங்கு உயிரியல் இனக்கருத்தில் என்ன சிக்கலென்றால், இவற்றை எப்படி தனி இனமாக பிரிபபது என்பதில்தான். உதாரணமாக ‘B’ ஐ ‘D' ல் இருந்து தனித்த இனமாக கொண்டால், ‘C’ ஐ ‘B’ல் சேர்பதா? ‘D’ ல் சேர்பதா? ஆக இனப்பெருக்க தனிப்படுத்தல் (Reproduvtive Isolation) அடிப்படையில் பிரிக்கும் போது இது போன்ற வளைய இனங்களை வகைபடுத்த இயலாது.(பின்வரும் தொடர்களில் இது குறித்து ஆதாரங்கள் பட்டியலில் தெளிவாக காணவிருக்கிறோம்)
3.கலப்பு இனங்கள்: இவற்றை மனிதன் பலகாலமாக வீட்டு வளர்ப்பில் செய்து வருகிறான். உதாரணமாக கோவேறு கழுதைகள். இவை கழுதைக்கும் , குதிரைக்குமான இனக்கலப்பு. இவ்வாறு குதிரை , கழுதை போன்ற உயிரினங்களை எந்த இனத்தில் சேர்ப்பது??? என்ற சிக்கலை இனப்பெருக்க தனிப்படுத்தல் அடிப்படையில் எவ்வாறு பாகுபடுத்த இயலும்.
            மேலும் பால்முறையினின்றும் தனித்துள்ள(asexual) இனப்பெருக்கம் செய்யும் உயிர்களை இனப்பாகுபாடுபடுத்தல் சாத்தியமற்றதாகி விடும். ஆக இது போன்ற மேற்குறிபிட்ட சிக்கல்கள் இந்த இனப்பெருக்க தனிப்படுத்தல் அடிப்படையிலான உயிரியல் இனப்படுத்தலை பொதுமை படுத்த இயலாமல் தடுத்து விடுகின்றது. 

இனத்தோற்ற வரலாறு அடிப்படையிலான இன கருத்து:

                   நாம் முற்பகுதியில் விளக்கியது போல் படிமங்களில் இனப்பாகுபாடு செய்வது உயிரியல் இன கோட்பாட்டின் அடிப்படையில் சாத்தியமற்றது. ஆக மீண்டும் உருவவியல் அடிப்படையிலான பாகுபாட்டைத்தான் படிமங்களில் மேற்கொள்ளவியலும். ஆக இனப்பெருக்க தனிப்படுத்தல் தடைகள் அடிப்படையில் உயிர்களின் தொகுதியை பிரிக்காமல், எந்த மூதாதையில் இருந்து இனங்கள் பிரிகின்றன என்ற கருத்தின்????? அடிப்படையில் இனங்களை பிரிப்பதாகும். இனத்தோற்ற வரலாறு அடிப்படையிலான இன கருத்து என்பது பின்வருமாறு கூறுகிறது:
ஒரு இனம் என்பது ஒரு சிறு ஜனத்தொகையிலான உயிரினம், அவற்றின் மூதாதைகளும் வழித்தோன்றல்களும் ஒரு குறிப்பிட்ட பெற்றோர் வழியிலான குணங்களின் தொகுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தக் கூடியவையாக இருக்கும்.(6)
            ஆக படிமங்களை பொருத்தவரை வகைப்படுத்தும் வகையில் இருக்கும் குணம் என்பது தோற்றம் மற்றோன்று மரபியல். இதில் மரபியல் குறிபிட்ட காலத்திற்குள்ளான படிமங்களில் மட்டுமே சாத்தியம். ஆக தோற்றம் என்பது இதில் முக்கிய பங்கு வகிப்பதாய் இருக்கிறது. ஆக ஒரு படிமத்தின் உருவ அமைப்பு மற்றும் குணம் ஆகியவற்றில் இருக்கும் ஒற்றுமையின் அடிப்படையில் அவை தனித்தொகுதியாக பிரிக்கப்படுகிறது. அவற்றிற்கு அடிப்படை அளகாக பின் வரும அளவுகொல்கள் முன்வைக்கப்படுகிறது

1.தனித்த பெற்றோர் வழி குணங்களையும். உருவ அமைப்பை கொண்டு இருக்கும் மூதாதைகளையும் வழித்தோன்றல்களையும் பெற்றிருக்க வேண்டும்

2.வகைப்படுத்தலை சிறிய ஜனத்தொகையிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
                       ஆக இத்தகைய வகைபடுத்தலுக்கு ஆதாராமாய் பல இனங்களின் உருவவியல் மற்றும் வெளித்தெரியும் குணங்கள் கொள்ளப்படும். உதாரணமாக எடுத்துக்கொண்டால் ஒரு படிமம் மரத்தில் வாழும் குரங்கினத்தினுடையதா என்பதை ஆய்வு செய்ய பின்வரும் அடிப்படை அளகுகளை தொல்மானிடவியலாளர்கள் (Paleoanthropologist) முன்வைக்கின்றனர்

1.மிக வலிமையான கைகள் மற்றும் கால்கள்.

2.குறைந்த உடல் எடை

3.விலகிச்செல்லும் பெருவிரல்கள் கைகளிலும் கால்களிலும் பக்கவாட்டில் நன்கு அசையக்கூடியதாய் இருப்பது, அதனால் மரக்கிளைகளை கைகளைப்போன்றும் கால்களினாலும் கவ்வி பிடிக்க ஏதுவாக இருக்கும்.

4.தனித்த பெரிய வால்கள் மரத்தில் தொங்க ஏதுவாக...

5.மனிதர்களை போல் அல்லாமல் கைகள் கால்களை விட நீளமானதாய் இருப்பது. இதன் மூலம் கைகளினால் மரக்கிளைகளை பிடித்து தொங்கவும், நான்கு கால்களால் நடக்கவும் ஏதுவாக இருக்கும்.
இதுபோன்ற சில குணக்களின் அடிப்படையில் இவை மரத்தில் வாழும் குரங்கினம் என்று தரப்படுத்திவிடுவார்கள்.

                மேற்குறிபிட்ட இந்த இனப்படுத்துதல் முறை படிமங்களில் சிறந்த முறையாக இருந்தாலும் இது முழுமையான இன கருத்து அல்ல. நாம் முன்பே கண்டது போல உருவவியல் அடிப்படையிலான இனப்படுத்துதலில் என்ன சிக்கல் இருந்ததோ அதே சிக்கல் இதிலும் இருக்கிறது. உதாரணமாக தூண்டில் மீனின் படிமமே கிடைக்கிறது என்று கொள்வோம். அதில் ஆண் மீனை தனி இனமாகவும், பெண் மீனை தனி இனமாக கொள்ளும் நிலையே ஏற்படும். அதனால் தான் நமது சமகால மானுடவியல் ஆராய்ச்சியாளரான ஜான் ஹாவ்க்ஸ் குறிப்பிடும் போது நீள மூக்குடைய ஐரோப்பியர்களின் படிமங்களும், கனமான புருவ விழும்புகள் இருக்கும் ஆஸ்திரேலியர்களின் படிமங்களும் தனித்தனியாக வேறு வேறு கண்டங்களில் கிடைக்க நேரிடும் போது, இந்த இனக்கருத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஆய்வாளர், அந்த இரண்டு படிமங்களை வேறு வேறு இனத்தினது என பிரித்துவிடுவார் எனக்குறிப்பிடுகிறார்.(7)



    இதன் அடிப்படையில் இந்த இரண்டு இனத்திற்கும் இடையில் இனப்பெருக்கம் நடந்தற்கான சான்று பின்னாளில் கிடைத்தால் ஐரோப்பிய-ஆஸ்திரேலிய ஹைபிரிட் என்றும் கூறிவிடுவார்கள் போலும். இதனால்தான் சமீபத்தில் கூட இது போன்ற ஒரு செய்தியை நாம் காண நேர்ந்த்து. 1856ல் நியாண்டர்தால்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல் 2010ல் டெனிசோவன் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் உருவ அமைப்பின் அடிப்படையில் இவை வேறு வேறு இனத்தை சேர்ந்த உயிரினங்கள் என அறிவித்தனர். 2012ல் டெனிசோவன் குகைகளில் ஒரு பெண்ணின் கால் எழும்புதுண்டு கிடைத்தது. இதனை மரபியல் சோதனை செய்ததில் இது நியான்டர்தால் மற்றும் டெனிசோவன் இனக்கலப்பு என 2018 ஆகஸ்டில் அறியப்பட்டது(8). இந்த இடத்தில் ஒரு விசயத்தை நினைவு படுத்த வேண்டியுள்ளது. அதாவது ஒரு ஆசியருக்கும் , ஐரோப்பியருக்கும் இருக்கும் மரபியல் வேறுபாடு நியாண்டர்தாலுக்கும் நவீன மனிதனுக்கும் இருக்கும் மரபியல் வேறுப்பாட்டிற்கு ஒத்த ஒன்று. ஆக உருவவியல் அடிப்படையில் படிம பாகுபாடு செய்வதை சரிகாணும் போது சில நேரத்தில் ஒரே இனத்தை சார்ந்த ஆசிய ஐரோப்பியர் போன்ற சிறு பாகுபாட்டைக்கூட வேறு வேறு உயிர் இனங்களாக வகைப்படுத்தும் நிலை ஏற்படும். மேலும் இதில் இருக்கும் ஆய்வாளர்கள் இருவகையானவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஒன்று படுத்துபவர்கள். ஒரு குணத்தின் அடிப்படையில் ஒரு படிமத்தை முன்பே அறியப்பட்ட இனத்துடன் இணைத்துவிடுவார்கள். சிலர் இவற்றை வேறு இனமாக அறிவிக்க அதாவது புது இனத்தின் படிமத்தை தான் கண்டுபிடித்தாக காட்ட பெரும் முனைப்பும் ஆராய்ச்சியும் செய்வார்கள். ஆக படிமங்களை இனப்பாகுபடுத்தி இவற்றின் மூதாதை இது என பாகுபாடு படுத்துவதெல்லாம் தோராயமானவைதான், மாற்றத்திற்கு உட்பட்டது. இந்த நிலையில் இருக்கும் ஆவணங்கள் எப்படி பரிணாமத்தை உறுதி படுத்தும். ஆக ஆதாரமாகக் கொள்ளும் படிமங்களே தீர்கமானதாய் இல்லை என்றால் இதன் அடிப்படையில் அமையும் பரிணாமக்கோட்பாடு யூகமாக இல்லாமல் எப்படி இருக்கும்.

மனித பேரினத்தின் (Genus: Homo) மூதாதை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா????? 

             பரிணாமவியலாளர்களின் ஆதாரங்களை தனிப்பட்டியலாக அவற்றின் குறைகளையும் எதிர்கருத்துகளையும் இந்த தொடர்களின் இறுதியில் தருவதாகவே நாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த இடத்தில் இந்த கருத்தின் செரிவு மற்றும் அதனை தெளிவு படுத்த பரிணாமவியலாளர்கள் எடுத்து வைக்கும் மனித படிம ஆய்வு குறித்து இங்கு விளக்க வேண்டியுள்ளது. அதாவது ஆஸ்ட்ரலோபிதிகஸ் எனும் படிமத்தையும் இன்னும் பிற படிமங்களையும் காட்டி இது மனிதன் எனும் பேரினத்தின் மூதாதை என நிறுவ தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது. மேற்குறிபிட்டவாறு சில படிம எழும்பு கூடுகளுக்கு பாதி மனிதன்(Paranthrropos) என்று எல்லாம் பெயரிட்டு வருகின்றனர். இவ்வாறு கூறப்படும் படிமங்கள் கண்டுபிடிக்கப்படுவது, அவற்றிற்கு இது போன்ற பெயர்கள் சூட்டுவதும், அதை மனித மூதாதை என கதையளப்பதும் வாடிக்கைதான். அதேபோல் பல ஆண்டு ஆய்வுகளுக்கு பின்னர் இல்லை என கைகளை விரிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. ஆனால் இன்றுவரை மனித இனத்தின் மூதாதை என்று எந்த படிமமும் கண்டறியப்படவில்லை என்பதுதான் தற்போதைய நிலவரம். அது குறித்த ஒரு விளக்கபடம் இதோ(9).


                 அதே போல் மனிதன்(Homo) மற்றும் குரங்கு(Pongidae) ஆகியவற்றை தோற்றுவித்த அந்த பொது மூதாதையும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி ஒரு மூதாதையின் படிமம் கிடைக்கும் என்ற கனவில் அத்தகைய படிமம் கிடைக்கும் போது அதற்கு என்ன பெயர் (Pan Prior)வைக்க வேண்டும், அதன் வகைபடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து காத்திருக்கிறது பரிணாமவியல் உலகம் என்பது அதிகப்படியான தகவல்.(10)

                    மேற்குறிபிட்ட இன கருத்துக்கள் இல்லாமல் இன்னும் பல கருத்துகள் இருக்கின்றன. இது போன்ற இனக்கருத்துக்கள் தோராயமாக 26 இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆக எர்ணஸ்ட் மைர் கூறுவது போல் இனம் என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் இருக்கும் அவசியம் அதன் இயங்கியலான இனப்பிரிகை குறித்த ஒத்த கருத்தை உருவாக்கத்தான். இனப்பிரிகையின் இயங்கியல்தான் பரிணாம கோட்பாட்டின் அடிப்படையே. ஆனால் உயிர் இனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் ஏனைய உயிர் இனங்களுடன் ஒன்றி இருக்கின்றன. அது போல் வேறு படுகின்றன. இது தான் இனங்கள்,இவைதான் இனத்தின் குணங்கள் என வகுக்காமல் அதன் இயங்கியல் எது என வகுப்பது இயலாத காரியம். சிலர் உருவவியலை முன்னிறுத்துகின்றனர், எர்ணஸ்ட மைர் போன்ற சிலர் இனப்பெருக்க பிரிவினைகளை முன்வைக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே முழுமையாக இனங்கள் குறித்து விளக்க போதுமானதாக இல்லை என்பதே இக்கட்டுரையில் மேலே விளக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை இனத்தின் அடிப்படியாக கொண்டு அதன் இயங்கியலை விளக்க இயலாது (வைஸ்மேன் ஆய்வுகளை நினைவு கூறுங்கள்) என்பதால் எர்ணஸ்ட மைர் போன்ற அறிஞர்கள் இனப்பெருக்க பிரிவினைகள் அடிப்படையிலேயே இனப்பிரிகையின்(Speciation) இயங்கியலை விளக்கவும் முற்பட்டுள்ளனர். ஆனால் நாம் எவற்றை எல்லாம் உயிரியல் இன கருத்தின் அடிப்படையில் வரையறுக்க முடியாது என பட்டியலிட்டோமோ அவற்றின் இனப்பிரிகை இயங்கியலையும் இனப்பெருக்க பிரிவினைகள் அடிப்படையில் விளக்க இயலாது. இவ்வாறு இனம் என்றால் என்ன என விளக்கப்புகுந்ததின் விளைவு இன்று 26. கருத்துக்கள். இனியும் தொடரும் என்பது எமது கணிப்பு. இதன் விளைவாக ஒவ்வொரு உயிரின் இனப்பிரிகைக்கும் ஒவ்வொரு இயங்கியல் என்ற விடைதான் இறுதியில் கிடைக்கும். இவற்றை இன்றைய பரிணாமக்கொள்கை கூறுவது போல் இயற்கை தேர்வு, ஜெனடிக் டிரிஃப்ட், ஜீன் புலோ என சில எண்ணிக்கையில் அடங்கும் இயங்கியலில் இதை அடக்க வியலாது.

            தனது இறுதி இலக்கு எது என்பதிலும், அதை தோற்றுவித்த இயங்கியல் குறித்த பார்வையிலும் காணப்படும் குளறுபடிகளே பரிணாமம் தியரியே அல்ல. அது ஒரு ஊகமே என்பதற்கு போதிய சான்று. இனப்பிரிகையை விளக்கவே இங்கு பெரும் போராட்டமாக இருக்கிறது, அதற்கு மேலுள்ள தரங்களை எப்படி விளக்குவார்கள், அல்லது எப்போது விளக்குவார்கள். அது முடிவடைந்த பிறகே பரிணாமவியல் என்பது முழுமையடைந்த தியரியாகும். அறிவியலின் அடிப்படை இது இப்படித்தான் நடக்கிறது என அறுதியிட்டு கூறுவதே. “எது வேண்டுமென்றாலும் எப்படியும் நடக்கலாம்” என்று ஒரு தியரி கூறுமானால் அது அறிவியல் அல்ல. அத்தகைய ஒரு கொள்கைதான் பரிணாமம் என்பதற்கு இனம் மற்றும் இனப்பிரிகையில் ஏற்பட்டிருக்கும் குழப்பமே போதிய சான்று.

Citations:
1.P.No:59, Chapter iv: Natural Selection, On the Origin of Species by Natural Selection.by Charles Darwin
2.P.No: 114,The New Species Concept, The Systematics and The Origin of Species by Ernst Mayr
3.https://scienceblogs.com/evolvingthoughts/2006/10/01/a-list-of-26-species-concepts
4.P.No: 111- The New Species Concept, The Systematics and The Origin of Species by Ernst Mayr
5.https://evolution.berkeley.edu/evolibrary/article/side_0_0/biospecies_01
6.P.No: 329,Phylogenetic species concept: myths and misrepresentations, Species The units of biodiversity       Edited By M. F. Claridge, H. A. Dawah and M. R. Wilson
7.http://johnhawks.net/weblog/topics/phylogeny/species_concepts.html
8.https://www.nationalgeographic.com/science/2018/08/news-denisovan-neanderthal-hominin-hybrid-             ancient-human/
9.HISTORY AND REALITY OF THE GENUS ‘HOMO’ WHAT IS IT AND WHY DO WE THINK          SO? by Ian Tattersall
10.https://en.wikipedia.org/wiki/Chimpanzee%E2%80%93human_last_common_ancestor

References:
1.On the Origin of Species by Natural Selection.by Charles Darwin
2.The Systematics and The Origin of Species by Earnst Mayr
3.Species The units of biodiversity Edited By M. F. Claridge, H. A. Dawah and M. R. Wilson
4.Handbook of Paleoanthropology by Prof. Dr. Dr. h. c. Winfried Henke, Dipl. Biol. Thorolf Hardt and Prof. Dr. Ian Tattersall
5.HUMAN EVOLUTION: AN ILLUSTRATED INTRODUCTION by Roger Lewin