பக்கங்கள் செல்ல

Sunday, October 25, 2020

உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்

    குர்ஆனின் பாதுகாப்பு குறித்தும் அது எவ்வாறு பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த இஸ்லாமிய சமூகம் நன்கு அறியும். ஆயினும் இன்று முளைத்திருக்கும் சில மிசனரிகளும் தங்களை முன்னாள் முஸ்லீம்கள் என்று கூறித்திரியும் சிலரும் இஸ்லாம் மீது கொண்ட காழ்ப்புணர்சியாலும் , ஃபோபியாவினாலும் குர்ஆன் எந்த வழியிலும் பாதுக்காக்கப்பட வில்லை என்று அவதூறு பரப்பி திரிகின்றன. ஆனால் அப்படி பரப்பி திரியும் அரைவேக்காடுகள் ஒரு விஷயத்தை கவனிக்கவோ பகுத்தறிவை கொண்டு சிந்திக்கவோ மறந்துவிட்டன.  எழுத்து வடிவிலும் ஓசை வடிவிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு எப்படி பல கோடி முஸ்லீம்களிடம் அதுவும் உலகின் பல பகுதியில் வாழும் முஸ்லீம்களிடம் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை இவர்கள் பகுத்தறிவு ரீதியாக விளக்க வேண்டும். எந்த வழியிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு பல கோடி மக்களின் கையில் ஒரே மாதிரி இருக்கிறது என்பது ஒரே இரவில் அனைவரிடமும் வந்துவிட வில்லை என்பதற்கு போதிய சான்று. ஆக இவர்களது வெத்து வாதத்தால் நம் கண் முன்பு இருக்கும் ஒரு விசயத்தை தெளிவாக விளக்க முடியவில்லை என்றால் இவர்களது வாதத்தில் மெகா சைஸ் ஓட்டை இருக்கிறது என்பது நிரூபனம் ஆகிறது. இந்த குர்ஆன் எப்படி பல கோடி முஸ்லீம் மக்களின் கையில் ஒரே போன்றுள்ளது என்பதற்கான அடிப்படையை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

குர்ஆன் மக்களின் உள்ளங்களில்: ஒரு வரலாற்று பார்வை

        குர்ஆன் எவ்வாறு ஓசை வடிவில் பாதுக்காப்படுகிறது என்பதற்கு முன்சென்ற தொடரில் கண்டிருக்கிறோம். இன்றும் உலகில் குர்ஆனை கோடிக்கணக்கான மக்கள் மனனமிட்டு வருவதை நாம் அறிவோம். இப்படி ஒவ்வொரு தலைமுறையிலும் கோடிக்கணக்கான மக்களினால் மனனமிடப்பட்டு இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படுகிறது. இது குறித்த சிறிய வரலாற்று சுருக்கம்.

நபி(சல்) அவர்கள் உருவாக்கிய ஸுஃபா கல்வி நிலையங்கள் 

         நபி(சல்) அவர்கள் மதீனாவிற்கு சென்ற பிறகு அவர்கள் உருவாக்கிய நபவீ பள்ளியில் முதன் முதலில் ஸுஃபா கல்வி நிலையத்தை உருவாக்கினார்கள். அங்கு தங்கி இருப்பவர்கள் அஸ்ஹாபுஸ்ஸுஃபா- ஸுஃபா வாசிகள் அல்லது திண்ணை தோழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஏழைத்தோழர்கள், பயணிகள் என்று அனைவரையும் உள்ளடக்கியவர்கள். இவர்களின் முக்கிய பணி நபி(சல்) அவர்களிடம் இருந்து குர் ஆனை கற்பது, மார்க்க விளக்கங்களை கற்பது. அதே போல் போர்களிலும் இவர்களே முன்னின்றனர். இத்தகைய திண்ணை தோழர்களில் ஒருவர்தான் அதிக ஹதீஸ்களை அறிவித்த அபூஹுரைரா(ரலி) அவர்களும். மேலும் இந்த திண்ணையின் கொள்ளளவு குறித்து ஹதீஸ்களில் காணமுடிகிறது. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களது திருமணத்தின் போது இந்த திண்ணை நிறைந்ததாகவும் அங்கு சற்று ஏறக்குறைய 300 நபர்கள் இருந்ததாகவும் அனஸ் ரலி அவர்கள் பின்வரும் செய்தியில் அறிவிக்கிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

….…………..அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை" என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!" என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன். -இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்" என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். (தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு" என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். திண்ணையும் (அஸ்ஸுஃபா) அறையும் நிரம்பியது……(முஸ்லிம் 2803 )

           மேலும் இந்த திண்ணைவாசிகளை குர்ஆனை கற்கவும் , ஓதிகாட்டவும் தொடர்ந்து  நபி(சல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள். 

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள்.  (முஸ்லிம் 1469)

     மேலும் இங்கு கல்வி கற்போர் இஸ்லாம் குறித்து கற்பிக்கவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். உதாரணமாக ஹிஜ்ரி 4 ம் ஆண்டு இவ்வாறு குர்ஆனை கற்ற 70 பேரை இஸ்லாமை கற்பிக்க இணைவைப்போரிடம் அனுப்பினார்கள் அந்த எழுவது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் படுகொலை செய்துவிட்டனர்.
ஆஸிம் அறிவித்தார்.
குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு 'ருகூவுக்கு முன்பு தான்' என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினார்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள். (புகாரி 1002) 
     மதீனா வாழ்கையின் ஆரம்ப காலத்திலேயே 70 நபர்கள் அதுவரை இறங்கிய குர்ஆனை மனனமிட்டிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறாக இருந்த தோழர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வரலாற்று ஆசிரியரும் பலவாறாக குறிப்பிடுகிறார்கள். அதாவது 100-900 பேர் வரை திண்ணை தோழர்களின் எண்ணிக்கை இருந்ததாக கூறப்படுகிறது.

السمهودي أن أبا نعيم سرد أسماءهم في الحلية فزادوا على المائة 

அல்சம்ஹூதி கூறியதாவது : அபுநுஐம் அல் ஹிலாயாவில் அவர்களின் நூறு பேரின் பெயர்களை குறிபிட்டுள்ளார்கள்       (சியாரத் அல் நபவீ அல் ஸஹீஹா(1/260))

இது குறித்து கத்தானி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

وقال قتادة بلغوا تسعمائة رجل 

கத்தாதா அவர்கள் (திண்ணை தோழர்களின்) எண்ணிக்கையை 900 எட்டும் என்று கூறுகிறார்கள். (அல் கத்தானி அவர்களது அல்தராதிப் அல் இதாரியா 1/367 ).
      நூற்றுக்கனாக்கனோர் நபி(சல்) அவர்களது காலத்திலேயே அவர்களிடம் இருந்து நேரடியாக குர்ஆனை கற்போராய் இருந்துள்ளனர் என்பது உறுதியாக அறிய முடிகிறது. இது போக நபிதோழர்கள் - நபிதோழர்களிடம் இருந்து கற்றவர்கள் என்று குர்ஆன் முழுமையாகவோ, பகுதிகளாகவோ நபி(சல்) அவர்களது காலத்திலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் மனனமிடப்பட்டிருந்தது. 

நபிதோழர்களின் காலம்:

     நபி(சல்) அவர்களது காலத்திற்கு பின்னான காலத்திலும் நேரடியாக குர்ஆனை கேட்டு மனனமிடும் வழக்கம் தொடர்ந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அதன் நன்மையை கருதி குர்ஆனை மனனமிடத்துவங்கினர். இது குறித்து இப்னு மஷ்காம்(ரஹ்) என்ற தாஃபி (நபிதோழர்களை கண்டவர்) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

عن سام ابن مشكم قال: قال لي أبو الدرداء: اعدد من يقرأ عندي القرآن. فعددتهم ألفا وستمائة ونيفا، وكان, لكل عشرة منهم مقرىء 
    இப்னு மஷ்காம் கூறியதாவது: அபுதர்தா(ரலி) என்னிடம் கூறியதாவது:  இங்கு குர்ஆனை என்னோடு கற்பவர்களை எண்ணச் சொன்னார்கள். நான் எண்ணிய போது ஆயிரத்து ஆறுநூறாக இருந்தது. ஒவ்வொரு பத்து நபர்களுக்கும் ஒரு காரி இருந்தார்கள்.          (அல் தஹபியின் மாஃரிஃபத் அல் குர்ரா ப.எண்:20, இப்னு ஜாஸாரியின் கையத் அல் நிஹாயா ஃபீ தபக்கத் அல் குர்ரா 2480, 1/606-607)
மேற்குறிபிட்டவாறே வேறு ஒரு தாஃபியும் தெரிவிக்கிறார்.
قال سويد بن عبد العزيز: كان أبو الدرداء إذا صلى الغداة في جامع دمشق اجتمع الناس للقراءة عليه فكان يجعلهم عشرة عشرة وعلى كل عشرة عريفا، ويقف هو في المحراب يرمقهم ببصره، فإذا غلط أحدهم رجع إلى عريفه فإذا غلط عريفهم رجع إلى أبي الدرداء يسأله عن ذلك
சுவைத் இப்னு அப்துல் அஸீஸ் கூறியதாவது: அபுதர்தா(ரலி) பஜர் தொழுகையை டமாஸ்கஸ் பள்ளியில் நிறைவேற்றினால் மக்கள் குர் ஆனை ஓத கற்றுக்கொள்ள திரண்டு விடுவார்கள். அவர்களை பத்து நபர்களாக பிரித்து பத்து பேருக்கு ஒரு காரி என்று நியமிப்பார். மிஃராபில் நின்று அதை மேற்பார்வையிடுவார். இதில் ஓதுபவர் தவறிழைத்தால் அதை அந்த குழுவின் காரியிடம் தெரிவிப்பார்கள். காரி ஓதுவதில் தவறிழைத்தால் அபுதர்தாவிடம் முறையிடப்பட்டு அது குறித்து விளக்கப்படும். (தஹபியின் மாஃரிஃபத் அல் குர்ரா அல் கிபார் ப.எண்:20) 
          மேலும் பஸ்ராவில் நபித்தோழர்கள் காலத்தில் பின்வரும் நிலையை அறிய முடிகிறது. உமர்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் கிபி 639ல் பஸ்ரா நகரித்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவர் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆவார்கள். அவர்கள் உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிகாலம் கிபி 644 வரை பொறுப்பில் இருந்தார்கள். கிட்டதட்ட நபி(சல்) அவர்கள் மரணித்து 10 ஆண்டுகளில் பஸ்ராவில் காணப்பட்ட நிலையை பின்வரும் செய்தி கூறுகிறது.

حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ قَالَ: جَمَعَ أَبُو مُوسَى الْقُرَّاءَ، فَقَالَ: لَا يَدْخُلَنَّ عَلَيْكُمْ إِلَّا مَنْ جَمَعَ الْقُرْآنَ ، قَالَ: فَدَخَلْنَا زُهَاءَ ثَلَاثِمِائَةِ رَجُلٍ فَوَعَظَنَا وَقَالَ: أَنْتُمْ قُرَّاءُ هَذَا الْبَلَدِ وَأَنْتُمْ، فَلَا يَطُولَنَّ عَلَيْكُمُ الْأَمَدُ فَتَقْسُو قُلُوبُكُمْ كَمَا قَسَتْ قُلُوبُ أَهْلِ الْكِتَابِ
அபுல் அஸ்வத்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல் அஸ் அரீ(ரலி) அவர்கள் குர்ஆனை கற்றவர்கள் தவிர யாரும் வரக்கூடாது என்று குறிப்பிட்டு ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர் ஆனை கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா(ரலி) அவர்கள் “இந்நகரத்தில் நீங்கள்தாம் ஓதுபவர்கள். காலம் நீண்டுவிட்ட போது வேதம் அருளப்பட்டவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். (முஸன்னஃப் இப்னு அபி ஷைபா 34823) 
        மேற்குறிபிட்ட சூழல் என்பது ஒரு சில பகுதியில் இருக்கும் நிலையே ஆகும். இப்படி அடுத்த தலைமுறையில் பல்லாயிரக்கணக்கானோர் குர்ஆனை மனனமிட்டனர் என்பது தெளிவாக வரலாற்றில் காணமுடிகிறது. பின்னாட்களில் குர்ஆனை கற்பிக்க பள்ளிவாசல்களுடன் இணைத்த குத்தப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பிறகு 10-11 ம் நூற்றாண்டுகளில் உயர்கல்வி இஸ்லாமிய சட்ட ஆய்வுகளுக்காக மதரஸாக்கள் உருவாகின, இவ்வாறு அமைக்கப்பட்ட மத்ரஸாக்கள் பக்தாதில் மட்டும் 10ந் நூற்றாண்டிற்குள் 300 ஆக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள்(1)

   இவ்வாறு மனனமிடப்பட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டதால்தான்  இமாம் சுயூத்தி அவர்கள் குர்ஆன் குறித்த தனது இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

الْأَوَّلُ: لَا خِلَافَ أَنَّ كُلَّ مَا هُوَ مِنَ الْقُرْآنِ يَجِبُ أَنْ يَكُونَ مُتَوَاتِرًا فِي أَصْلِهِ وَأَجْزَائِهِ وَأَمَّا فِي مَحَلِّهِ وَوَضْعِهِ وَتَرْتِيبِهِ فَكَذَلِكَ عِنْدَ مُحَقِّقِي أَهْلِ السُّنَّةِ لِلْقَطْعِ بِأَنَّ الْعَادَةَ تَقْضِي بِالتَّوَاتُرِ فِي تَفَاصِيلِ مِثْلِهِ لِأَنَّ هَذَا الْمُعْجِزَ الْعَظِيمَ الَّذِي هُوَ أَصْلُ الدِّينِ الْقَوِيمِ وَالصِّرَاطِ الْمُسْتَقِيمِ مِمَّا تَتَوَفَّرُ الدَّوَاعِي عَلَى نَقْلِ جُمَلِهِ وَتَفَاصِيلِهِ فَمَا نُقِلَ آحَادًا وَلَمْ يَتَوَاتَرْ يُقْطَعُ بِأَنَّهُ لَيْسَ مِنَ الْقُرْآنِ قَطْعًا
குர்ஆன் முழுமையாகவும், பகுதியாகவும் தவறே ஏற்படாத அளவிற்கு எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் (முத்தாவாதீர்) அறிவிக்கப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அஹ்லுஸ் சுன்னாவை பொருத்தவரை அதன் அமைப்பும், அதன் வரிசை முறையும் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது , அதனால் அது எந்த சர்ச்சைக்கும் அப்பார்பட்டது. ஏனென்றால் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களின் செய்தியை உள்ளடக்கிய ஒரு ஆவணம் குர்ஆன் என்பதால், அது அமோதிக்கப்பட்ட உண்மையாகும். அதன் விளையவாக எண்ணிலடங்கா அறிவிப்பாளர் இன்றி ஒற்றை அறிவிப்பாளர் வழியாக வந்த எதுவும் குர்ஆன் ஆகாது (இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் 1/266)
    மேலே உள்ள கருத்தை எளிமையாக புரிவது என்றால் குர்ஆன் என்பது முதன்மை முத்தவாதீர் செய்தி. அதில் இருக்கும் செய்திகள், அதன் அமைப்பு அதன் வசன வரிசை உட்பட அதற்கு முரணாக வரும் எந்த செய்தியும் நிராகரிக்கத்தக்கது. 


மேலும் குர்ஆன் கற்றல் குறித்து மேற்கத்திய அறிஞர்களும் இந்த கருத்தைதான் முன்வைக்கின்றனர்.இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது (P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )

மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி இன்று உலகின் பல கோடி இஸ்லாமியர்களின் கையில் ஒரே வகையான குர்ஆன் இருக்கிறது என்பதை விளங்கிகொள்ள.  மேற்குறிபிட்ட வரலாற்று தரவுகள் நமக்கு பின்வரும் முடிவுகளை தருகின்றன.

1.குர்ஆன் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் ஆயிரக்கணக்கானோர்களால் மனனமிடப்பட்டு ஏற்கப்பட்டது. மேலே இருக்கும் வரலாற்று ஆவணங்கள் தெளிவாக ஒன்றை விளக்குகிறது அதாவது குர்ஆன் ஆனது வெகுஜன ஓதல்- கேட்டல் முறை மூலமாக நபி(சல்) அவர்களது காலம் முதல் ஐவேலை தொழுகையின் மூலமும், கற்றுக்கொடுத்தல் மூலமும் ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டுள்ளது. இன்றும் அதே முறை கையாளப்படுகிறது. 

2. குர்ஆனில் அறிவிப்பாளர் தொடர் என்பது அனைத்து கிரந்தகளில் கூறப்பட்ட முத்தவாதீரான ஹதீஸை விட அதிக அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது என்பது வரலாற்று ரீதியாக நிரூவப்படுகிறது.

3. குர்ஆனின் வசனங்கள் வேறுபட்டதாக கூறும் எந்த ஹதீஸும் குர்ஆனை விட முத்தவாதீர் அல்ல. ஆக அந்த ஹதீஸ்கள் மறுக்கப்படுவதற்கு இதுவே போதிய காரணமாக இருக்கிறது. 

4.குர்ஆன், எழுத்துப்பிரதிகளை நம்பி கடத்தப்படவில்லை என்பது மேற்குறிப்பிடப்பட்ட செய்திகளை படிக்கும் யாரும் அறிந்து கொள்வார்கள். அதனால் இன்று கிடைக்கும் பண்டைய எழுத்துப்பிரதிகளில் இருக்கும் கூட்டல் கழித்தல்கள், மாற்றல்கள் எல்லாம் குர்ஆன் ஓதல் முறையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. (இத்தகைய எழுத்துப்பிரதிகள் குறித்து வரும் தொடர்களில் காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்)

5.எழுத்து வடிவிலும் பாதுக்காக்கப்படவில்லை, மனன முறையிலும் பாதுக்காக்கப்படவில்லை என்பது சரியென்றால், வேறுபட்ட மொழி பேசும், உலகின் பலபகுதிகளில் இருக்கும் பல கோடி முஸ்லீம் மக்களின்  குர்ஆன் ஓதல் எப்படி  ஒன்றாய் இருக்கிறது என்ற கேள்விக்கு, விடையளிக்க   மேற்குறிபிட்ட வரலாற்று ரீதியாக நிருவப்பட்ட கோட்பாடன்றி வேறு பகுத்தறிவு அடிப்படையிலான கோட்பாடுகள் எதுவும் இந்த அறைவேக்காட்டு இஸ்லாமோஃபோபுகளிடம் இருக்கிறதா ???????

No comments:

Post a Comment