பக்கங்கள் செல்ல

Monday, October 10, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்ஏக இறைவனின் திருப்பெயரால்

ஆவணங்களின் தரம்:
    ஏசுவினால் வென்றெடுக்கப்பட்ட ஆரம்ப கால யூதர்களை முஸ்லிம்களாக குர்ஆன் குறிப்பிடுகிறது. உண்மையில் ஏக இறைவனை ஏற்று அவர்கள் ஏசுவை இறைத்தூதராக ஏற்றிருக்கும் நிலையில் அவர்கள் முஸ்லிம்கள்தான் (முழுமையாக அல்லாஹ்விற்கு வழிபட்டவர்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் கிறித்தவ உலகம் கூறும் பிரிவினர்களில் யார் என்பதில்தான் குழப்பம். அவர்கள் யார் என்று அறிந்து கொள்வற்கு கிறித்தவ அறிஞர்கள் எடுத்து கொள்ளும் சாதனங்கள்தான் விசித்திரமானதாக உள்ளது. இன்றும் answeringislam.com போன்ற வளைத்தளங்கள் இதே முறையை கையாள்கின்றன. அதாவது ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் எதிர்வாதங்களின் அடிப்படையிலான புரிதல்கள்தான் அவை அனைத்தும். ஆனால் எதிர்வாதங்களை அடிப்படையாக கொண்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கொள்கையை வரையறை செய்வது என்பது இருட்டில் கருப்பு பூனையை தேடுவதற்கு நிகரானது. உதாரணமாக இன்றிருக்கும் கிறித்தவர்கள் இஸ்லாமியர்கள் குறித்து கூறும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்வாதங்கள் அடிப்படையில் இஸ்லாமியர்களின் கொள்கையை வரையறுப்பதை போன்றது. காழ்புணர்ச்சியால் தோன்றும் வாதங்களின் நம்பகத்தன்மை அத்தகைய ஆவணங்களை  மூன்றாம் நிலைக்கே தள்ளிவிடும்.

        ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கொள்கைகளை அறிய அவர்களின் ஏடுகளில் அவற்றை தேடுவதுதான். அதுவும் அந்த ஏடுகள் அந்த பிரிவினரே உறுதிபடுத்தியிருக்க வேண்டும். அவற்றை முதல் நிலை ஆதாரமாக கொள்வதுதான் பகுத்தறிவிற்கு உகந்தது. இத்தகைய ஆதாரங்கள் எதுவும் கிறித்தவத்தின் எதிர் பிரிவினர் என்று கூறப்படுபவர்களின் நேரடியான சான்றிதழுடன் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த பிரிவினர் பயன் படுத்திய ஏடு அந்த பிரிவினர் பயன்படுத்திய ஏடு என்பதெல்லாம் ஆரம்ப கால தேவாலயபிதாக்களின் எதிர்தரப்பினர்களுக்கான எதிர்வாதங்களில்தான் காணப்படுகிறது. இரண்டாவதாக அவர்கள் குறித்து விளக்கும் நடுநிலையாளர்களின் ஆவணங்கள். மூன்றாவதாகத்தான் எதிர்அணியினரின் வாதம் அடிப்படையிலான ஆவணங்கள். இவை போன்றவைதான் இன்றிருக்கும் தேவாலயபிதாக்களின் எதிர்தரப்பினர்களுக்கான எதிர்வாதங்கள். 

      மேற்கூறிபிட்டவற்றில் மூன்றாம் நிலை ஆவணங்கள் தான் இன்று உள்ளன. முதல் தர ஆவணங்கள் என்று எதுவும் இல்லை. ஜோசப்பஸ் போன்றவர்களின் இரண்டாம் தர ஆவணங்கள் இருக்கின்றன (ஜோசப்பஸ் போன்றவர்களின் ஆவணங்களின் நிலை குறித்து வரும் தொடர்களில் காண்போம்).


முதல்நிலை ஆவணங்களான பழைய ஏற்பாடு:

      யூதர்களின் ஆவணங்களான பழைய ஏற்பாட்டில் பெறும் பகுதி கிறித்தவர்களாலும் ஏற்று கொள்ளப்படுகிறது. அவற்றில் ஏக இறை கோட்பாடு தெள்ளத்தெளிவாக இடம்பெற்றுள்ளது. அந்த பழைய ஏற்பாட்டில் காணப்படும் சில வசனங்களை காண்போம்.
     
       கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.(உபாகமம் 4:35)  

       இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. (உபாகமம் 6:4-6) 

       இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள். முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.(ஏசாயா 46:8-9)
மேலும் ஏசுவும் ஏக இறைகொள்கையைதான் முன் வைத்தார்கள்:

     ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.(யோவான் 17:3-4)

      ஏகஇறைகொள்கையில் ஒன்றா மூன்றா என்ற பிரிவுகளெல்லாம் யூதர்களுக்குள் ஏசுவிற்கு பிறகுதான். ஏசுவை ஏற்றுகொண்ட ஒரு பிரிவினர். ஏசுவை மறுத்த யூதர்கள். அந்த ஏசுவை ஏற்று கொண்ட பிரிவினர்களாக தங்களை கூறிகொள்ளும் இன்றைய கிறித்தவர்களின் ஏடுகளில் இருந்து நமது தேடலை துவங்குவதுதான் சரியானதாக இருக்கும். ஆரம்ப காலத்தில் ஏசுவை ஏற்று கொண்டவர்களாக காட்டப்படும் சீடர்களின் நேரடி குறிப்புகள் எதுவும் நம்மிடம் இல்லை. அப்படி இருப்பவை அனைத்தையும் கிறித்தவ உலகம் ஏற்கவில்லை. ஏசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு கிறித்தவத்தின் திரித்துவத்தை பரப்பிய பவுலின் மடல்களும் குறிப்புகளும் தான் நம்மிடம் இருப்பதில் காலத்தால் மிகப்பழமையானது. அதில் இருந்து நமது ஆய்வை முன்னெடுப்போம்.

ஆரம்ப கால யூதர்கள் அனைவரும் ஏசுவின் சிலுவை மரணத்தை ஏற்றனரா?
    
      பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட திரித்துவத்தின் அடிநாதமானது ஏசுவின் சிலுவை மரணத்திலும் ஏசுவின் உயிர்தெழுதலிலும் தான உள்ளது. பின்வருமாறு பவுல் கூறுகிறார். 
    
    அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள் நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.(1 கொரிந்தியர் 15:1-4) 

      இந்த முக்கடவுள் கொள்கையின் மூலத்தை ஏசுவை இறைத்தூதராக ஏற்ற அனைத்து யூதர்களும் ஏற்றனரா என்பதை ஆய்விற்கு உட்படுத்துவோம். 


பவுலின் கடிதங்கள்: பவுலை சேர்ந்தவர்களும் கிறிஸ்துவை சேர்ந்தவர்களும் !!!!!!!!!:

      பவுல் அவர்கள் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட தேவாலயங்களுக்கு இந்த மடல்களை வரைந்துள்ளார். அவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை போக்கும் விதமாக இந்த மடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அதை பின்வரும் வசனங்களில் அறியலாம்:

  சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய   இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.(கொரிந்தியர் 1:10-12)
      
   இவ்வாறு கொரிந்திய தேவாலயத்திற்கு வரையப்பட்ட மடலில் அவர்களிடம் இருந்த பிணக்குகளை தீர்க்கும் வண்ணம் இரண்டு கடிதங்களை வரைந்துள்ளார். அவற்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

      ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையில் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். கிரேக்கர்களுக்கு இது மடமையாக தோன்றும்.(1 கொரிந்தியர் 1:23)
      
        மேற்கூறிய பவுலின் கூற்றானது ஒன்றை தெளிவாக கூறுகிறது. அதாவது ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்பது யூதர்களுக்கு இடறலாய் இருக்கிறதாம். ஏன் யூதர்கள்தானே சதி செய்து ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தனர். அதை ஏன் யூதர்கள் நம்ப மறுக்க வேண்டும். இதுவே ஏசுவை, கிறிஸ்து என்று நம்புவது யூதர்கள் நம்பிக்கைக்கு தடை என்றாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது. ஆனால் ஏசு சிலுவையில் கொல்லப்பட்ட்தை அல்லவா யூதர்கள் சந்தேகிப்பதாக பவுல் கூறுகிறார். 

மேலும் கலாத்தியர்க்கு எழுதிய மடலில் பின்வருமாறு கூறுகிறார்.

      இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்தார் என்பது பற்றி மிகத்தெளிவாகக் கலாத்திய மக்களாகிய உங்களுக்கு சொல்லப்பட்டது, ஆனால் நீங்களோ புத்தியற்றவர்களாய் இருந்தீர்கள். எவரையோ உங்களிடம் தந்திரம் செய்ய அனுமதித்துவிட்டீர்கள். இதை பற்றி எனக்கு கூறுங்கள, பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படி பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களை பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுகொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவீயை பெற்றீர்கள். ஏனெனில் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள்.(கலாத்தியர் 3:1-2)

      எவரோ கலாத்தியரை தந்திரம் செய்து ஏசுவின் சிலுவை மரணத்தை மறுக்க செய்ததாக பவுல் கூறுகிறார். நியாயப்பிரமாண சட்டங்களை பின்பற்ற சொல்லும் அந்த தந்திரக்காரர் யார் என்பதை சற்று முன்பாக கலாத்தியர் 2:14-16 வரை உள்ள வசனத்தில் பவுல் குறிப்பிடுகிறார் இதோ,

      இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்? புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும் படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
 
மேலும் பார்க்க:

      சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறுசிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் இந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். (அப்போஸ்தல நடபடிகள் 15:1-7)

      இப்படி பவுல் அவர்களுக்கும் ஏசுவின் நேரடி சீடரான பேதுருவுக்கும் பல மோதல்கள் மக்கள் முன்னிலையில் நேரடியாக ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. அதுவும் புறஜாதியருக்கு எடுத்துரைக்கும் அதிகாரம் குறித்து பேதுரு வாதிட்ட்தாக அப்போஸ்தல் நடபடிகள் கூறுகிறது. இவ்வாறு ஏற்பட்ட கருத்து மோதல்கள் எல்லாம் தீர்ந்துவிட்டதாக கிறித்தவ உலகம் கூறுகிறது அவை அனைத்தும் பவுலின கூற்றை மட்டும் அடிப்படையாக கொண்டு. இவ்வாறாக ஏசுவின் நேரடி சீடர்கள்  பவுல் அவர்களால் தந்திரக்காரர்கள் என்று கூறப்படுகிறார்கள். (பேதுருவின் வெளிப்படுத்தின விஷேசம்(கினாஸ்டிக்) ஏசுவின் சிலுவை மரணத்தை மறுப்பது குறித்து பிறகு பார்ப்போம்.) ஆக ஆரம்ப கால ஏசுவின் சீடர்களிடத்திலேயே ஏசுவின் சிலுவை மரணம் குறித்த வேறுபாடுகள் இருந்ததை மேலே அறிய முடிகிறது. ஏசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு இருந்த யூதர்களில் குறிபிட்ட அளவினர் நியாயபிரமாணத்தை தூக்கி பிடித்ததையும் நம்மால் அறிய முடிகிறது. ஏசுவின் சிலுவை மரணத்தை மறுத்தனர் அந்த கூட்டத்தினர் என்பதையும் அறிய முடிகிறது. ஆக இவர்கள் நிச்சயம் ஏக இறைவனுக்கு வழிபட்டவர்கள் என்பதற்கு என்ன சான்று தேவை....

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
 


No comments:

Post a Comment