பக்கங்கள் செல்ல

Sunday, July 16, 2017

உயிர்: 3.உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:
சென்ற தொடரில் கூறியவாறு நபி(சல்) அவர்கள் இஸ்லாமை முன்வைப்பதற்கு முன்பும் பின்பும் பல தத்துவவியலாளர்கள் உயிர் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இஸ்லாம் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். 

உயிர் குறித்து குர் ஆன் கூறுவது என்ன?

    உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல் குர்ஆன் 39:42)

மேற்கூறிய வசனம் அல்லாஹ் உயிர்களை இரண்டு தருவாயில் கைப்பற்றுவதாக கூறுகிறான். அதாவது தூங்கும் போதும், மரணத்தின் போதும் என்றும் கூறுகிறான். நாம் தூங்கும் போது நமது உயிர் கைப்பற்றப்படுகிறது ஆயினும் நம் உடலை சோதிக்கும் போது நமது உடல் உறுப்புக்களின் இயக்கமான மூச்சு, இதயதுடிப்பு போன்றவற்றை உணரவியலும். நமது உடலில் இருந்த உணர்வுநிலை இல்லாமல் போய்விடுகிறது. இந்த உணர்வுநிலைக்கும் பகுத்தறிவிற்கும் ஆதாரமாக அமைந்த ஆன்மாவான அந்த உயிர்தான் கைப்பற்றப்படுகிறது. மனித உடலில் இருக்கும் இதயதுடிப்பு உள்ளிட்டவை மற்றுமொரு ஆன்மாவால் கட்டுபடுத்தப்படுகிறது. இதை நாம் உடல் என்றே புரிந்து கொள்கிறோம். அதாவது ஒவ்வொரு மனித உடலிலும் இரண்டு ஆன்மாக்கள் இருக்கின்றன. ஒன்று நன்மை தீமையை பகுத்தறிந்து உடலிற்கு கட்டளையிடும் உயிர். இதை காலம் தோறும் உயிர், ஆன்மா,(SOUL, CONCIOUS MIND என்று தத்துவவியலாளர்களால் அழைக்கப்படுகிறது) மற்றொன்று உடல் உறுப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். அதாவது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். இந்த உடலும் அதன் இயக்கத்தை உறுதி செய்யும் உயிர் என்ற இந்த மொத்த அமைப்பையும் உடல் (BODY) என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இணைப்பு குறித்த விவாதத்தை MIND-BODY PROBLEM என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இரண்டு உயிர்களும் மொத்தமாக கைப்பற்றப்படுவது மரணமாகும் .

மேலும் மேற்கூறிய இருமைத்துவத்தைதான் இஸ்லாம் முன்வைக்கிறது என்பதற்கு பின்வரும் வசனங்களை கவனிப்போம்.  
  
அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 2:28)

    பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
                                                                                                                               (அல்குர்ஆன் 32:9)

      "எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.
                                                                                                                            (அல்குர் ஆன் 40:11)

மேற்குறிய வசனம் நாம் உயிரற்று இருந்தோம் என்பது கருவின் ஆரம்ப நிலையை கூறுவதாகும். கருவின் ஆரம்ப நிலையில் செல்லின் உயிர் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றிற்கு ஆன்மாவை பின்னாளில்தான் அல்லாஹ் வழங்குவதாக கூறுகிறான். அதை பின்வரும் நபிமொழி உறுதிசெய்கிறது.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: முஸ்லிம் 5145.)

ஆனால் எவ்வளவுதான் குர்ஆனும் நம்பகமான ஹதீஸ்களும் உடல் உயிர் குறித்து இருமைத்துவ வாதத்தை (DUALISM) முன்வைத்தாலும் உடல் மற்றும் உயிரின் இணைப்பு குறித்து (MIND BODY PROBLEM) நமக்கு எந்த விளக்கமும் இல்லை. இது குறித்து மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக விவாதித்து வந்தாலும் போதிய முடிவுகளை தற்போதுவரை எட்டவில்லை , என்றும் எட்டப்போவதுமில்லை என்பதுதான் நிதர்சன் உண்மையாகும் அதைத்தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பதிவிட்ட செய்தியானது பின்வரும் குர் ஆன் வசனத்தினால் எடுத்துரைக்கிறது.

   (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (அல் குர் ஆன் 17:85)

வில்டர் பென்ஃபீல்டின் ஆய்வுகள்: ஒரு பொருள்முதல்வாதியின் சவக்குழி


வில்டர் பென்ஃபீல்ட் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுனர். வலிப்பு நோய் அறுவை சிகிச்சையின் தந்தை. மாண்ட் ரியல் நரம்பியல் கல்வி நிறுவனத்தின் முதல் தலைவர். புகழ் பெற்ற நரம்பியல் நிபுனர் நோபல் பரிசு பெற்ற செர்ரிங்க்டன் அவர்களது மாணவர். இன்று இருக்கும் நவீன நரம்பியலின் முன்னோடி. மூளை வரைபடத்தினை திரம்பட செய்வித்தவர் என்று பல புகழுக்கு சொந்தகாரர். 
ஒரு பொருள்முதல்வாதியாக தனது ஆய்வுகளை ஆரம்பம் செய்து முடிவுகளால் பொருள் இருமைத்துவத்தை முன்வைத்தவர். பொருள்முதல் வாதியான வில்டர் பென்ஃபீல்ட் எப்படி தனது ஆய்வுகளால் வீழ்த்தப்பட்டு இருமைத்துவத்தை ஏற்று கொண்டார் என்பதைதான் பின்வரும் பகுதியில் காணவிருக்கிறோம்.   

பென்ஃபீல்ட் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை வழங்குவதில் வள்ளவர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது அவர்களை விழிப்பு நிலையிலேயே அவர்களது மூளையின் பகுதிகளை ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டோடு எவ்வாறு தொடர்புடையது என்பதை ஆய்வு செய்தபின் சேதம் அடைந்த பகுதியில் மட்டுமே திரம்பட அறுவை சிகிச்சையை மேற்கொள்வார். அதாவது 60Hz கொண்ட குறைந்த மின்னோட்டத்தை கொண்டு மூளையின் பகுதிகளை தூண்டும் போது குறிப்பிட்ட மூளையின் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் அசைவை காண்வியலும். இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை பின்வரும் படத்தினால் விளக்கினார்.

Add caption


      இவ்வாறு தொடர் ஆய்வில் ஈடுபட்ட பென்ஃபீல்ட் மனிதனின் உயிர் அல்லது உள்ளம்* என்பது குறித்து பின்வரும் ஆய்வு முடிவுகளை முன்வைக்கிறார். அதாவது உள்ளம் என்று நாம் இன்று கூறிவரும் ஒன்றிற்கும் மூளையின் நரம்பியல் செயல்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளம் என்பது தனித்த ஒன்று என்று குறிப்பிடுகிறார். மேலும் உள்ளத்தின் செயல்பாடான விழிப்பானது எந்த நரம்பியல் செய்ல்பாட்டையும் சார்ந்தில்லை எங்கிறார் பென்ஃபீல்ட். தனது ஆய்வுமுடிவுகளை தனது எண்ண மாற்றங்களையும் வில்டர் பென்ஃபீல்ட்  “The mystery of Mind: A critical study of Consciousness and Human Brain” என்ற புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டார்.

   *உயிரும் உள்ளமும் ஒன்றாய்தான் அல்லது உயிரின் பகுதியாய்தான் வரலாறு நெடுக காணவியலும்.[1] نفس -- நஃப்ஸ் என்ற அரபுச்சொல் உள்ளம் ஆன்மா இரண்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிரேக்க சொல்லான Psyche[2] என்ற சொல் உள்ளம் ஆன்மா இரண்டையும் குறிக்கும்.


சிந்தனையும் முடிவுகளும் மூளையிலா பிறக்கிறது:

பல காலமாய் மனித சமுகத்தின் கூற்று ஒன்றையே கேள்விக்கு உடப்டுத்துகிறார் பென்ஃபீல்ட். அதாவது சிந்தனையும் முடிவெடுத்தலும் மூளையில் உதிக்கிறது என்று நாம் கூறிவரும் நெடுநாள் நம்பிக்கையையே மறுக்கப்பட்டுவிட்ட்து என்பதுதான் வில்டரின் ஆய்வு முடிவுகள் நமக்கு தரும் அதிர்ச்சியே என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது பென்ஃபீல்ட் உள்ளம் எவற்றை எல்லாம் செய்கிறது என்று நாம் நம்புவதை பட்டியலிடுகிறார்.


மேலும் நாம் அறியப்படும் உள்ளம் என்பதற்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். அதாவது உள்ளமானது மூளையின் எந்த பகுதியிலும் இல்லை. அது தனித்து இயங்குவதாய் உள்ளது. மேலும் அந்த உள்ளம்தான் தான் இருக்கும் சூழலை அறிந்து அதை உணர்த்துவதாய் இருக்கிறது. அவர் நினைவில் இருக்கும் நோயாளியின் மூளையை மின்முனையினால் இயக்கி அதன் விளைவை விளக்குகிறார்.


         மேற்குறிப்பிடும்  முடிவு என்ன காட்டுகிறது. மூளையின் இயக்கத்திற்கும் “நான்” என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. “நான்” என்று அறியப்படும் உள்ளமானது மூளை என்ற உறுப்பில் இல்லை. மூளையில் தான் “நான்” என்பது இருக்குமானால் ஏன் அந்த நோயாளி “தான்” செய்யவில்லை என்று கூறவேண்டும். மூளைதான் உள்ளத்தின் இருப்பிடமாக இருந்தால் எப்படி அந்த நோயாளியினால் தனது செயலை தானே தடுக்கவியலும். மின்முனையால் ஏற்படும் செயலை எதிர்க்கும் முடிவானது மூளையில் எட்டப்படவில்லை. மூளை என்பது வெறும் கருவிதான். அதைதான் பின்வரும் பகுதியில் பென்ஃபீல்ட் விளக்குகிறார்


     அதாவது இந்த இடத்தில்தான் ஒரு பொருள்முதல்வாதியின் நம்பிக்கை தகர்ந்ததை உணரமுடிகிறது. வில்டரின் ஆய்வுகள் எதுவும் உள்ளத்தின் செயல்பாடுகளை தோற்றுவிக்கவில்லை. மூளை என்பது ஒரு உறுப்பாக பதிவு செய்வதையும், ஆன்மாவுடன் உடலின் ஏனைய பாகத்தை இணைக்கும் ஒரு பாலமாகவும்தான் உள்ளதே தவிர, சிந்தனை முடிவெடுத்தல் சூழல் குறித்த விழிப்பு போன்ற எதையும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் வாசிப்பை தொடர்வோம்.


     அதாவது உள்ளமும் மூளையும் தனித்தவை. ஆனால் ஒன்றை கொண்டு மற்றொன்று இயங்குவதாய் இருக்கிறது. இந்த இணைப்பைதான் உயர்ந்த மூளை இயக்கம் என்று வில்டர் கூறுகிறார். மேலும் தனது இறுதி கருத்தை, பல வருட உழைப்பின் முடிவுகளை பின்வருமாறு கூறுகிறார்.


            ஆக மனித இருப்பு என்பது இரண்டு மூல கூறுகளால் ஆனது. ஒன்று நமது உடல் உறுப்புகளிலும் செல்களிலும் காணப்படும் ஆற்றல் அல்லது உயிர்.  மற்றோன்று அறியமுடியாத உள்ளத்தை இயக்கும் உயிர். இந்த உயிர்தான் முடிவெடுத்தல் போன்ற செயல்களை செய்கிறது. இந்த உயிர்தான் நமது உறக்கத்தில் காணாமல் போகிறது. இந்த உயிர்தான் நம்மை விழிப்பில் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் புரிந்துகொள்ளவும் வைக்கிறது. அதனால்தான் மூளையை கணிணி போன்றது என்றும் அதை நிரலாக்கம் செய்து இயக்கும் தனித்த சுதந்திரமான  புரிதலுடைய செய்லாண்மைதான் நமது ஆன்மா அல்லது உள்ளம் என்று கூறுகிறார் வில்டர். பொருள்முதல் வாதத்தை அடிப்படையாக கொண்டு நாத்திகர்கள் ஆன்மா குறித்து எடுத்துவைத்த அத்துனை வாதங்களுக்கும் வில்டரின் அறிவியல் ஆய்வுகள் சம்மட்டி அடி கொடுத்தது என்பதை மூஸ்லிம்களாகிய நாம் சொல்லி புரியவைக்கத்தேவை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
  மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (அல் குர்ஆன் 50:16. )

உயிர்: 2. வரலாற்றில் உயிர்:

ஏக இறைவனின் திருப்பெயரால்


வரலாற்றில் உயிர்:
உயிர் என்றால் என்ன?????? இந்த  கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ......... 

தேல்ஸ்:(கிமு. 624-548) 
அனைத்து உயிர்களுக்கும் மூலம் நீர். ஈரப்பதமே அனைத்து உயிர்களுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. ஈரப்பத்தத்தில் இருந்து வெப்பம் உணடாகிறது. அந்த வெப்பமே உயிரின் ஆதாரம் என்ற கருத்தை தேல்ஸ் முன்வைத்தார்

பித்தகோரஸ்:(கிமு 582-500)
அழுகும் குப்பைகளில் இருந்து விலங்கினங்கள், கடவுளின் உயிரில் இருந்து தோன்றின. ஒரு விலங்கின் வாழ்வானது இந்த ஆன்மாவும், மண்ணுடலும் இணைந்திருக்கும் காலமே ஆகும். இந்த மண்ணுடல் இறக்கும் போது இந்த அழிவற்ற ஆன்மாவானது வேறொரு மண்ணுடல் ( அது விலங்காகவோ, மனிதனாகவோ இருக்கலாம்) அதனுள் நுழைகிறது. இதுவே மண்ணில் தோன்றும் அனைத்து நன்மை தீமைக்கும் காரணம். மேலும் உயிரானது மூன்று மூலக்கூறுகளை உடையது. 
1. உள்ளுணர்வுப்பகுதி: இந்த பகுதிதான் மண்ணுடல் மற்றும் பவ்தீக தேவை குறித்து உணர்வதாய் அமைந்தது.
2. ஆன்மாப்பகுதி: இதுதான் அன்பு, கோபம் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடயது.
3. கல்வியறிவு: இந்த பகுதி இறைசட்டங்களை புரிந்து செய்படுத்தும் பகுதி.
பித்தகோரஸின் சிந்தனை பள்ளிகள் பிளேட்டோவின் சிந்தனை பள்ளிகளுக்குப் பிறகு காணமல் போனது.

ஹிராகிளைட்டஸ்:(கிமு 535 –  475 )
உலக ஆன்மா என்பது அக்னிதான். மூச்சின் மூலமாக இந்த உலக ஆன்மாவை மனிதன் எடுத்து கொண்டு உயிர்வாழ்கிறான். எங்கும் காணப்படும் அறிவே கடவுள். உணர்வு என்பதே எதோ ஒன்று வெளியில் இருந்து நமக்குள் பாய்வது என்று கூறினார். 

எம்படொகில்ஸ்:(கிமு  490 – 430)
இவர்தான் நிறை அழிவின்மை குறித்து முதன்முதலில் பேசியவர். முன்பே இருக்கும் பொருடகளோடு இணைவதாலும் பிரிவதாலுமே பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படுகிறது. நீர் நெருப்பு காற்று ஆகிவைதான் முன்பே இருக்கும் பொருட்களாகும். இரண்டு விசைகள் இவ்வுலகை இயக்குகின்றன. விலக்கு விசை, ஈர்ப்புவிசை. ஆன்மா தனித்தவை அல்ல. இறைமறுப்பையும், இன்பமே நோக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் உயிர் குறித்த கருத்துகளையும் முன்வைத்தார்.
மேலும் மனோதத்துவவியலுக்கு அடிகோலிட்டவர். மனிதனின் குணங்கள் உடல் கூறு கலவையின் அடிப்படையில் அமைகின்றன என்று வாதிட்டார். தகுதியற்றவை வாழாது என்பதை கூட முன்வைத்தார். இன்றிருக்கும் பல பொருள்முதல்வாதிகளின் மூல கொள்கை இங்கிருந்துதான் ஆரம்பமானது என்று கூறலாம்.

டெமொகிரைடஸ்:(கிமு 460 – 370)
இவ்வுலகமானது எண்ணில்லா அணுக்களினால் ஆனவை. உயிரானது உலகின் ஒரு பகுதி. அது உயிர்ப்புடன் நகர்வதாய் இருந்தாலும் அதுவும் இவ்வுலகின் ஒரே வகையான அணுக்களினால்தான் ஆனது. இந்த அணுக்கள் யாவும் நெருப்பை போன்ற வெப்பத்துகள்களாகும். இவை உடலின் அனைத்து பகுதியிலும் ஊடுருவி உடலிற்கு உயிரை தருகிறது. இந்த உயிரை பல கூறுகளாக பிரித்து அவை உடலின் ஒவ்வொரு பகுதிக்கானது என்றும் கூறினார். அதாவது சிந்தனை என்பது மூளையின் உயிர், பார்வை கண்ணின் உயிர், கோபம் இதயத்தின் உயிர், ஆசை ஈரலின் உயிர் என்று குறிப்பிட்டார்.

ஹிப்பொகிரேடஸ்:((கிமு 460 – 370))
தத்துவவியலையும், மருத்துவத்தையும் இரு துறையாக முதன் முதலில் பிரித்தவர். உடல் என்பது அண்டத்தின் சிறிய மாதிரி. அண்டத்தில் நீர், நிலம், நெருப்பு மற்றும் காற்று போல் உடலில் ரத்தம்,  மஞ்சள் பித்தம், சளி மற்றும் கரும் பித்தம் அமைந்துள்ளது. இவையே மனிதனின் மனோநிலையை நிர்ணயிக்கின்றன. இதே போல் உடல் நோய்கள் அனைத்தும் இந்த நான்கு திரவங்களின் சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாள்வுகளே என்ற கருத்தை முன்வைத்தார். இந்த அனைத்து திரவங்களின் ஊற்றுக்கண் மூளையே. ஆக அனைத்து நோயின் மூலமும் மூளையே. உள்ளத்தின் இருப்பிடம் மூளையே. மனநோய் என்பது இந்த உறுப்பில் ஏற்படும் பாதிப்பேயாகும். கரும்பித்தமே மனிதனின் தீய எண்ணங்களான பொறாமை, சந்தேகம், வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவற்றிற்கு காரணமாகும் என்றும் குறிபிட்டார்.

சாக்ரட்டீஸ்:

        ஓர் இறைக்கொள்கையை முன்மொழிந்தார். டெல்ஃபியின் இறைவனை தனது ஒரே இறைவனாக எடுத்துக்கொண்டார். (அந்த கடவுள் அப்பலோதான் என்பது அறிஞர்களின் வாதம்) மற்ற கிரேக்க கடவுளர்களை முழுமையாக மறுத்துவிட்டார். இதனாலேயே நாத்தீக குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது. இந்த கொள்கையினால் இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று குற்றம்சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

உயிர் குறித்து இருமைதத்துவத்தை முன்வைத்தார். அதாவது உடலும் உயிரும் தனித்தவை என்ற தத்துவம். உடல் இயங்கக்கூடியது. உயிர் இயக்கக்கூடியது. உடல் அழியக்கூடியது. உயிர் அல்லது ஆன்மா அழிவில்லாதது. அதாவது உடல் இயங்கும் அற்றலை பெற்றிருக்கும். அந்த உடலை ஆன்மா இயக்கும் இதுதான் இருமைதத்துவம்

பிளாட்டோ:


பிளாட்டோ தனது “ரீபப்ளிக்” என்ற புத்தகத்தில் உயிர் குறித்து விளக்கியுள்ளார். இதற்கு முன்சென்ற தத்துவவியலாளர்கள் கூறிவந்த உடலின் அனைத்து பகுதியிலும் உயிர் என்ற பொருள் உடுறுவியுள்ளது, ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி ஆன்மா உள்ளது என்ற கருத்தியல்களை மறுத்தார். பிளாட்டோ முன்வைத்ததும் இருமைத்துவம் தான். அதாவது ஆன்மாவும் உடலும் தனித்தனியானவை.

       உயிர் என்பது மூன்று கூறுகளால் ஆனவை. 1. கடவுளிடம் இருந்து வந்த பகுத்தறியும் அழிவில்லா பகுதி, 2. உணர்வைத்தரும் ஆன்மா பகுதி 3.இவை இரண்டையும் இணைக்கும் பகுதி. ஆகிய மூன்று பகுதிகளை கொண்டதுதான் உயிர் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆன்மாவின் புணர் ஜென்மம், வேறு ஜென்மம், ஒரு சரிரத்தில் இருந்து மற்றொரு சரிரத்திற்கு செல்லுதல் போன்ற கருத்தை முன்வைத்தார். ஆன்மாவானது மரணத்திற்கு பிறகு ஒரு இடைநிலையில் காக்க கூலி வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும். பல ஜென்மங்கள் எடுத்து தூய்மை அடைந்த ஆன்மாவே இறுதியில் சுவனத்தில் அதன் இடத்தை அடைந்து கொள்ளும்.
பகுத்தறியும் ஆன்மாவானது மூன்று நிலைகளாக காணப்படுகிறது:
1. உன்மையுடன் தொடர்புடைய அறிவாக 
2. கூட்டாக செயல்படும் போது கருத்தாக 
3. இல்லாதவை குறித்து அறியாமையாகவும் இருக்கிறது.


          அறிவாற்றல் என்பது ஒரு உணர்ச்சியே.  மேலும் ஆன்மா ஒரு வஸ்தாகும். ஆக நினைவாற்றலும் கற்பனையும் வஸ்துக்களே. பகுத்தறியும் உயிரானது சுவனத்திற்கு மிக நெருக்கமானது. இதுதான் மூளையை மையமாக கொண்டது. உணர்வைத்தரும் பகுத்தறியாத உயிரின் பகுதி தண்டுவடத்துடன் தொடர்புடையது. தண்டுவடமும் மூளையும் தான் உயிர் சக்தியை எடுத்து செல்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். மேலும் இணக்கும் உயிர் பகுதியானது இதயத்தில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.
ஒன்றை குறித்த எண்ணம் என்பது உள்ளத்தில் முற்பிறவியில் ஏற்பட்ட பதிவாகும். அவற்றை கல்வியின் மூலம் வெளிக்கொணர்கிறோம் என்று கூறினார்.

அரிஸ்டாடில்:
உடலின் செயல்பாடுதான் உயிர். உயிர் உடலில் இருந்து தனித்த பொருள் அல்ல. உடலில்லாமல் உயிர் இல்லை. உயிர் இல்லாமல் உடல் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார். உயிருக்கு தூய்மைபடுத்துதல் அல்லது பல பிறப்பிகளை அடைந்து தூய்மை பெறும் என்பன் போன்ற எந்த தேவையும் அற்றது. மேலும் உயிர் என்பது ஓர் இயக்கவிதி. அதுவே உயிர் வாழ்க்கையின் முதல் தோற்றுவாய். உயிரின் ஏனைய ஆற்றல்களான உணவு உட்கொள்ளுத, நகர்வு , சிந்தனை போன்றவையாவும் உயிர்வாழ்க்கையின் இரண்டாம் தோற்றுவாய். ஒரு உயிர் மரணத்திற்கு பிறகு வெறு ஓர் அசையும் உடலோடு கலந்து விடுகிறது. ஆனால் முற்பிறப்பின் கருத்தியல்களை அது கடத்திச் செல்வதில்லை. உடலின் உள்ளுறுப்புகள் என்பவை வெப்பத்தையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்துகொள்ளும் இயந்திரங்களாகும். அனைத்து உணர்ச்சிகளும் மூளையுடன் தொடர்புடையவை அல்ல மாறாக இதயத்துடன் தொடர்புடையவை. மேலும் உயிரினங்களின் உயிரை மூன்று வகையாக வரையறுத்தார்.
1.தாவர உயிர்
2.விலங்கின் உயிர்
3.மனித உயிர். 

வரும் தொடரில் இஸ்லாமும் அறிவியலும் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்று காண்போம் இன்ஷா அல்லாஹ்.

உயிர் :1.உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

       “குரைஷியர்கள் அல் நள்ர் பின் அல் ஹாரிஸ் மற்றும் உக்பா பின் அபூ முயீத் ஆகியோரை “ முஹம்மது குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கேட்டுவாருங்கள். அவர்கள்தான் முதல் வேதத்திற்கு உரியவர்கள். நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்கள்” என கூறி அவர்கள் இருவரையும் மதீனாவில் இருந்த யூத ரப்பீக்களிடத்தில் அனுப்பிவைத்தனர். ஆகவே அல் நள்ர் மற்றும் உக்பா இருவரும் மதீனா சென்று யூத ரப்பீக்களிடத்தில் இறைத்தூதர் குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கூறினர். அவ்விருவரும் “நீங்கள் தாம் தவ்ராத்தையுடைய மக்கள், எங்கள் இந்த மனிதர் குறித்து அறிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்” என்றும் கூறினர்.

          அதற்கு அந்த ரப்பீக்கள் அவர்களிடத்தில் “ நாங்கள் கூறும் இந்த மூன்று விஷயம் குறித்து அவரிடம் கேளுங்கள். இந்த மூன்றும் குறித்து அவர் பதிலளித்தால் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தாம். அவ்வாறில்லாமல் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள்.

      1.“முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிபிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?

               2.பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த பயணி ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?

               3.ரூஹ்(உயிர்) என்றால் என்ன?

               இந்த மூன்று கேள்விகளை கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதிலளித்தால் அவர் இறைத்தூதர்தான், அவரை பின்பற்றுங்கள். அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள். அவர்கள் நள்ர் மற்றும் உக்பா குரைஷியரிடம் திரும்பி வந்தனர்.

      “குரைஷியரே! உங்களுக்கும் முஹம்மதிற்கும் இடையில் முடிவு செய்வதற்கு தேவையான தீர்வை கொண்டுவந்துள்ளோம். ரப்பீக்கள் சிலவற்றை குறித்து கேள்வி எழுப்புமாறு கூறியுள்ளனர்.” என்று கூறினர். அவை என்ன என்பதையும் குறைஷியரிடம் விவரித்தனர்.

            ஆகவே குறைஷியர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல கேள்விகளை தூதரிடம் முன்வைத்தனர். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் “நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை விடையளிக்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். நபி(சல்) அவர்கள் இன்ஷா அல்லாஹ் –இறைவன் நாடினால் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள்.

                 குரைஷியர்களும் சென்று விட்டனர். ஆனால் நபி(சல்) அவர்கள் எந்த வஹி அறிவிப்பும் இன்றி, ஜிப்ரில்(அலை) அவர்களது வருகைக்காக 15 நாட்கள் காத்திருந்தார்கள். அதனால் மக்காவாசிகள் வதந்திகளை பரப்ப துவங்கினர். “முஹம்மது நாளை பதிலளிக்கிறேன் என்று வாக்களித்தார் ஆனால் 15 நாட்கள் ஆகியும் நாம் கேட்ட எதற்கும் பதிலளிக்கவிலை” என்று பரப்ப துவங்கினர். வஹியின் தாமதம் இறைத்தூதருக்கு மிகப்பெரிய சிக்கலையும், மக்காவாசிகளின் சொற்கள் மிகப்பெரிய மனவேதனையையும் அளித்தது.

                அதன் பிறகு ஜிப்ரில்(அலை) அவர்கள் எல்லா புகழும் உடைய ஏக இறைவனிடம் இருந்து காஃப் அத்தியாயத்தை கொண்டுவந்தார்கள். அதில் அவர்களது வேதனைக்கான காரணம் குறித்தும், அந்த வாலிபர்கள் குறித்தும், அந்த பயணி குறித்தும் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏக இறைவன் குறிபிட்டான், “ (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (17:85.) (இப்னு கஸீரின் அல் சீரா அல் நபவிய்யா ப.எண்:351, பாகம் 1)

             மேற்குறிபிட்ட சம்பவமானது நபி(ஸல்) அவர்களின் மக்காவின் ஏகத்துவ பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் நடை பெற்றதாகும். அங்கிருந்த குறைஷியர்கள் யூத ரப்பீகளிடம் ஆலோசனை செய்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விதான இவை மூன்றும். உயிர் குறித்த இஸ்லாமிய பார்வையானது இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நாத்திகர்களும் கிறித்தவ மிசனரிகளும் உயிர் குறித்த இஸ்லாமின் பார்வையை விமர்சனம் செய்து வருகின்றனர். இஸ்லாம் உயிர் குறித்து அப்படி என்னதான் கூறுகிறது. அது அறிவியலுடன் எவ்வளவு பொறுந்துகிறது என்பதை ஒத்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்