பக்கங்கள் செல்ல

Wednesday, September 28, 2022

உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் ஓதலில் உமர்(ரலி) அவர்கள் சில பகுதிகளை விட்டு விட்டதாக கூறுகிறார்கள். என்வே உபை இப்னு கஅப்(ரலி) அல்லாத நபித்தோழர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட குர்ஆன்தான் இன்றிருப்பது என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.


ஆதாரம் 1: அல்குர்ஆனை உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
         இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புஹாரி 3806)

ஆதாரம் 2: உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்ற உமர்(ரலி) அவர்களது கருத்து

உமர்(ரலி) அறிவித்தார்.
         எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். (புஹாரி 4481)
மேற்குறிபிட்ட ஆதாரங்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதம்:

            நபி(சல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட குர்ஆன் ஆசிரியரான உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்று உமர்(ரலி) கூறுகிறார். எனவே உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலின் மீது அமையாத இன்றைய குர்ஆன் நபி(சல்) அவர்களின் ஓதலில் அமையவில்லை. எனவே குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பதே இஸ்லாமோஃபோபுகளின் வாதம் ஆகும். இன் ஷா அல்லாஹ் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கான விளக்கத்தை காண்போம்.

உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள்

            முன்சென்ற தொடரில் இதே அறிவிப்பானது ((புஹாரி 3806) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் குர்ஆனை கற்றுக்கொடுக்க இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் நபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர் என்பதனை கூறுவதாக குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் இடம் பெறும் ஒவ்வொரு நபித்தோழர்களும் இதே நிலையில் இருப்பவர்கள்தான். ஆனால் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே குர்ஆனை முழுமையாக கற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகிறன.

கதாதா(ரஹ்) அறிவித்தார்.
                இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ

ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது:                                              
    நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸகரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது. ( மஜ்ம உல் கபீர் 2092)

                மேற்குறிபிட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் காணும் போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே முழு குர்ஆனையும் கற்றிருந்தார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆன் தொகுப்பு குழுவிலும் நியமித்தார்கள் என்பதை பின்வரும் செய்தி கூறுகிறது.
أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنبأ أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد قال وأنا محمد بن عمر حدثني هشيم عن المغيرة عن مجاهد أن عثمان أمر أبي بن كعب يملي ويكتب زيد بن ثابت ويعربه سعيد بن العاص وعبد الرحمن بن الحارث
        உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) அவர்களை ஓதவும், அதை ஜைத் இப்னு தாபித்(ரலி) அவர்கள் எழுதவும் , அதை ஸயீத் இப்னு அல் ஆஸ்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அல் ஹாரித்(ரலி) அவர்களை பிரதி எடுக்கவும் கட்டளை இட்டார்கள் (தாரிக் திமிஸ்க் 34/276:3779)

அதனால்தான் மேற்குறிப்பிட்ட செய்தியை ஒத்த செய்தியை அலி இப்னு அப்துல் மாலிக் தனது நூலான கன்சூல் உம்மாலில் பதிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
عن عطاء أن عثمان بن عفان لما نسخ القرآن في المصاحف أرسل إلى أبي بن كعب، فكان يملي على زيد بن ثابت وزيد يكتب ومعه سعيد بن العاص يعربه، فهذا المصحف على قراءة أبي وزيد.

அதாஃ அவர்கள் கூறியதாவது:                             
    உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுத்த போது, உபை இப்னு கஅப்(ரலி)யை அழைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் ஓதிக்காண்பிக்கவும்,அதை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) எழுதவும் கட்டளை இட்டார்கள். அவருடன் ஸயீத் (ரலி) அவர்களும் அதை செய்தார்கள். அதனால் இந்த முஸ்ஹஃப் உபை மற்றும் கஅப் அவர்களது ஓதலில் அமைந்ததாகும் .(கன்சூல் உம்மால் 4789)

            மேலே நாம் குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் முன்சென்ற தொடர்களில் வேறு பல கட்டுரைகளில் கண்டவைதான். எனவே இன்றைய குர்ஆன் என்பது உபை இப்னு கஅப்(ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரின் ஓதலில் அமைந்த குர்ஆன் எனும் போது இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் " உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலின் மீது அமையாத இன்றைய குர்ஆன் நபி(சல்) அவர்களின் ஓதலில் அமையவில்லை" என்ற வாதம் அர்த்தமற்றது.


முதலில் உமர்(ரலி) அவர்களால் அறிவிக்கப்படும் அந்த ஹதீஸை பார்ப்போம்.

உமர்(ரலி) அறிவித்தார்.
                   எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.(புஹாரி 4481)
             மேற்குறிபிட்ட செய்தியில் உபை(ரலி) அவர்களது சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்று உமர்(ரலி) கூறுவதன் காரணமும் முழுமையாக பதியப்பட்டுள்ளது. ஆகவே குர்ஆனில் அல்லாஹ்வால் எடுத்துக்கொள்ளப்பட்ட அல்லது மாற்றப்பட்ட சொற்களையும் உபை(ரலி) அறிவிப்பார் அந்த சொற்களை நாங்கள் விட்டுவோம் என்று உமர்(ரலி) கூறுகிறார்கள். மேலும் உபை(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகிய இருவருக்கும் மத்தியில் நிகழ்ந்த சில கருத்துரையாடல்களை இங்கு பதிவிட்டு விளக்கினால் உமர்(ரலி) அவர்கள் எந்த பொருளில் கூறுகிறார் என்பதும், உபை(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்புக்குழுவில் இடம்பெற்றும் உபை(ரலி) அவர்களது ஓதல் என்று ஹதீஸ்களில் காணப்படும் சில வசனங்களின் மிகைபடுத்துதல் ஏன் இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதும் விளங்கும்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ قُسْطٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، وَغَيْرُهُ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، أَنَّ أَبَا الدَّرْدَاءِ، وَأَصْحَابًا لَهُ خَرَجُوا بِمُصْحَفِهِمْ حَتَّى قَدِمُوا الْمَدِينَةَ يُثْبِتُونَ حُرُوفَهُ عَلَى عُمَرَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ يَقْرَأُ عَلَيْهِمْ آيَ {إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ} [الفتح: 26] (وَلَوْ حَمَيْتُمْ كَمَا حَمَوْا لَفَسَدَ الْمَسْجِدُ الْحَرَامُ).........فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا أُبَيُّ، اقْرَأْ. فَقَرَأَ كَمَا أَخْبَرُوهُ فَقَالَ: يَا زَيْدُ، اقْرَأْ. فَقَرَأَ قِرَاءَةَ الْعَامَّةِ فَقَالَ عُمَرُ: اللَّهُمَّ لَا عِلْمَ إِلَّا كَمَا قَرَأْتَ فَقَالَ أُبَيٌّ: أَمَا وَاللَّهِ يَا عُمَرُ إِنَّكَ لَتَعْلَمُ أَنِّي كُنْتُ أَحْضُرُ وَيَغِيبُونَ،وَإِنْ شِئْتَ لَا أَقْرَأْتُ أَحَدًا آيَةً مِنْ كِتَابِ اللَّهِ،وَلَا حَدَّثْتُ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: اللَّهُمَّ غَفْرًا، قَدْ جَعَلَ اللَّهُ عِنْدَكَ عِلْمًا، فَأَقْرِئِ النَّاسَ وَحَدِّثْهُمْ. قَالَ: فَكَتَبُوهَا عَلَى قِرَاءَةِ عُمَرَ وَزَيْدٍ "
அபீ இத்ரீஸ் கூறியதாவது, 
      "அபூதர்தா(ரலி)யும் அவர்களது தோழர்களும் அவர்களது குர்ஆன் பிரதிகளுடன், உமர்(ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரிடம் தங்களது எழுத்துக்களை உறுதி செய்ய மதீனா மாநகரத்திற்கு வந்தார்கள். உபை இப்னு கஅப்(ரலி) "(ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்தியபோது, அவர்கள் வைராக்கியம் கொண்டது போல் நீங்களும் வைராக்கியம் கொண்டால் மஸ்ஜித் அல் ஹரம் பாழ்படுத்தப்பட்டிருக்கும் (அல்குர்ஆன் 48:26) என்று ஓதினார்கள்........ உமர்(ரலி), "உபையே! நீங்கள் ஓதுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போல ((உபை(ரலி))அவர்கள் ஓதினார்கள். பிறகு உமர்(ரலி) அவர்கள்" ஸைத்தே! நீங்கள் ஓதுங்கள்", என்று கூறினார்கள். கிராத் அல் ஆம்மா (பெரும்பான்மை ஓதல்)-ஐ ஸைத்(ரலி) ஓதினார்கள். பிறகு (உபை அவர்களிடம்) "அல்லாஹ்வின் மீதானையாக நீங்கள் ஓதியதை போன்று நான் அறியவில்லையே",என்று கூறினார்கள். அதற்கு உபை(ரலி) “அல்லாஹ்வின் மீதானையாக, நான் (நபி(ஸல்) அவர்களிடம்) இருந்த தருணங்களில் நீங்கள் இல்லாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கூறினீர்கள் என்றால் நான் அல்லாஹ்வின் வேதத்தின் ஒரு ஆயத்தையும் ஓத மாட்டேன், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸையும் அறிவிக்கவும் மாட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், "அல்லாஹ் பிழைபொறுப்பவன், அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தை அளித்துள்ளான். எனவே மக்களுக்கு ஓதிக்காட்டுங்கள், ஹதீஸ்களையும் அறிவியுங்கள்", என்று கூறிவிட்டார்கள். " உமர்(ரலி) மற்றும் ஸைத்(ரலி) ஆகியோரின் ஓதலை எழுதிக்கொள்ளுங்கள்" என்று (உபை(ரலி)) கூறிவிட்டார்கள்.....(இப்னு ஸப்பா அவர்களது தாரிக் அல் மதீனா 2/709-710)
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻐﻔﺎﺭ ﺑﻦ ﺩاﻭﺩ، ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ، ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ، ﻋﻦ ﺑﺠﺎﻟﺔ، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ، ﻣﺮ ﺑﺮﺟﻞ ﻳﻘﺮﺃ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ (اﻟﻨﺒﻲ ﺃﻭﻟﻰ ﺑﺎﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻣﻦ ﺃﻧﻔﺴﻬﻢ ﻭﺃﺯﻭاﺟﻪ ﺃﻣﻬﺎﺗﻬﻢ، ﻭﻫﻮ ﺃﺑﻮﻫﻢ) ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ: ﻻ ﺗﻔﺎﺭﻗﻨﻲ ﺣﺘﻰ ﻧﺄﺗﻲ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ . ﻓﺄﺗﻴﺎ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺃﺑﻲ، ﺃﻻ ﺗﺴﻤﻊ ﻛﻴﻒ ﻳﻘﺮﺃ ﻫﺬا ﻫﺬﻩ اﻵﻳﺔ؟ ﻓﻘﺎﻝ ﺃﺑﻲ: ﻛﺎﻧﺖ ﻓﻴﻤﺎ ﺃﺳﻘﻂ .

பஜாலா கூறியதாவது:   

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் ஒரு மனிதரை கடந்து செல்லும் போது குர்ஆன் பிரதியில் இருந்து "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். அவர் அவர்களுக்கு தந்தையாவார்" (அல்குர்ஆன் 33:6), (அவர் அவர்களுக்கு தந்தையாவார் என்பது அதிகமாக இடம்பெற்றுள்ளது) என்று ஓதுவதை செவியுற்றார்கள். உடனே, உமர்(ரலி) அவர்கள், " நாம் உபை இப்னு கஅப்பிடம் செல்லும் வரை எங்கும் சென்று விடாதே" என்று கூறினார்கள். அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) யிடம் சென்றவுடன் உமர்(ரலி), “ உபையே !இந்த மனிதர் ஓதியதை கேட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உபை(ரலி), “நான் கவனக்குறைவாக இருந்த போது ஏற்பட்டுவிட்டது" என்று பதிலளித்தார்கள். (ஃபாதாயில் அல் குர்ஆன் 1/322)

        இதே செய்தி ‘ அந்த மனிதர் "உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் இவ்வாறே இருந்தது" என்று கூறினார் என்பது உள்ளிட்ட அதிகப்படியான தகவலுடன் முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 18748ல் பதியப்பட்டுள்ளது.

மேற்குறிபிட்ட செய்திகளை பார்க்கும் போது, பின்வரும் முடிவுகளை நாம் பெறமுடியும்
      
     1. உபை(ரலி) அவர்களது ஓதலில் இருக்கும் அதிகப்படியான சொற்கள் நபி(சல்) அவர்களால் ஆரம்ப காலத்தில் ஓதிக்காண்பிக்கப்பட்டது. உபை(ரலி) அவர்களது ஓதலில் இருக்கும் அதிகப்படியான சொற்கள் கிராத் அல் ஆம்மா அல்லது கிராத் அல் ஆகிராவில் இடம் பெறவில்லை. ஆகவே கிராத் அல் ஆகிராவில் இடம் பெறாத அதிகப்படியான சொற்களையே உமர்(ரலி) விட்டுவிட கூறுகிறார்கள்.

    2. நபி(சல்) அவர்களால் இறுதியாக ஸைத் இப்னு ஸாபித்(ரலி)யிடம் கூறப்பட்ட கிராத்தே (கிராத் அல் ஆம்மா) முஸ்ஹஃப்பில் இடம்பெற தகுதிவாய்ந்த அதிகாரப்பூர்வ கிராத், என்பதே நபி(சல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட, நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே குர்ஆன் ஓதலை முழுமையாக கற்ற உபை(ரலி) அவர்களது முடிவாகும். அதனால்தான் உபை(ரலி) அவர்களது ஓதல் என்று ஹதீஸ்களில் காணப்படும் சில வசனங்களின் மிகைபடுத்துதல் இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை. அல்லாஹூ அஃலம்.  

No comments:

Post a Comment