பக்கங்கள் செல்ல

Friday, September 9, 2016

ஹஜ் பயணம் - 3 - "இஹ்ராம்"

ஹஜ் பயணம் - 3 -  "இஹ்ராம்"
-----------------------------

நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை குறைந்தது வருடம் ஒரு முறையாவது பயிற்சிக்கு அனுப்புவதை பார்க்கலாம்...இது அவர்களின் திறமையை மெருகூட்டி, நிறுவனங்களின் செயல்பாட்டை அதிகப்படுத்தும்.

கத்தார் அரசர் "இஹ்ராம்" உடையுடன் 
ஹஜ் என்பது எதோ புனிதத் தளங்களை சுற்றிபாத்து வருவது என்பதல்ல.  கடுமையான பயிற்சித் திட்டங்கள் கொண்ட  ஒரு பயிற்சி முகாம். சில குறிப்பிட்ட  நாட்களில் உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.


தேர்ச்சி அடைந்தவர்கள்  சிறந்த மனிதனாகின்றனர், தோல்வி அடைந்தவர்கள் திரும்பவும் அதே வாழ்க்கைக்குச் செல்கின்றனர்.

ஹஜ் பயணம் செல்பவர்களின் முதன்மைச் செயல் இஹ்ராம்.இஹ்ராம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த புனித நிலையில் பிரவேசித்தல் (Special State of Purity)  என்பதாகும்.

இந்த நிலைக்குச் சென்றவுடன், சில காரியங்கள் தடுக்கப்படுகின்றன. இதில் எந்தக் காரியம் மீறப்பட்டாலும், "இஹ்ராம்" எனும் புனித நிலையை இழந்து விடுகின்றது . இதில் ஆண்கள் வயது, சமூக மற்றும் பொருளாதார வேறுபாடில்லாமல்  ஒரே வகையான ஆடையை அணியவேண்டும். இதன் ஒரு அம்சமாகத்  தான்  ஆண்கள் தைக்கப்படாத இரு வெள்ளை ஆடைகளை அணிவது மற்றும் பெண்கள் இறுக்கமில்லாத, எளிமையான எந்த ஆடைகள்  வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம்.

ஆடைகளின் விடயத்தில் கண்டிப்பான இந்த சட்டம், பயணிகள் தங்களின்  பயணத்திற்கான நோக்கத்தில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சமூக  மற்றும் பொருளாதார அந்தஸ்த்திற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கப்படக் கூடாது என்பது  தான்.

எப்போது ஒருவர் இந்த ஆடைகளை அணிந்து  விட்டாரோ, அப்போதே அவர் சிறப்புவாய்ந்த  இந்த புனித நிலையில் பிரவேசித்து விட்டார். இது மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.  தன்னுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டும். நோன்பு  வைத்துள்ளபோது எவ்வாறு வீண் செயல்களிலிருந்து  தவிர்த்துக் கொள்கின்றோமோ, அதை விட அதிகமாக இங்கே பேணுதல் வேண்டும்.

இஹ்ராம் உடை அணிந்துள்ள நிலையில் இறந்துவிட்டால், அந்த உடையை வைத்தே அடக்கம் செய்து விடுவார்கள். எவ்வளவு உயர்ந்த பொறுப்பிலிருந்தாலும் சிறப்பு சலுகைகள் இல்லை...மக்களும்  அந்த உடையோடு அடக்கம் செய்வதையே விரும்புகின்றனர்.

20 லட்சத்திற்கும் அதிககமாக பல  நாடுகளிலிருந்தும் கூடும் மக்கள், எந்த வித சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடாமல்,  ஒரு  செடிக்குக்  கூட எந்த பாதிப்பும் இல்லாமல் களைந்து செல்ல முடிகின்றது என்றால்,  இந்த பயிற்சித் திட்டத்தின் தாக்கத்தை உணர்ந்து கொள்ளலாம்.
ஹஜ் பயணத்தின் போது இறந்த பெரியவரும், சிறுவனும் 

ஒரே  ஊரில்  சண்டையிட்டுக் கொள்ளும்  இரு நபர்கள் அங்கே சென்றவுடன்,  சலாத்தைக் (சாந்தியைக்) கொண்டுதான் பேசிக்கொள்ள முடியுமே   தவிர, சொந்தக் பகைமையைக் கொண்டு வெறுப்பு காட்ட முடியாது.

உண்மையான "இஹ்ராமை" ஏற்றவர்,  சக  மனிதன் மீது வன்முறை காட்ட முடியாது.  அது ஹஜ்ஜின் பயணத்தின் போது  மட்டும் அல்ல... வாழ்நாள்  முழுவதும் தான்.

மன நிலையில் மாற்றம் ஏற்பட்டவர்கள் பயிற்சியில் வெற்றி கண்டவர்கள்.. எந்த வித மாற்றமும் இல்லை என்றால், தன்னுடைய நேரத்தையும், செல்வத்தையும் வீணடித்தவர்கள்.



பார்க்க: ஹஜ் பயணத்  தொடர்


No comments:

Post a Comment