பக்கங்கள் செல்ல

cross tab2

Showing posts with label ஸகாத். Show all posts
Showing posts with label ஸகாத். Show all posts

Wednesday, May 6, 2015

இஸ்லாம்: விமர்சனங்களும் பதில்களும் பகுதி - 01 - ஜிஸ்யா வரி



ஜிஸ்யா வரி

சமூக இணையத்தளங்களில் இஸ்லாத்தின் விரோதிகளால் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றது. இதற்கு இஸ்லாத்தின் விரோதிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம் ஜிஸ்யா வரியாகும். ஜிஸ்யா என்றால் என்ன? அது ஏன்? என்பதை பார்ப்போம்.

இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது. இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள்.

இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றது?

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஸகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால் நடைகள், விளைவிக்கும் தானியங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் ஸகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஸகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸகாத் என்பது இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஸகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப் போருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஸகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஸகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

1. முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

2. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸகாத் வரி விதிப்பது.

3. முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறு விதமான வரி விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லி மல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவார்கள். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கி விட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதவர்களும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஸகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்த வரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஸகாத் அமைந்துள்ளது.

இந்த ஸகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது, இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள், வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஸகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

ஸகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஸகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும், உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்டுவார்கள்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். இயன்ற வரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஸகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

"ஸகாத்" என்ற வகையிலில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே "ஜிஸ்யா" எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பல மடங்கு அதிகமாக வரி செலுத்தினர்.

இஸ்லாமிய ஆட்சி நடந்த நாடுகளில் பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத் தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

நன்றி: இந்தப்பதிவை உருவாக்கியவருக்கு! (Facebook இல் இருந்த எடுத்த கட்டுரை)