பக்கங்கள் செல்ல

cross tab2

Showing posts with label பிரிவு. Show all posts
Showing posts with label பிரிவு. Show all posts

Tuesday, April 21, 2015

அர்த்தமுள்ள கேள்வி -09- முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?



நாத்திகர்களும், ஏனைய மதத்தினரும் முன்னவைக்கும் குற்றச்சாட்டுகளில் பிரதானமான ஒன்றுதான் இது, அதாவது இஸ்லாத்தில் சாதி, தீண்டாமை இல்லை என்று சொல்லப்படுகின்றதே? இந்து, கிறித்தவ மதம் போல் ஷியா, சுன்னி என்று பிரிவுகள் இருக்கின்றதே அவர்கள் இடையில் சண்டையும் இடம்பெறுகின்றதே இதற்கு எல்லாம் காரணம் என்ன???

கேள்வி 1 : இஸ்லாமிய மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் வாசகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விடையளிப்பது?
சாஜிதா ஹுஸைன், சென்னை.

கேள்வி 2: முஸ்லிம்களிடத்திலும் ஜாதிப் பிரிவுகள் இருப்பதாக என் இந்து நண்பர் கூறினார். மற்ற பிரிவுகளுக்கு விளக்கம் சொல்லும் என்னால் ஷியா-சன்னி பிரிவுக்கு விளக்கம் தர முடியவில்லை?
கௌதியா ஹாஜா, அதிரை.

கேள்வி 3 : முஸ்லிம்களிடையே சாதிப் பிரிவுகள் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால், திருமண விளம்பரங்கள் வெளியிடும் போது மரைக்காயர், இராவுத்தர், லெப்பை போன்ற பிரிவுகளின் பெயரிலே வெளியிடுகின்றனரே எதனால்?
அமல்ராசன், எழுவை-628 617.

பதில்: இஸ்லாமிய மாக்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது தவறாகும்.
முஸ்லிம்களிடம் ஏன்இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்க வேண்டும். இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லை என்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.
ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.

வர்ணம் அடிப்படையிலான பிரிவுகள் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் கிடைக்கக் கூடியவை. முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகள் மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மூலம் ஏற்பட்டவை. தலித் சமுதாயத்தில் பிறந்தவர் ஒருக்காலும் அவர் என்ன தான் முயன்றாலும் ஐயராக முடியாது; முதலியாராக முடியாது; செட்டியாராக முடியாது.

ஆனால் ஷியாப் பிரிவில் இருந்தவர் அக் கொள்கையிலிருந்து விலகி எந்த நிமிடத்திலும் சன்னி பிரிவில் சேர்ந்து விட முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்தவர் அப்பிரிவில் அவருக்கு விருப்பமில்லா விட்டால் எந்த நிமிடமும் ஷியாப் பிரிவில் சேர முடியும்.

ஆன்மீகத் தலைவரிடம் பைஅத் (தீட்சை) பெறுதல் சமாதிகளை வழிபடுதல்
நபிகள் நாயகத்தின் வாரிசுகள் மட்டுமே ஆள்வதற்கு உரிமை பெற்றவர்கள் என நம்புதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ தான் நபிகள் நாயகத்துக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என நம்புதல்
 இவை ஷியாக் கொள்கையில் சில.
இக்கொள்கைகளை ஏற்றவர்கள் ஷியா எனவும், ஏற்காதவர்கள் சன்னி எனவும் அழைக்கப்பட்டனர். இன்றைக்கும் கூட, ஷியாப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தனது கொள்கை தவறானது என உணர்ந்து சன்னிப் பிரிவில் சேரலாம். யாரும் தடுக்க முடியாது.
இது போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல.

இது வர்ணாசிரமத்துக்கும் முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு. மேலும் வர்ணாசிரமதர்மம் என்பது தீண்டாமையை நிலை நாட்டுவதற்காகவும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். சன்னிகள் ஷியாக்களைத் தீண்டாக்தகாதவர்கள் என்று கருதுவதில்லை. அது போல் ஷியாக்களும் கருதுவதில்லை. தவறான கொள்கையில் உள்ளனர் என்று ஒருவர் மற்றவரைப் பற்றி கருதுகிறார்களே தவிர பிறப்பால் தாமே உயர்ந்தவர்கள் என்று எந்தப் பிரிவும் கருதுவதில்லை. அடுத்து முஸ்லிம்கள் ஏன் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற கேள்விக்கு வருவோம். பொதுவாக மனிதர்களிடையே எப்படியெல்லாம் சண்டைகள் நடக்கின்றன என்பதைக் கவனித்தால் இக்கேள்விக்கு சரியான விடை காணலாம்.

ஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன. ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன. ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே எற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.

இன்னும் சொல்வதானால் இவர்களிடையே சண்டைகள் நிலவிடக் காரணம் இஸ்லாத்தின் போதனைகளை அவர்கள் கைவிட்டது தான். மரைக்காயர் என்பது மரக்காயர் என்ற சொல்லின் திரிபாகும். மரக்கலாயர் என்றால் மரக்கலம் (படகு) சார்ந்த தொழில் செய்பவர் என்று பொருள். ஒரு காலத்தில் கடல் வழியாக வாணிபம் செய்வதில் முஸ்லிம்கள் முன்னணியில் இருந்தனர். மரக்கலம் வழி யாக சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்ததால் அவர்கள் மரக்கலாயர் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர் இது மரைக்காயர் என்று ஆகிவிட்டது. மரக்கலம் சார்ந்த தொழில் செய்தவர்கள் மரக்காயர் என்று தம்மைக் குறிப்பிட்டதை நாம் ஏற்றுக் கொள்வோம். அந்தத் தொழில் செய்யாதவர்களும் தம்மை மரைக்காயர் என்று குறிப்பிட்டுக் கொள்வதால் இது சாதியைப் போல் தோற்றமளிக்கிறது. யானையைப் பயிற்றுவிப்பவர் மாவுத்தர் என்று குறிப்பிடப்படுவது போல குதிரையைப் பயிற்றுவிப்பவர் ராவுத்தர் என்று குறிப்பிடப்படுவார். அன்றைய முஸ்லிம்களில் பலர் அரபு நாட்டுக் குதிரைகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயிற்றுவித்து பாண்டிய மன்னர்களிடம் விற்று வந்தனர். இதனால் அவர்கள் ராவுத்தர் எனப்பட்டனர். ஆனால் குதிரையுடன் எந்தத் தொடர்புமில்லாதவர்கள் தம்மை ராவுத்தர் எனக் குறிப்பிடுவதால் இதுவும் ஒரு சாதியைப் போல் தோற்றம் ஏற்பட்டு விட்டது. தமிழக முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்தவர்கள். இம்மண்ணில் பிறந்தவர்களின் வழித்தோன்றல்களாக உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

ஆயினும் மிகக் குறைந்த அளவில் சிலர் அரபு நாடுகளி லிருந்து வந்து நமது நாட்டைத் தங்கள் தாயமாகக் கொண்டு இங்கேயே பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கிவிட்டனர். ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை மற்றவர் அழைக்கும்போது லப்பைக் (வந்துவிட்டேன்) என்று அரபு மொழியில் குறிப்பிட்டு வந்தனர். இதனால் அவர்களின் பெயரே லப்பை என்று ஆகிவிட்டது. பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று லப்பைகள் எனப்படுவோர் அரபு மொழியில் பேசுவதில்லை. அவர்களுக்கு அம்மொழி தெரியாது. இப்போதும் அவர்கள் லப்பை என்று கூறிக் கொள்வதால் இதுவும் சாதியைப் போல் தோற்றமளிக்கிறது. எனவே முஸ்லிம்கள் இதை ஒரு பட்டம் போல் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதே சமயத்தில் முஸ்லிம்கள் மரைக்காயர், இராவுத்தர், என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொள்வதை சாதிப் பிரிவுடன் ஒப்பிடக்கூடாது. ஏனெனில், அனைவரும் ஒரே வழிபாட்டுத் தலத்தில் ஒரே வரிசையில் நின்று தொழுவார்கள். ஒரே தட்டில் மரைக்காயரும், இராவுத்தரும் சாப்பிடுவார்கள்.
திருமண சம்பந்தமும் செய்து கொள்வார்கள்.
ஒரே அடக்கத்தலத்தில் தான் அனைவரும் அடக்கம் செய்யப்படுவார்கள்.
இவர்களுக்கிடையே தீண்டாமையோ, பாரபட்சமோ பிறப்பால் உயர்வு, தாழ்வோ கிடையாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயினும், இஸ்லாத்தில் சாதிகள் உள்ளன என்று பலரும் கருதுவதற்கு இது இடமளிப்பதால் இதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரை கூறியும் வருகிறோம்.

சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து.....