பக்கங்கள் செல்ல

Sunday, March 11, 2018

எதிர் தொடர் 27 ,28 ,29: விண்ணுலகப் பயணமும், பரிந்துரையும்



          நாம் சென்ற ஒவ்வொரு தொடரிலும் இந்த கட்டுரையாளரின் ஒவ்வொரு கட்டுரையில் இடம்பெறும் விமர்சனம் குறித்தும் அதற்கு தக்க ஆதாரத்துடனான பதில்களையும் பார்த்து வருகிறோம். ஒவ்வொருமுறை கட்டுரையாளருக்கு பதிலளிக்க துவங்கும் போதும் மிக கடினமான தளத்தில் இருந்து இந்த கட்டுரையாளரின் கேள்விகள் இருக்கும் என்ற எண்ணம் நமக்கு தோன்றவே செய்கிறது. தான் மிகப்பெரிய வித்தகன் என்ற பிரமாண்ட கற்பனை கோட்டையை மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்த எதிர்தரப்பின் கட்டுரையாளர் படாதபாடு படுகிறார். ஆனால் அவர் வைக்கும் ஒவ்வொரு விமர்சனமும் எவ்வளவு அற்பமானது. ஒரு சாமானியனின் புரிதல் கூட தன்னை ஆய்வாளன் என்று கூறிக்கொள்ளும் கட்டுரையாளரிடம் இல்லையே என எண்ணும் போது வியப்பாக இருக்கிறது. இந்த முறை நையில் சுவர்க்கத்தில் உருவாகுவதாக ஹதீஸ் கூறுவது குறித்தும் ,...கியாமத் நாளின் பரிந்துரை குறித்த அவரது விமர்சனத்தையும் மூன்று கட்டுரைகளாக உருவாக்கியுள்ளார்.(1)(2)(3) அதில் பெறும் பகுதி ஹதீஸ்கள்தான். அதில் விமர்சனம் என்பது மிகக்குறைவுதான். அவை ஒவ்வொன்றுக்கும் பதிலளிப்போம் இன்ஷா அல்லாஹ்.
 நைல் சுவர்க்கத்தில் உருவாகிறதா??
          …”ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்என்று பதிலளித்தார்கள்.…(புகாரி ஹதீஸ்:  7517 )
          மேற்குறிப்பிடும் ஹதீஸை கைகொண்டு இஸ்லாம் நைல் நதி சுவர்கத்தில் உருவாகிறது என்று கூறுவதாக கூறுகிறார் கட்டுரையாளர். ஆனால் இந்த செய்தியை பார்க்கும் சாமனியன் நைல் எடுத்து காட்டப்பட்டது என்று புரிந்து கொள்வார். இன்னும் ஹதீஸை முழுமையாக பார்க்கும் யாரும் தெளிவாக புரிந்து கொள்வார்கள் அதாவது ஒவ்வொரு வானத்திலும் நபிமார்களை சந்தித்தார்கள் என்பதை காணமுடிகிறது. அவர்கள் எல்லாம் எடுத்துக்காட்டப்பட்டார்களே ஒழிய அவர்கள் உண்மையான நபிமார்கள் அல்ல. அவர்கள் எடுத்துகாட்டப்பட்டார்கள். அதுபோல் கியாமத் பிறகு உள்ள சுவர்க்கம் நரகம் எடுத்துக்காட்டப்பட்டது. அதுபோல நைலும் யூப்ரட்டீஸும் எடுத்துக்காட்டப்பட்டது.

          அது குறித்து பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
 وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلا طُغْيَانًا كَبِيرًا (٦٠) 
           (நபியே!) நிச்சயமாக உம்முடைய இவைன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.(அல்குர்ஆன் 17:60)
         மேலும் இந்த வசனத்தை இப்னு அப்பாஸ்(ரலி) பின்வருமாறு விளக்குகிறார்:
 இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.
        "(நபியே! இப்போது) நாம் உங்களுக்குக் காண்பித்த (அந்த இரவுக்) காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் (இந்த) மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்" என்ற (திருக்குர்ஆன் 17:60) இறை வசனத்திற்கு விளக்கம் தரும்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சிகளைக் குறிக்கும். குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரம் என்பது 'ஸக்கூம்' என்னும் (நரகத்திலுள்ள கள்ளி) மரத்தைக் குறிக்கும்" என்று கூறினார்கள். (புகாரி 3888)
       ஆக அல்லாஹ் அழைத்துச்சென்று சான்றுகளை காட்சியாக காட்டினேன் என்று கூறுகிறான். ஆக சுவர்கம் , நரகம், நைல் , யூப்பரட்டீஸ், நபிமார்கள் ஆகிய அனைத்தும் காட்சிகள்தான். இந்த காட்சிகளை ஒவ்வொரு வானத்திலும் அழைத்து சென்று காட்டுகிறான் என்பதுதான் சரியான புரிதல் ஆகும். 
 எடை போடப்படும் போர் வாகனங்கள்:
           மேலும் கட்டுரையாளருக்கு மித மிஞ்சிய ஞானம் குதிரை போர் வாகனங்களைவிட எடை குறைவு என்ற அற்புத கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. ஆனால் அல்லாஹ் தெளிவாக இத்தகைய வாகனத்தையும் உள்ளடக்கியதுதான் அவனது பரிசு என்பதை முன்பே கூறிவிட்டான்.
وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لا تَعْلَمُونَ (٨)
      இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். (அல்குர்ஆன் : 16:8)
      ஆக அவற்றிற்கான கூலிகுறித்தும் இந்த குர்ஆனின் வசனம் விளக்கிவிட்டது. மேலும் இன்றும் போர்களங்களில் குதிரைகள் பயன்பாட்டில்தான் உள்ளது...முற்றும் முதலாக ஒழிக்கப்படவில்லை என்பதை கட்டுரையாளருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
 கேள்விகணக்கின்றி செல்லும் எழுபதுனாயிரம் பேர்
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
          ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.
         இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 5050)
         ஆக பிறரின் குறைகளை மறைக்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு அல்லாஹ் இத்தகைய சிறப்பையும் அல்லாஹ் வழங்கவுள்ளான்.ஆக பிற அடியார்களின் குறை பேசித்திரிவதை இஸ்லாம் கண்டிக்கிறது. இவையெல்லாம் நல்ல பண்புகள் என்பது ஏனோ கட்டிரையாளருக்கு தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைத்துவிட்டதா அல்லது நுனிப்புல் மேய்ந்ததால் வந்த அவல நிலை போலும். சரி நாம் தொடர்வோம்
 திருத்தபடாத அல்லாஹ்வின் தீர்ப்புகள்:
கட்டுரையாளரின் பரிந்துரை பின்வரும் இரண்டு தளத்தில் இருந்துதான் ஏற்பட்டுள்ளது:
1.பரிந்துரை என்பது முரணாக தோன்றுகிறது. இது குர் ஆனிலும் அப்படித்தான் உள்ளது.
 2.பரிந்துரைப்பது என்பது இறைவனின் தீர்ப்பிற்கு முரணானது. அதாவது அல்லாஹ் வழங்கும் தீர்ப்புகள் திருத்தப்படுகிறது.
       பரிந்துரை குறித்த இந்த விமர்சனம் மிக அறிவானதாய் தோன்றினாலும் இந்த விமர்சனமானது போதிய புரிதல் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டதுதான். ஆக முதலில் குர்ஆன் வசனத்தின் முரண் என்ற குற்றச்சாட்டை ஆராய்வோம். அதில் இரண்டு நேரெதிர் வசனத்தை முன் நிறுத்தி நாம் ஆராய்ந்தால் அதுவே போதுமானது. கட்டுரையாளரால் பதியப்பட்ட வசனங்களில் மிகவும் நேர்முரணாக தோன்றும் வசனத்தை ஆய்வு செய்வோம்.
       இன்னும் எந்த ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவிற்கு எந்தப் பலனையும் அளிக்க முடியாத அதற்காக எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத இன்னும் அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்களே அத்தகைய (கியாமத்) நாளை  பயந்து கொள்ளுங்கள் (குர்ஆன் 2::48)
       அந்நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவருக்கு (அவருடைய) சொல்லைப் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர (எவருக்கும்) பரிந்துரை பலனளிக்காது .(குர்ஆன் 20:109)
       ஆக இவ்விரண்டு வசனங்களும் முன்னுக்கு பின் முரணாக தோன்றினாலும் இது முரணானது அல்ல. நீங்கள் குர்ஆனை சற்று ஆழ்ந்து பார்த்தீர்களானால் இந்த விசயம் புலப்படும்.
       முதலில் கட்டுரையாளரின் விமர்சனங்கள் குறித்த விளக்கங்களை அறிவதற்கு முன்பு இதை கருத்தில் கொள்வது சிறப்பாக இருக்கும். அதாவது அல்லாஹ்விடம் காலம் என்பது இப்பூமியில் இருப்பதை விட மாறுபட்டது. அதை குர்ஆன் வசனங்கள் பின்வருமாறு கூறுகிறது.
        வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல்குர்ஆன் : 32:5)
 
       மேலும் அவனிடம் வானவர்கள் ஏறிச்செல்ல எடுக்கும் கால அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்று கூறுகிறது இது போல தீர்ப்பளிக்கும் நாளில் கால அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகள். ஆக அந்த நாளின் துவக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது அதில் யாருடைய இடையூறும் இன்றி அல்லாஹ்வே அந்த தீர்ப்பின் முழு சொந்தக்காரனாக இது நடைபெறுகிறது. அதற்காகத்தான் நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படுகிறது. தீமை செய்த மக்கள் அவர்களுக்கான தண்டனையை அந்த பாலத்தின் மீது முன்பே பெறுகின்றனர். அதாவது இறுதி நாளின் சம்பவங்கள் பின்வரும் வரிசையில் அமைந்திருக்கிறது என ஹதீஸ்கள் விளக்குகின்றன.
  விசாரணை ---> பாலம் அதில் தீமைசெய்தவருக்கான தண்டனை --> பரிந்துரை மற்றும் இறுதித்தீர்ப்பு.
  பின்னர் அல்லாஹ் வாக்களித்ததற்கு இணங்க அதாவது பின்வரும் குர்ஆனின் வசனத்திற்கு இணங்க இறுதித்தீர்ப்பும் பாவமண்ணிப்பும்  வழங்கப்படுகிறது.

وَإِنْ مِنْكُمْ إِلا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا (٧١) ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا (٧٢)
       மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (அல்குர்ஆன் : 19:71,72)

மேலும் பின்வரும் செய்திகள் இவற்றை தெளிவாக விளக்குகிறது:
 முஸ்லிம் 316. அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
        ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் ("உங்களில் யாரும் அங்கு -நரகத்திற்கு- வராமல் இருக்க முடியாது" எனும் (19:71ஆவது) வசனத்தில் இடம்பெற்றுள்ள) "வருதல்" பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
மறுமை நாளில் நாம் இப்படி இப்படி -அதாவது எல்லா மக்களுக்கும் மேல் (உயரமான குன்றின் மீது)- வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் தெய்வச் சிலைகளுடனும் அவர்கள் வழிபட்டுவந்தவையுடனும் அழைக்கப்படுவர். முதலில் முதல் சமுதாயம், அடுத்து அதற்கடுத்த சமுதாயம் (என வரிசை முறையுடன் அழைக்கப்படுவார்கள்). பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து "நீங்கள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?" என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், "நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவன், "நான்தான் உங்கள் இறைவன்" என்பான். மக்கள் "நாங்கள் உன்னை (நேரடியாகப்) பார்க்காதவரை (உறுதி கொள்ளமாட்டோம்)" என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அவர்களை அழைத்துக்கொண்டு நடப்பான். அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைகளுக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு (அந்தப் பாலத்தைக் கடந்து) நம்பிக்கையாளர்கள் மட்டும் தப்பிச்செல்வார்கள். (அவர்களில்) தப்பிச்செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்துவரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).
        பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள்மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக்கொண்டேயிருப்பார்.
 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
 ஆக இந்த பாவமன்னிப்பு எப்படி வழங்கப்படுகிறது என்றால் பரிந்துரை வாயிலாக அதைத்தான் கட்டுரையாளர் குறிபிட்ட செய்தி கூறுகிறது. குர்அனில் பரிந்துரை இல்லை எனக்கூறும் ஆயத்கள் அனைத்தும் நரகத்தின் மீது அமைக்கும் பாலம் அதில் பெறும் தண்டனை குறித்து பேசுகிறது. பரிந்துரையும் பாவமண்ணிப்பும் என்பது அதே நாளில்(நமது நாட்களில் 50 ஆயிரம் வருடங்கள்) அல்லாஹ்வின் இறுதி தீர்ப்பை குறித்து பேசுகிறது. அவ்வளவுதான்.
       அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களைச் சேகரித்துவைத்திருக்கும் ஒருவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவற்றை நரக நெருப்பில் இட்டு, உருக்கி, உலோகப்பாளங்களாக மாற்றி, அவருடைய விலாப்புறங்களிலும், நெற்றியிலும் சூடு போடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய  சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
       ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அவ்வொட்டகங்கள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறிக் குதித்தோடும். அவ்வொட்டகங்களில் கடைசி ஒட்டகம் அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
       ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின் (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஆடுகள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறி,குளம்புகளால் அவரை மிதிக்கும்;       கொம்புகளால் அவரை முட்டும். அவற்றில் கொம்புகள் வளைந்தவையும் இருக்காது;கொம்புகளற்றவையும் இருக்காது. அவற்றில் இறுதி ஆடு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலாவது ஆடு அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணிக் கணக்கிடும் நாட்களில் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை,அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்...,.....( முஸ்லிம் 1805).

இதே கருத்தைத்தான் பின்வரும் செய்தியும் தருகிறது...

     306. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்திற்கே உரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் இறக்கவுமாட்டார்கள்; வாழவு மாட்டார்கள். ஆனால், "தம் பாவங்களால்" அல்லது "தம் குற்றங்களால்" நரக நெருப்பிற்கு ஆளான மக்களை உடனே இறைவன் இறக்கச் செய்துவிடுவான். அவர்கள் (எரிந்து) கரிக் கட்டையாக மாறிவிடும் போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சொர்க்கவாசிகளான இறைநம்பிக்கையாளர்களுக்கு) அனுமதி வழங்கப்படும். உடனே அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகையில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு (சொர்க்கத்திலிருப்பவர்களிடம்) "சொர்க்கவாசிகளே! அவர்கள்மீது தண்ணீரை ஊற்றுங்கள்" என்று கூறப்படும். (அவ்வாறே ஊற்றப்படும்.) உடனே அவர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) மாறி விடுவார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது மக்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமப்புறத்தில் இருந்திருக்கிறார்கள் போலும்" என்று கூறினார்.
ஸஹீஹ் முஸ்லிம்  அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
பரிந்துரை என்பது யாரை சிறப்பிக்க.....?
       ஆக பரிந்துரை தொடர்பான விஷயத்தில் எந்த முரணும் இல்லை. மேலும் பரிந்துரை என்பது அல்லாஹ் தனது முதல் நிலை அடியாருக்கு வழங்கும் சிறப்பு. அதில் நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்படுவது மகாமே இப்ராஹீம் என்ற முதல் படித்தர சிறப்பு.
யஸீத் அல்ஃபகீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
.................... அங்கு ஒரு தூண் அருகில் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அமர்ந்துகொண்டு மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது "நரக விடுதலை பெறுவோர்" பற்றியும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நான், "இறைத்தூதரின் தோழரே! நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? அல்லாஹ்வோ, "நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்" (3:192) என்றும், "அவர்கள் அ(ந்த நரகத்) திலிருந்து வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்படுவார்கள்" (32:20) என்றும் கூறுகின்றானே? ஆனால், நீங்களோ வேறுவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?" என்று கேட்டேன்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "நீங்கள் குர்ஆனை ஓதிவருபவர்தாமே?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அவ்வாறாயின், நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர் தகுதியைப் பற்றி -அதாவது நபியவர்களை அல்லாஹ் ("மகாமு மஹ்மூத்" எனும் உயர் இடத்திற்கு) அனுப்புவானே அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது அவர்கள், "அந்த "மகாமு மஹ்மூத்" எனும் உயர் இடத்திலிருந்து கொண்டுதான் நபி (ஸல்) அவர்களின் மூலம் அல்லாஹ் சிலரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவான்" என்று கூறிவிட்டு, .........................(முஸ்லிம் 320)
       மூன்று தொடரில் அதாவது 27,28,29 ஆகிய தொடர்களில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களையும் காண்போம் இன்ஷா அல்லாஹ்
 1.பரிந்துரையால் தீர்ப்புகள் திருத்தப்படுகிறதா? பரிந்துரையில் முரண்பாடு உள்ளதா?.
       பரிந்துரையால் அல்லாஹ்வின் எந்த தீர்ப்பும் மாற்றப்படவில்லை. அல்லாஹ் தனது வேதத்தில் கூறியவாறு முன்னமே அவன் விதித்தவை தான் நடைபெறுகிறது. நரகத்தின் மீது அமைக்கப்பட்ட பாலத்திலேயே தீர்ப்பு உறுதியாகிறது. யார் நிரந்தர நரகத்திற்கு உரியவர்கள் என்பது இறுதி தீர்ப்பில் அல்லாஹ் வழங்குகிறான்.
       மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (அல்குர்ஆன் : 19:71,72)
 2.பரிந்துரை இல்லாமல் முன்னமே மன்னிப்பு வழங்கி இருக்கலாமே.
       ஒருவர் தான் செய்த தீமைக்கான தண்டனை வழங்கப்படுகிறது. அதன் பிறகு அவரது இறைநம்பிக்கைக்காக சுவர்க்கம் வழங்கப்படுகிறது. பாவமன்னிப்பு வழங்கும் ஒரு முறையைத்தான் பரிந்துரை வாயிலாக அல்லாஹ் நிறைவேற்றுகிறான். ஆக இவை அனைத்தும் அல்லாஹ்வின் தீர்ப்பின் அதாவது பாலத்தின் மீது எட்டப்படும் தீர்ப்பின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. ஆக தீர்ப்புக்கள் எதுவும் பரிந்துரையால் திருத்தப்படவில்லை. அதனால் தான் பின்வரும் வசனம் இதை தெளிவாக உணர்த்துகிறது.
      53:26. வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.
3.மறுமை நாள் முன்னமே நடந்து விட்டதா?
      இதற்கான பதிலும் நாம் முன்னமே கண்டதுதான். அதாவது அல்லாஹ் சுவர்க்கம் நரகம் அனைத்தையும் எடுத்து காட்டினான் என்பதுதான் சரியான புரிதல் என்பதை முன்பே விளக்கியுள்ளோம்


3.மறுமை நாளின் தீர்ப்புகளை அறிந்ததெப்படி?

      அல்லாஹ் காட்டியதை நபி(சல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். எதை காட்டவில்லையோ அதை அறியவில்லை. அவ்வளவே. மேலும் ஆயிஷா ரலி அவதூறு சம்பவத்தை அறிய வில்லை என்பது எல்லாம் நபி(சல்) அவர்களை மனிதர்தாம் என்பதை காட்டுகின்றன. அல்லாஹ் காட்டித்தராத எதுவும் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் இதுகுறித்து இந்த தொடரில் காணவும். 

ii. கினானாவின் தோல் பை;

       இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மேலும் ஆங்கில வலைத்தளத்தில் காணப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் காண்போம்....


iii. நபி(சல்) அவர்கள் தனது நிலை குறித்து தானே அறியவில்லையா?


ஆம் நபி(சல்) அவர்கள் தனது நிலை குறித்து தானே அறியாத காலம் இருந்தது. ஆக நபி(சல்) அவர்கள் தனது நிலைகுறித்து தானே அறியவில்லை என்பது நபித்துவத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்டது ஆகும். அதாவது நபி(சல்) அவர்களின் நிலைகுறித்து அல்லாஹ் குறிப்பிடாத காலகட்டதில் நபி(சல்) அவர்கள் தனது நிலை குறித்து கூறியதுதான் அந்த கருத்து. இது குறித்து ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸஹீஹ் புகாரியின் விளக்கவுரையான ஃபத்ஹுல் பாரியில் பின்வருமாறு விளக்குகிறார்.


    ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்ற வாசகத்தை பொறுத்தவரை இதை நபி(சல்) அவர்கள் சூரத் அல் அஹ்காஃப் வின் “ தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' எனக் கூறுவீராக! (46:9.) அல்லாஹ்வின் இந்த வசனத்தின் அடிப்படையிலானது ஆகும். அதாவது இது பின்வரும் வசனத்திற்கு முந்தையதாகும்  உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், (“48:2)” ஏனென்றால் சூரத் அல் அஹ்காஃப் மக்காவில் இறக்கப்பட்டதாகும் சூரத் அல்ஃபத்ஹ் மதீனாவில் இறக்கப்பட்டது ஆகும். ஆக இவற்றிற்கு இடையே எந்த முரணும் இல்லை. மேலும் நபி(சல்) அவர்கள்சுவர்க்கத்தில் நுழைவது நானே முதலாமவன்என்ற கூற்று நிறுவப்பட்ட ஒன்று. மேலும் இதுபோல் பல அறிவிப்புகள் உள்ளன.......... (கிதாபுல் ஜனாயிஸ், ஃபத்ஹுல் பாரி,) 

       ஆக நபி(சல்) அவர்கள் தனது நிலை குறித்து அறிய மாட்டேன் என்று கூறியது ஆரம்ப கால குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்தான். அவர்களுக்கு அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத காலத்தில் அவர்கள் தன்னிச்சையாக எதையும் அறிவிக்கவில்லை. அதன் பிறகு அல்லாஹ் தெளிவான வசனங்களினால் அனைத்தையும் தெளிவு படுத்திய பிறகு நபி(சல்) அவர்கள் தனது நிலைகுறித்து தெளிவாக அறிவித்துவிட்டார்கள். ஆக இதில் எந்த முரண்பாடும் இல்லை. யாரை குறித்து அல்லாஹ் விளக்கினானோ அதை அறிவித்தார்கள். எதை அல்லாஹ் தெரிவிக்கவில்லையோ அது தொடர்பாக அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இன்னும் கூறுவதாக இருந்தால் நபி(சல்) அவர்களின் இந்த கூற்று அவர்களின் நேர்மையையே காட்டுகிறது. நபி(சல்) அவர்கள் தன்னை ஆரம்ப காலத்திலேயே சுவர்கத்திற்கு உரியவராக கூறியிருந்தால் , தனக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் கொடுக்கப்படும் என்று எல்லாம் கூறியிருந்தால் அவர் தன்னை பற்றி தானே கூறிக்கொள்ளும் ஒரு சாமியாராக கருதி கடந்து சென்றுவிடலாம். ஆனால் தான் கூறிய கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு பெருந்திரளான மக்கள் அதை ஏற்றப்பிறகுதான் இதை குறிபிட்டார்கள் என்பது நபி(சல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கும் அல்லாஹ் அறிவித்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அறிவித்தார்கள் என்பதற்கும் போதிய சான்று.  

4. இறுதியில் விதி:
      எப்போதும் போல் மீண்டும் விதி குறித்த வாதம். விதி குறித்து தெளிவாக முன்பே இந்த தொடரில் விளக்கியுள்ளோம். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்......

No comments:

Post a Comment