பக்கங்கள் செல்ல

Monday, April 13, 2015

வரதட்சிணைக்கு எதில் சிறந்த தீர்வு இருக்கின்றது?


இன்றைய சூழலில் வரதட்சணை எனும் கொடிய பிடுங்களால் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது
பல பெண்கள் முதிர் கண்ணிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் இந்த வரதட்சணையால்
சில கேடு கெட்ட ஜென்மங்கள் பெண்ணுரிமை சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசினாலும் திருமண நிகழ்வு என வரும் போது தன் ஆண் திமிரினை காட்ட வெட்கத்தை விட்டு   ரொக்கத்தை பெருகின்றனர்
சரி இது குறித்து மேலும் பார்ப்போம்....
வரதட்சனை என்றால் என்ன?

வரதட்சனை என்பதுதிருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் வரையறுக்கப்படுகிறது.
வரதட்சணைக் கொடுமை:

வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வரதட்சணை இறப்புகள்:
2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன.
  சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 
2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
இந்திய அரசின் சட்டங்கள்:
வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:
வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல், சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986ல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.

முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்ச ணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும். கொடுமை செய்த கணவனும், அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும்.
2005ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சணையைக் குற்றமாக்குகிறது.1961 சட்டத்தில்திருமணத்துக்காககொடுக்கப்படுவதே வரதட்சணை என்று இருந்தது, 1984ல் திருமணம் தொடர்பாக என்று மாற்றப்பட்டது.
இத்தனை சட்டங்கள் இருந்தும் இந்த வரதட்சணையையும் வரதட்சணை கொடுமையையும் ஒழிக்க முடிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்
ஆனால் இதை எந்த மதமும் எந்த கொள்கையும் நெறி படுத்தவில்லை அதனால் இதில் இன்னும் குழப்பமும் சோகமுமே மிஞ்சுகிறது
இதற்கான தீர்வு என்னவென்று தீர்வைத்தேடினால் ஆரம்பப்புள்ளியிலேயே முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லுகிறது இஸ்லாமிய மார்க்கம்
இஸ்லாம் சொல்லும் தீர்வு:

" பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!" (குர் ஆன் 4:4)
திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.
ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.
கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.
இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும்.
பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.
# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
# திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண்தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளி களாகின்றனர்.
# வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
# இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது. சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.
# மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.
# மணவாழ்வு கிடைக்காது என்பதால் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.
# வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
# மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
# பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.
இப்படியான தெளிவான ஒரு வழியை காட்டித்தருகிறது இஸ்லாம் படைத்தவனுக்குத்தானே படைப்பினங்களின் வாழ்வியல் முறை அதனால் தீர்வைத்தேடுவோம் எது சிறந்த கொள்கையை மனித குலத்திற்கு வகுத்துத்தந்துள்ளதோ அதன் மூலம்
சிந்திக்கும் மக்களுக்கு குரானில் பல அத்தாட்சிகள் உள்ளது ஒரு சிறந்த கொள்கையில்லாமல் முரண் வாதம் வைப்போர் சிந்திக்க வேண்டும் தீர்வு எதிலென்று?

                                                               ----- Isma Breezy ---

No comments:

Post a Comment