பக்கங்கள் செல்ல

Saturday, April 11, 2015

உயிர் என்றால் என்ன??? (படித்ததில் பிடித்தது)



என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு என்று அதனாலும் சில விடயங்களுக்கு பதிலே தரமுடியாது என்பதற்கு சான்றுகளில் ஒன்று தான் இது மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் சிந்திக்க முடியும் என்று நிருபிக்கும் திருமறை வசனங்களை ஏற்க வேண்டிய கட்டாய நிலைமை பகுத்தறிவாதிகள் தலைகீழாக நின்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.....

விஞ்ஞானம் விண்ணை தொட்டிதாலும் , அதற்க்கும் புலப்படாத பல செய்திகள் இருப்பது என்னவோ மனிதன் அனைத்தும் அறிந்த பிறவி இல்லை என்ற உண்மையை உணர்த்தி கொண்டு இருக்கிறது.
ஆறறிவு என்பது இந்த உலகில் வேண்டுமானால் உயர்ந்த ஒன்றாக கருதப்படலாம். உலகம் தாண்டிய அண்டத்தில் அத்துணை கோள்கலுமே வெறுமனே வேலையில்லாமல் சுழன்று கொண்டிருக்க வில்லை.அதே சமயம் அதற்குள் எந்த மர்மமும் புதைக்கபடாமலும் இல்லை.

மனிதனுக்கு வியக்கத்தக்க புதிர் என்ற ஒன்றை சொல்லவேண்டுமானால் அது உயிரை பற்றியதே அன்றி வேறேதுமாக இருக்க வாய்ப்பில்லை. உயிரை பற்றி என்ன தான் முயற்சி செய்தாலும் நாம் அறிய முடியாது என்பது தவிர்க்க முடியாத உண்மை.
ஒரு வேலை எல்லா முயற்சிக்கும் நிச்சயம் பலன் உண்டு என்று நம்பினால் கூட இந்த உயிரை பற்றி அறியும் முயற்ச்சியில் உங்கள் வெற்றி என்பது உங்கள் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்து அதன் பின்னரே அதனை குறித்த உண்மையை அறிந்து கொள்வதாக தான் இருக்கும்.

வேறெப்படி இந்த உயிரை நாம் புரிந்து கொள்வது ? நமக்கு கொடுக்கப்பட்ட அறிவையும், இறைவன் சொல்லும் சில உண்மைகளையும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு  வேண்டுமானால் புரியலாம் அல்லது புரிய முயற்ச்சிக்கலாம்.

இந்த உயிரை பற்றி குர்-ஆன் என்ன தான் சொல்கிறது என்பதை பார்த்தால் இவ்விசயத்தில் நம்மை அது புரிந்து கொள்ள முடியாத பிராணியாகவே சொல்கிறது.

ஒரு வரலாறு செய்தியோடு தொடர்வோம்.
ஒரு முறை நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களிடம் யூதர்கள் ஒரு கேள்வியோடு வந்திருந்தனர். அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே நபியின் தூதுத்துவத்தை சோதிப்பதற்காக ஒன்று கூடி தாங்கள் கேட்க வேண்டிய கேள்வியை ஆலோசனை செய்திருந்தனர்.

அந்த கேள்வி இது தான்,
இறைவனால் மோசேவிற்கு கொடுக்கப்பட்ட வேதம் தௌராத். இதை தான் யூத சமுதாயம் வேதமாக கொண்டுள்ளனர். மனித கரங்களின் பல இடை சொருகல்களுக்கு மத்தியில் அந்த வேதத்தில் சில உண்மைகளும் இருக்க தான் செய்தது. அதில் ஒன்று தான் மோசேவிற்கு உயிரை குறித்து இறைவன் சொன்னது.
அது இது தான் "உயிர் என்பது உனது இறைவனின் கட்டளை படி உள்ளது. அதை குறித்து அறிந்து கொள்ள போதுமான அறிவு உங்களிடம் இல்லை"

இந்த செய்தியை யூதர்கள் நம்பி இருந்தனர், எனவே அந்த யூதர்கள் உயிரை குறித்து கேள்வியை முஹம்மது நபியிடம் கேட்போம். அவாராக ஒன்றை சொன்னால் அவர் பொய்யர் என்று தீர்மானிக்கலாம். என்ற முடிவோடு இந்த கேள்வியை முன் வைத்தனர்.

யூதர்கள் : முஹம்மதுவே உயிரை குறித்து உமது இறைவன் என்ன சொல்கிறான் ?
முஹம்மது : மௌனம் காக்கிறார்.
முஹம்மதுவின் தோழர்கள் : "இவருக்கு இறைவன் செய்தியை உள்ளத்தில் போடுகிறான்" என்று எண்ணி கொள்கின்றனர்.
அப்போது தான் முஹம்மது நபிக்கு இந்த வசனம் அருளப்படுகிறது.

17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

இதனை அறிந்த யூதர்கள் வாயடைத்து போனார்கள். இவரும் மோசேவை போலவே ஒரு உண்மையானவர் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

இது தான் இந்த வசனம் அருளப்பட்ட வரலாறு.

இதில் பெறப்படும் செய்தியும் ஒன்று தான் உயிரை குறித்து   நம்மால் அறிந்து கொள்ளவே முடியாது.

இருந்தும் ஒரு சில அடையாளங்கள் கொண்டு அதை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு புரிந்து கொள்ள முடியும்.

உயிரை குறித்த வசனங்கள் இதோ,

39:42. அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.


ஒரு உயிரை நித்தரையின் போதும் அதன் மரணத்தின் போதும் இறைவன் கைப்பற்றுகிறான் என்று இங்கே சொல்லபடுகிறது. மரணத்தின் போது உயிர் கைபற்றபடுகிறது என்பது நமக்கு விளங்குகிறது. ஒருவர் மரணித்து விட்டால் அவரின் உடல் எந்த ஒரு அசைவும் இன்றி கிடக்கிறது பின்னர் படி படியாக மக்கி போகிறது.எனவே அந்த ஆன்மா அந்த உடலுக்குள் இல்லை என்பது புரிகிறது. ஆனால் நித்திரையின் போது எப்படி கைப்பற்ற படுகிறது ? இதை சிந்தித்து உணரும் மக்களுக்கு இதில் பலஅத்தாட்சிகள் இருப்பதாக வேறு இறைவன் சொல்கிறான். எனில் ஒருவரின் தூக்கத்தை கவனிக்க வேண்டியாதாக உள்ளது.

ஒரு மனிதர் தூங்கும் போது அவரது உடல் இயங்கி கொண்டு தான் உள்ளது. எனினும் அவர் ஏதோ ஒன்றை இழந்து விட்டவர்  போன்று தான் உணரப்படுகிறார்.பிறர் பேசுவது அவருக்கு விளங்குவதில்லை. உறங்கும் போது அவருக்கு இந்த உலகில் இருப்பது போன்று அல்லாமல் வேறு விதமாக கனவுகள் வருகிறது. இருந்தாலும் அவர் உடலை அசைக்கிறார், புரண்டு படுக்கிறார்.

முஹம்மது நபி தூக்கத்தை குறித்து சொல்லும் போது அதை சிறு மரணம் என்றும் மரணத்தை நிரந்தர தூக்கம் என்றும் சொல்வதை பார்க்க முடிகிறது.

இதை கொண்டு சிந்தித்தால் இரண்டு வகை இயக்கங்கள் இந்த ஆன்மாவில் உள்ளது என்று தெரிகிறது. ஒன்று இந்த உடல் இயங்க தேவையான "Energetic Pulse " மற்றொன்று நம்மை செயல் படுத்த தூண்டும் "x". அந்த "x" என்பதே உயிர் ,ஆன்மா, ரூஹ்  எனவும் விளங்குகிறது.

இதை புரிந்து    கொள்ளும் படியாகவே , உயிரை "ரூஹ்" என்றும் "நபஸ்" என்றும்  சொல்கிறது குர்-ஆன்.

எளிமையாக சொல்ல போனால்,

செல்போனில் உள்ள battery இயக்கத்திற்கு முக்கியம். அது போலவே தொடர்பு கொள்வதற்கு சிம் கார்டும் முக்கியம். இரேண்டில் ஒன்று இல்லை என்றாலும் பயனில்லை.

Battery மட்டுமே உள்ள செல் போனில் இயக்கலாம் ஆனால் அதை தொடர்பு கொள்ள முடியாது. அது போலவே சிம் கார்டு மட்டுமே உள்ள செல் போனில் Battery இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

"ரூஹ்" என்பது நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை ஏற்படுத்த கூடியதாக தெரிகிறது. மனிதன் மனிதனாக இருப்பதே இந்த ரூஹ் என்பதனால் தான். இல்லையேல் அவன் "உயிருள்ள ஒரு பிணம் ". இங்கே உயிருள்ள பிணம் என்பது கூட இரு வேறு முரணான வார்த்தை , ஆனாலும் இது புழக்கத்தில் உள்ள வார்த்தை. அது எப்படி வந்திருக்கும். மூச்சு விட்டு கொண்டிருந்தாலும் , இதயம் இயங்கி கொண்டிருந்தாலும், நாம் சொல்வதை விளங்க முடியாத நம்மை தொடர்பு கொள்ள முடியாத  கோமா நிலைக்கு போவதை கூட உயிருள்ள பிணம் என்று சொல்வதுண்டு. அது போலவே தூக்கத்தில் உள்ள மனிதனும் உயிருள்ள ஒரு பிணம். அவ்வளவு தான்.

ஆக தூக்கத்தில் நாம் முழுமையாக இல்லாமல் ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்பது உறுதி.

ஒன்றிய சிந்தித்து பாருங்கள், தூக்கத்தில் நடக்க கூடிய வியாதி ஒருவனிடம் இருந்தால் கூட அவன் தன்னை அறிவதில்லை.

இவை அனைத்தும் சேர்த்து கொண்டு பார்த்தல் மனிதனின் சிந்திக்க கூடிய பகுத்தறிவு என்ற ஒன்று கூட இந்த உயிருக்குள் ஒன்று தான். அதுவே ரூஹ் என்பதாக இருக்கலாம்.
தூக்கத்தில் மனிதன் என்ற சிறப்பு தன்மை கொண்ட பகுத்தாய்வு செய்யும் திறன் , அந்த ஆன்மா கைப்பற்ற படுகிறது. இருந்தும்  மற்ற உடல் உறுப்புகள் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. வெறும் ஆடு மாடு போன்று. எனவே தான் பைத்தியம், குழந்தை, மற்றும் தூக்கத்தில் இருப்பவர்களது செயலுக்கு இறைவனிடம் கேள்வி இல்லை என்று நபி சொல்கிறார். தனக்கே தெரியாத ஒன்றிற்கு அவன் கேள்வி கேட்க்க பட மாட்டான்.

மரணத்தில் இந்த இரண்டு தன்மை கொண்ட உடலை இயக்கும் பகுதியும்  பகுத்தறிவை இயக்கும் பகுதியும் கைப்பற்ற படுகிறது. அது என்ன பகுதி, அவை எப்படி இருக்கும் என்பதை என்னிடம் கேட்டால் எனக்கு தெரியாது என்று தான் சொல்ல முடியும். முன்னரே சொன்னது போல உயிரை குறித்த முழு அறிவு இறைவனிடமே உள்ளது. நாம் மரணிக்கும் பொது தான் அதன் வடிவை பார்க்க முடியும்.

உயிரின் மர்மத்தை தெரிந்து  கொள்ள மரணம் வரை காத்திருப்பதை காட்டிலும் அது மறுமையில் தப்பித்து கொள்ள செயல்கள் செய்வதே புத்தி சாலித்தனம்.

சிந்தனை மட்டும் போதாது ஏனெனில் உயிரை பற்றியும் அது மரணத்தில் எப்படி கைப்பற்ற படும் என்பதையும் குர்-ஆன் சொல்வதை பார்க்கும் போது பயம் கொள்ளாமல் இருக்க முடியாது. சில வசனங்கள் இதோ,

32:11. “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்

4:97. (அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.

6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).

2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர்பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.

7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.

8:50. மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.

10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.

Credits: Muhammed Noushath

1 comment:

  1. ரூஹும் உயிரும் ஒன்றல்ல. அவை வெவ்வேறு. இந்தப் பதிவைப் படியுங்கள் இன்னும் பல அறியலாம்.
    http://aliaalifali.blogspot.com/2013/02/blog-post_11.html

    ReplyDelete