பக்கங்கள் செல்ல

Thursday, April 9, 2015

மூஸா நபி தம் சமூகத்தாரை தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்றார்களா?

கேள்வி:  
இஸ்லாத்தில் எந்த காரணத்திற்காகவாவது தற்கொலை செய்து கொள்ள அனுமதி உண்டா?
மூஸா தம் சமூகத்தாரை, தற்கொலை செய்து கொள்ளுங்கள். அதுவே இறைவனிடத்தில் இருந்து பாவங்களை போக்கி நற்பலனை அளிக்கும் என்கிறார்???

"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்." [2:54]
உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்துக்கு கூறியதாக 2:54 வசனம் கூறுகிறது. இதை நேரடிப் பொருளில் பெரும்பாலான விரிவுரையாளர்கள் விளங்கியுள்ளனர்.
காளைச் சிற்பத்தைக் கடவுளாக ஆக்கியதற்காக மூஸா நபியின் சமுதாயம் தம்மைத் தாமே கொன்று விட வேண்டும் என்று மூஸா நபி கட்டளையிட்டதாக அந்த விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
தமது சமுதாயத்தினர் ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டதைக் கண்டபோது மூஸா நபியவர்கள் கடுமையாகக் கோபம் கொண்டார்கள். தமது கையில் உள்ள வேதத்தையே அவர்கள் கீழே போடும் அளவுக்கும், தமது சகோதரரும் சக நபியுமான ஹாரூனைப் பிடித்து இழுத்து அடிக்கும் அளவுக்கும் அந்தக் கோபம் இருந்தது. (பார்க்க: திருக்குர்ஆன் 7:150)
இவ்வாறு கடுமையாகக் கோபம் கொண்ட நிலையில் "செத்துத் தொலையுங்கள்'' என்று கூறுவது மனிதரின் இயல்பாக உள்ளது. "மரணித்து விடுங்கள்'' என்ற பொருளை நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறுவதில்லை. கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார்கள்.
மூஸா நபியின் இந்தக் கூற்றையும் இவ்வாறே நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்கொலை செய்து கொள்ளுமாறு இறைத்தூதர்கள் கட்டளையிட்டிருக்க முடியாது.
"உங்கள் மரணத்திற்குப்பின் உங்களை உயிர்ப்பித்தோம்'' என்று இதன் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. இது அவர்கள் தற்கொலை செய்தார்கள் என்ற கருத்தைத் தரும் என்று விளங்கிக் கொண்டதே இதற்குக் காரணம்
ஆனால் இது தவறாகும்.
"உங்களையே கொன்று விடுங்கள்'' எனக் கூறும் 2:54 வசனத்தை மட்டும் கவனிக்காமல் அதைத் தொடர்ந்து வரும் இரு வசனங்களையும் கவனித்தால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.
2:55 வசனத்தில் இறைவனைக் காட்டுமாறு அவர்கள் கேட்டதால் அவர்களைப் பேரிடி தாக்கியது என்று கூறப்பட்டுள்ளது.
"மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது [2:55]
2:56 வசனத்தில், "மரணத்திற்குப் பின் உங்களை உயிர்ப்பித்தோம்'' எனக் கூறப்பட்டுள்ளது.
"பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம்." [2:56]
இம்மூன்று வசனங்களையும் கவனித்துப் பார்க்கும் போது, இறைவனை நேரில் காட்டுமாறு அவர்கள் கேட்டதால், இறைவன் அவர்களைப் பெரும் சப்தத்தால் தாக்கினான். அப்போது தான் அவர்கள் மரணித்தனர்; இதன் பிறகு தான் "அவர்களை உயிர்ப்பித்தோம்'' என்று கூறப்படுகிறது.
எனவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டு சாகவில்லை; இறைவனை நேரில் காட்டுமாறு கேட்டதால்தான் சாகடிக்கப்பட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
Thanks: onlinepj.com

No comments:

Post a Comment