பக்கங்கள் செல்ல

Showing posts with label பிளாட்டோ. Show all posts
Showing posts with label பிளாட்டோ. Show all posts

Thursday, November 15, 2018

தொடர் 1: பரிணாமம் உண்மையா ஊகமா?

  அல்லாஹ்வின் திருப்பெயரால்........


 பரிணாமம் டார்வினுக்கு முன்

            பரிணாமம் குறித்து விளங்குவதற்கு அதன் வரலாற்று பார்வையை முதலில் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அனைவரும் பரிணாமம் குறித்து ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் அதன் கட்டமைப்பை புரிந்து கொள்ள பரிணாமம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும். இன்ஷா அல்லாஹ் அதன் வரலாறு குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு பரிணாமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பரிணாமம் என்றால் என்ன?
          பரிணாமம் (Evolution) என்பதற்கு மாற்றம் என்பது நேரடி பொருளாகும். ஒரு உயிரினத்தின் தலைமுறை தலைமுறையாக வடிவம், நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றமே பரிணாமம் என எளிமையாக பொருள்படுத்தலாம். ஒரு உயிரினத்தின் அனைத்து நிலையிலும் அதாவது டி.என்.ஏ(DNA) வில் துவங்கி சமூக நடத்தை ஆகிய அனைத்திலும் பரிணாமம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக பரிணாமவியலாளர்கள் கூறுகின்றனர். சமிபத்தில் ஹாரிசன் (2001) பரிணாமம் என்பது காலந்தோறும் மாறுபாட்டுடனான சந்ததி வழியாக ஏற்படும் மாற்றம் என வரையறுக்கிறார். (1)

பரிணாம காலவரிசை ஒரு பார்வை
         
               பரிணாமவியல் பல நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் பல பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது. அதனை முன்மொழிந்தவர்களில் சில குறிப்பிடத்தகுந்த நமது ஆய்விற்கு தேவை படுபவற்றை மட்டுமே மேலோட்டமாக காணவிருக்கிறோம். 
      கிரேக்க தத்துவவியலாளர் ஆன தேல்ஸ் உயிரினங்கள் நீரில் இருந்து தோன்றி படிப்படியாக பல்கிப்பெருகின என்ற கருத்தை முன்வைத்தார்.  அனாக்ஸிமெண்டர் இன்றைய பரிணாமவியலின் தந்தை என்று கூறலாம். அவர்தான் உயிர்கள் படிநிலைகளில் ஈரப்பதத்தில் இருந்து தோன்றுகின்றன.  
          மேலும் மனிதன் வேறு ஒரு உயிரினத்தில் இருந்து பரிணமித்தவன் என்ற கருத்தை முன்வைத்தார். 
இதுபோல் எம்படோக்ல்ஸ், எபிக்கூயூரியஸ் போன்றவர்களின் வாதங்களின் வேர்களையும் டார்வினின் தத்துவங்களில் காணமுடியும். இவ்வாறு உயிரினங்களில் தோன்றும் மாற்றங்கள் யாவும் எதேச்சையானவை, எதுவும் முன் நிர்ணயிக்கப்பட்டதில்லை என்ற கருத்தை முன்வைத்தனர். இன்றிருக்கும் பரிணாமவியலாளர்கள் கூறுவது போல் மாற்றங்கள் யாவும் வருங்கால பயன் நோக்கியதல்ல என்ற கருத்தை அக்கால கிரேக்க தத்துவ்வியாளர்களில் ஒரு பகுதியினர் கொண்டிருந்தனர்.

          இதற்கு எதிர் கருத்தை கொண்டிருந்த, அதாவது மாற்றங்கள் யாவும் பயன் நோக்கியது அல்லது முன் நிர்ணயிக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைத்த அணியிலும் குறிப்பிடும் படியான கிரேக்க தத்துவவியாளர்கள் இருந்தனர். இவர்கள் இயல்திட்ட வாதத்தை(Teleology) முன்வைத்தனர். அதாவது இயற்கையில் உயிர்களில் தோன்றும் இத்தகைய மாறுதல்களின் காரண காரிய தொடர்புகள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே என்று வாதிட்டனர். ஹெராகிளிடஸ் போன்றவர்கள் இது கடவுளின் திட்டம் என வாதிட்டனர்.
      
அதே போன்று அரிஸ்டாட்டில் , பிளாட்டோ போன்றவர்கள் இயல்திட்ட வாதத்தை முன்வைத்தனர். அதாவது மனிதன் என்ற உயரிய படைப்பு நோக்கின் தோல்வியுற்ற சோதனைகளின் விளைவுதான் ஏனைய உயிரினங்கள் என்ற கருத்தை கொண்டிருந்தனர். இத்தகைய கருத்தை பிளாட்டோ குறியதால் தற்கால் பரிணாமவியலாளரான ஏர்ண்ஸ்ட் மைர் பிளாட்டோவை "Great Antihero of Evolution" என்று கூறுகிறார்.(2
     இயல்திட்ட வாதங்களின் எண்ண ஓட்டங்கள்தான் லாமார்க்கின் தத்துவங்களில் காண முடியும். இந்த வகை பரிணாம கோட்பாடுகளை லாமார்க்கிஸம் என்று இன்றைய நவீன டார்வினிஸ்ட்களால் கூறப்பட்டு மறுக்கவும் படுகிறது. ஆனால் உண்மையில் பரிணாமவியலின் பல கொள்கைகள் இந்த லாமார்க்கின் கோட்பாட்டின் அடியொட்டி பயணிக்கும் நிலையில் தான் இருக்கிறது என்பது வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் நாம் புரிந்து கொள்வோம்.........

தற்கால பரிணாமவியலின் ஆரம்பம்: 
     ஹட்டன் (1795) என்ற நிலவியலாளர் படிப்படியாக முடிவை அடையும் கொள்கையை (Gradualism) முன்வைத்தார். நிலமானது பல படிநிலைகளில் சிறுமாற்றங்களால் நிலவியல் அமைப்புக்களான மலை, ஆறு போன்றவற்றை தோற்றுவிக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். அதுவரை செல்வாக்குடன் இருந்த அழிவமைவு கோட்பாட்டை(Catastrophism) மறுத்தார்.
அதாவது மாபெரும் வெள்ளங்களும், நிலநடுக்கங்களும் மேலும் அது போன்ற பேரழிவுகளுமே நிலவியல் அமைப்பை தோற்றுவித்தன என்ற கோட்ப்பாடை மறுத்தார். எப்படி நிலவியல் மெதுவான சிறு சிறு மாற்றங்களால் நில அமைப்புகளை தோற்றுவிக்கின்றதோ அதே போல் மாறுபட்ட உயிரினங்கள் ஒரு உயிரில் இருந்து சிறு சிறு மெதுவான மாற்றங்களால் தோன்றின என்ற கருத்தை முன்வைத்தார்.

     
 
சார்லஸ் லையல்(1830) : டார்வினின் நண்பர். இவரும் படிப்படியாக படிவளர்ச்சியால் முடிவை அடையும் கொள்கையை (Gradualism மறுவடிவமான Uniformitarianism) முன்வைத்தார். இவர் டார்வினின் இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம் (Origin of Species by Natural Selection) வெளிவர பெரிதும் உதவியாக இருந்தார்.

பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத அழிவமைவுக் கோட்பாடு: 


    படிவளர்ச்சி கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை அழிவமைவு கோட்பாடாகும். இதை முன்பே விளக்கியது போல் இது பேரழிவுகளே நில அமைப்புக்களை தோன்றுவதற்கு காரணமாயின். இதுதான் வேறுபட்ட உயிர்கள் தோன்ற காரணமாயின என்ற கருத்தை முன்வைத்தது. புகழ்பெற்ற பக்லேண்ட், கூவியர் போன்ற நிலவியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாடாகும். இந்த கோட்பாடானது பரிணாமவியலாளர்களும் பெரிது ஒவ்வாமையை ஏற்படுத்த மூலகாரணம்:

1)இந்த கோட்பாட்டை தூக்கிப் பிடித்தால் அன்றிருந்த கிறித்தவர்கள் கூறுவது போல் இவ்வுலகம் தோன்றி 5000 ஆண்டுகள்தான் ஆகிறது என கூறப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

2) ஒரு திடீர் செயல்பாடு ஒரு உயிரினத்தை அழித்து வேறு ஒரு உயிரினத்தை தோற்றுவிக்கும் என்ற கொள்கையை இந்த கோட்பாடு முன்வைப்பதால், இந்த இயற்கை நிகழ்வுகள் யாவும் முன்முடிவு செய்யப்பட்ட ஒரு விசயத்திற்காக நிகழ்கிறது என்ற தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. ஆக இறைமறுப்பை முன் நிறுத்தும் பரிணாமவியலாளர்களால் இந்த கோட்பாட்டை ஜீரணிக்க சிறிது சிரமமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. 
இத்தகைய காரணங்களின் சாயல் லேசாக தெரிவதால்தான் லாமார்க்கின் கோட்பாடே மறுக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த கோட்பாடெல்லாம் முடிவு நிர்ணயிக்கப்பட்டதாக கூறுகிறதோ அவையெல்லாம் இன்றைய டார்வினிஸ பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத கோட்பாடாக ஆகிவிடும். ஏனென்றால் அவை அறிவார்ந்த இறை( Intelligent Creator) குறிபிட்ட நோக்கத்திற்காக நிகழ்வுகளை தோற்றுவிக்கிறார் என்ற கொள்கைக்கு இட்டுச்சென்றுவிடும் என்ற பயம்தான்.

      ஆனால் விதி அவர்களை விடுவதாக இல்லை. இன்றும் இந்த கோட்பாடு கூறும் விளைவுகளின் சுவடுகளை படிமங்கள்(fossil) கொண்டிருக்கின்றன. டைனோசர் போன்ற உயிர்களின் பேரழிவிற்கு இத்தகைய இயற்கை சீற்றங்களே குறிப்பாக விண்கல் மோதலே காரணமாக யூகிக்கப்படுகிறது.   
(ஆனால் டைனோசரின் சமகாலத்தில் வாழ்ந்த உயிர்கள் இன்றும் வாழும் படிமங்களாக பூமியில் வாழ்கின்றன என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று)

           பல ஆயிரம் ஆண்டுகள் நிலவியல் மாற்றங்களை சில மணிநேரங்களில் சுனாமி, நிலநடுக்கம், விண்கல் மோதல் போன்ற இயற்கை சீற்றங்கள் தோற்றுவித்துவிடுவதும், அதை இன்றும் நாம் காண்முடிவது பரிணாமவியலாளர்களை சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஆனால் இதில் கூத்து என்னவென்றால் இதே போன்ற திடீர் வெடிப்புக்கள் உயிர் அழிவுகள் அல்ல உயிர் தோற்றங்கள் உயிர்படிமங்களிலும் (fossil) காணப்படுவது படிவளர்ச்சி கொள்கையை போற்றும் பரிணாமவியலாளர்களுக்கு சம்மட்டி அடிதான். ஆனால் இதே நிலைதான் பரிணாம கோட்பாட்டின் மையத்திலேயே இருக்கிறது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் தொடர்களில் காண்போம்.

Ref:
1. P.No.5 ,Evolution by Mark Ridley
2. P.No.304, The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance

Sunday, July 16, 2017

உயிர்: 2. வரலாற்றில் உயிர்:

ஏக இறைவனின் திருப்பெயரால்


வரலாற்றில் உயிர்:
உயிர் என்றால் என்ன?????? இந்த  கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ......... 

தேல்ஸ்:(கிமு. 624-548) 
அனைத்து உயிர்களுக்கும் மூலம் நீர். ஈரப்பதமே அனைத்து உயிர்களுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. ஈரப்பத்தத்தில் இருந்து வெப்பம் உணடாகிறது. அந்த வெப்பமே உயிரின் ஆதாரம் என்ற கருத்தை தேல்ஸ் முன்வைத்தார்

பித்தகோரஸ்:(கிமு 582-500)
அழுகும் குப்பைகளில் இருந்து விலங்கினங்கள், கடவுளின் உயிரில் இருந்து தோன்றின. ஒரு விலங்கின் வாழ்வானது இந்த ஆன்மாவும், மண்ணுடலும் இணைந்திருக்கும் காலமே ஆகும். இந்த மண்ணுடல் இறக்கும் போது இந்த அழிவற்ற ஆன்மாவானது வேறொரு மண்ணுடல் ( அது விலங்காகவோ, மனிதனாகவோ இருக்கலாம்) அதனுள் நுழைகிறது. இதுவே மண்ணில் தோன்றும் அனைத்து நன்மை தீமைக்கும் காரணம். மேலும் உயிரானது மூன்று மூலக்கூறுகளை உடையது. 
1. உள்ளுணர்வுப்பகுதி: இந்த பகுதிதான் மண்ணுடல் மற்றும் பவ்தீக தேவை குறித்து உணர்வதாய் அமைந்தது.
2. ஆன்மாப்பகுதி: இதுதான் அன்பு, கோபம் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடயது.
3. கல்வியறிவு: இந்த பகுதி இறைசட்டங்களை புரிந்து செய்படுத்தும் பகுதி.
பித்தகோரஸின் சிந்தனை பள்ளிகள் பிளேட்டோவின் சிந்தனை பள்ளிகளுக்குப் பிறகு காணமல் போனது.

ஹிராகிளைட்டஸ்:(கிமு 535 –  475 )
உலக ஆன்மா என்பது அக்னிதான். மூச்சின் மூலமாக இந்த உலக ஆன்மாவை மனிதன் எடுத்து கொண்டு உயிர்வாழ்கிறான். எங்கும் காணப்படும் அறிவே கடவுள். உணர்வு என்பதே எதோ ஒன்று வெளியில் இருந்து நமக்குள் பாய்வது என்று கூறினார். 

எம்படொகில்ஸ்:(கிமு  490 – 430)
இவர்தான் நிறை அழிவின்மை குறித்து முதன்முதலில் பேசியவர். முன்பே இருக்கும் பொருடகளோடு இணைவதாலும் பிரிவதாலுமே பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படுகிறது. நீர் நெருப்பு காற்று ஆகிவைதான் முன்பே இருக்கும் பொருட்களாகும். இரண்டு விசைகள் இவ்வுலகை இயக்குகின்றன. விலக்கு விசை, ஈர்ப்புவிசை. ஆன்மா தனித்தவை அல்ல. இறைமறுப்பையும், இன்பமே நோக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் உயிர் குறித்த கருத்துகளையும் முன்வைத்தார்.
மேலும் மனோதத்துவவியலுக்கு அடிகோலிட்டவர். மனிதனின் குணங்கள் உடல் கூறு கலவையின் அடிப்படையில் அமைகின்றன என்று வாதிட்டார். தகுதியற்றவை வாழாது என்பதை கூட முன்வைத்தார். இன்றிருக்கும் பல பொருள்முதல்வாதிகளின் மூல கொள்கை இங்கிருந்துதான் ஆரம்பமானது என்று கூறலாம்.

டெமொகிரைடஸ்:(கிமு 460 – 370)
இவ்வுலகமானது எண்ணில்லா அணுக்களினால் ஆனவை. உயிரானது உலகின் ஒரு பகுதி. அது உயிர்ப்புடன் நகர்வதாய் இருந்தாலும் அதுவும் இவ்வுலகின் ஒரே வகையான அணுக்களினால்தான் ஆனது. இந்த அணுக்கள் யாவும் நெருப்பை போன்ற வெப்பத்துகள்களாகும். இவை உடலின் அனைத்து பகுதியிலும் ஊடுருவி உடலிற்கு உயிரை தருகிறது. இந்த உயிரை பல கூறுகளாக பிரித்து அவை உடலின் ஒவ்வொரு பகுதிக்கானது என்றும் கூறினார். அதாவது சிந்தனை என்பது மூளையின் உயிர், பார்வை கண்ணின் உயிர், கோபம் இதயத்தின் உயிர், ஆசை ஈரலின் உயிர் என்று குறிப்பிட்டார்.

ஹிப்பொகிரேடஸ்:((கிமு 460 – 370))
தத்துவவியலையும், மருத்துவத்தையும் இரு துறையாக முதன் முதலில் பிரித்தவர். உடல் என்பது அண்டத்தின் சிறிய மாதிரி. அண்டத்தில் நீர், நிலம், நெருப்பு மற்றும் காற்று போல் உடலில் ரத்தம்,  மஞ்சள் பித்தம், சளி மற்றும் கரும் பித்தம் அமைந்துள்ளது. இவையே மனிதனின் மனோநிலையை நிர்ணயிக்கின்றன. இதே போல் உடல் நோய்கள் அனைத்தும் இந்த நான்கு திரவங்களின் சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாள்வுகளே என்ற கருத்தை முன்வைத்தார். இந்த அனைத்து திரவங்களின் ஊற்றுக்கண் மூளையே. ஆக அனைத்து நோயின் மூலமும் மூளையே. உள்ளத்தின் இருப்பிடம் மூளையே. மனநோய் என்பது இந்த உறுப்பில் ஏற்படும் பாதிப்பேயாகும். கரும்பித்தமே மனிதனின் தீய எண்ணங்களான பொறாமை, சந்தேகம், வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவற்றிற்கு காரணமாகும் என்றும் குறிபிட்டார்.

சாக்ரட்டீஸ்:

        ஓர் இறைக்கொள்கையை முன்மொழிந்தார். டெல்ஃபியின் இறைவனை தனது ஒரே இறைவனாக எடுத்துக்கொண்டார். (அந்த கடவுள் அப்பலோதான் என்பது அறிஞர்களின் வாதம்) மற்ற கிரேக்க கடவுளர்களை முழுமையாக மறுத்துவிட்டார். இதனாலேயே நாத்தீக குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது. இந்த கொள்கையினால் இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று குற்றம்சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

உயிர் குறித்து இருமைதத்துவத்தை முன்வைத்தார். அதாவது உடலும் உயிரும் தனித்தவை என்ற தத்துவம். உடல் இயங்கக்கூடியது. உயிர் இயக்கக்கூடியது. உடல் அழியக்கூடியது. உயிர் அல்லது ஆன்மா அழிவில்லாதது. அதாவது உடல் இயங்கும் அற்றலை பெற்றிருக்கும். அந்த உடலை ஆன்மா இயக்கும் இதுதான் இருமைதத்துவம்

பிளாட்டோ:


பிளாட்டோ தனது “ரீபப்ளிக்” என்ற புத்தகத்தில் உயிர் குறித்து விளக்கியுள்ளார். இதற்கு முன்சென்ற தத்துவவியலாளர்கள் கூறிவந்த உடலின் அனைத்து பகுதியிலும் உயிர் என்ற பொருள் உடுறுவியுள்ளது, ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி ஆன்மா உள்ளது என்ற கருத்தியல்களை மறுத்தார். பிளாட்டோ முன்வைத்ததும் இருமைத்துவம் தான். அதாவது ஆன்மாவும் உடலும் தனித்தனியானவை.

       உயிர் என்பது மூன்று கூறுகளால் ஆனவை. 1. கடவுளிடம் இருந்து வந்த பகுத்தறியும் அழிவில்லா பகுதி, 2. உணர்வைத்தரும் ஆன்மா பகுதி 3.இவை இரண்டையும் இணைக்கும் பகுதி. ஆகிய மூன்று பகுதிகளை கொண்டதுதான் உயிர் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆன்மாவின் புணர் ஜென்மம், வேறு ஜென்மம், ஒரு சரிரத்தில் இருந்து மற்றொரு சரிரத்திற்கு செல்லுதல் போன்ற கருத்தை முன்வைத்தார். ஆன்மாவானது மரணத்திற்கு பிறகு ஒரு இடைநிலையில் காக்க கூலி வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும். பல ஜென்மங்கள் எடுத்து தூய்மை அடைந்த ஆன்மாவே இறுதியில் சுவனத்தில் அதன் இடத்தை அடைந்து கொள்ளும்.
பகுத்தறியும் ஆன்மாவானது மூன்று நிலைகளாக காணப்படுகிறது:
1. உன்மையுடன் தொடர்புடைய அறிவாக 
2. கூட்டாக செயல்படும் போது கருத்தாக 
3. இல்லாதவை குறித்து அறியாமையாகவும் இருக்கிறது.


          அறிவாற்றல் என்பது ஒரு உணர்ச்சியே.  மேலும் ஆன்மா ஒரு வஸ்தாகும். ஆக நினைவாற்றலும் கற்பனையும் வஸ்துக்களே. பகுத்தறியும் உயிரானது சுவனத்திற்கு மிக நெருக்கமானது. இதுதான் மூளையை மையமாக கொண்டது. உணர்வைத்தரும் பகுத்தறியாத உயிரின் பகுதி தண்டுவடத்துடன் தொடர்புடையது. தண்டுவடமும் மூளையும் தான் உயிர் சக்தியை எடுத்து செல்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். மேலும் இணக்கும் உயிர் பகுதியானது இதயத்தில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.
ஒன்றை குறித்த எண்ணம் என்பது உள்ளத்தில் முற்பிறவியில் ஏற்பட்ட பதிவாகும். அவற்றை கல்வியின் மூலம் வெளிக்கொணர்கிறோம் என்று கூறினார்.

அரிஸ்டாடில்:
உடலின் செயல்பாடுதான் உயிர். உயிர் உடலில் இருந்து தனித்த பொருள் அல்ல. உடலில்லாமல் உயிர் இல்லை. உயிர் இல்லாமல் உடல் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார். உயிருக்கு தூய்மைபடுத்துதல் அல்லது பல பிறப்பிகளை அடைந்து தூய்மை பெறும் என்பன் போன்ற எந்த தேவையும் அற்றது. மேலும் உயிர் என்பது ஓர் இயக்கவிதி. அதுவே உயிர் வாழ்க்கையின் முதல் தோற்றுவாய். உயிரின் ஏனைய ஆற்றல்களான உணவு உட்கொள்ளுத, நகர்வு , சிந்தனை போன்றவையாவும் உயிர்வாழ்க்கையின் இரண்டாம் தோற்றுவாய். ஒரு உயிர் மரணத்திற்கு பிறகு வெறு ஓர் அசையும் உடலோடு கலந்து விடுகிறது. ஆனால் முற்பிறப்பின் கருத்தியல்களை அது கடத்திச் செல்வதில்லை. உடலின் உள்ளுறுப்புகள் என்பவை வெப்பத்தையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்துகொள்ளும் இயந்திரங்களாகும். அனைத்து உணர்ச்சிகளும் மூளையுடன் தொடர்புடையவை அல்ல மாறாக இதயத்துடன் தொடர்புடையவை. மேலும் உயிரினங்களின் உயிரை மூன்று வகையாக வரையறுத்தார்.
1.தாவர உயிர்
2.விலங்கின் உயிர்
3.மனித உயிர். 

வரும் தொடரில் இஸ்லாமும் அறிவியலும் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்று காண்போம் இன்ஷா அல்லாஹ்.