குர்ஆனின் கருவியல் சம்பந்தமான வசனங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் திக்கு முக்காடும் உலகின் பிரபல நாத்திகர்கள்.......(வீடியோ காணொளி உம் இணைப்பு)
எல்லாம் வல்ல ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
"Well I managed to watch the whole thing right up to the end, when RD himself is accosted outside the hall.
இந்த செய்தி உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் IERAவை பொருத்தவரை, அவர்களது இம்மாத செயல்திட்டத்தில் இது ஒரு பகுதி, அவ்வளவே.
விவாதத்திற்கென தனி பிரிவையே கொண்டுள்ளது இந்த அமைப்பு. சமூகத்தில் நன்கு அடையாளம் காணப்பட்ட நாத்திகர்களுடன் இவர்கள் நடத்திய விவாதங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
குறிப்பாக, சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான எட் பக்னர் (Dr.Ed Buckner) அவர்களுடன் "இஸ்லாமா? நாத்திகமா?" என்ற தலைப்பில் நடத்திய விவாதம் கவனிக்கத்தக்கது (இந்த விவாதத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
ஆக, நாத்திகர்களுடனான உரையாடல் என்பது இயல்பாகவே இவர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒன்று. அந்த உற்சாகம் தான் இந்த மாநாடு குறித்த அறிவிப்பிலும் பிரதிபலித்தது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஹம்ஸா அண்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (இவரைப் பற்றிய இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்) மற்றும் அட்னன் ரஷித் ஆகியோர் ஆவர்.
தெளிவான செயல்திட்டங்களுடன் மாநாட்டிற்குள் நுழைந்தனர்.
தங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் சிறுநூல்களை, விவாத காணொளிகளை விநியோகித்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களுடன் நாத்திகம் மற்றும் இஸ்லாம் குறித்து உரையாடினர்.
அவர்கள் எதற்காக அங்கு சென்றார்களோ அந்த சந்தர்ப்பத்தை வெகு விரைவிலேயே இறைவன் ஏற்படுத்தி கொடுத்தான்.
ஆம், நாத்திகர்களால் பெரிதும் மதிக்கப்படும் பரிணாமவியலாளர்களான PZ மயர்ஸ் (PZ Myers) மற்றும் ரிச்சர்ட் டாகின்ஸ் ஆகியோருடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் டாக்கின்ஸ்சுடன் சில நிமிடங்களே பேச நேரிட்டாலும், மயர்ஸ்சுடன் சுமார் 25 நிமிடங்கள் கலந்துரையாடக்கூடிய வாய்ப்பை பெற்றனர்.
இந்த மினி விவாதத்தை கண்ட விரிவுரையாளரின் பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.
ஆம்...முஸ்லிம்களின் அணுகுமுறை பல நாத்திகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
(இந்த வீடியோவின் முன்பகுதியை நாத்திகர்கள் தங்களது தளத்தில் முதலில் வெளியிடவில்லை. அதனை எடிட் செய்து பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டு அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. காரணம், முஸ்லிம்கள் தான் இந்த விவாதத்தை முதலில் படமெடுக்க தொடங்கினர். சிறிது நேரம் சென்ற பிறகுதான் நாத்திகர்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆகையால், முதல் சில நிமிடங்களை அவர்கள் தவறவிட்டு விட்டனர். அவர்கள் எவற்றை எடுத்தார்களோ அதனை தங்கள் தளங்களில் முதலில் வெளியிட்டு விட்டனர். இது தான் நடந்தது. ஆகையால், நாத்திகர்கள் எடிட் செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட வேண்டியது.)
சரி, இப்போது அந்த விவாதத்திலிருந்து (மேலோட்டமாக) சில தகவல்கள்...
பொதுவான விசயங்களைப்பற்றி முதலில் கேள்விகளை கேட்டு, தன்னுடைய விளக்கத்தை கொடுத்து, பினனர் மயர்ஸ்சை குர்ஆனை நோக்கி மிக அழகாக கொண்டு வந்தார் ஹம்ஸா. குர்ஆன் கூறக்கூடிய விஷயங்கள் மனிதர்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை விளக்கினார்.
ஆனால், மயர்ஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஹம்ஸா தொடர்ந்தார். குர்ஆன், மலைகளை பற்றி கூறும் விஷயங்கள் இன்றைய அறிவியலோடு எப்படி ஒத்துப்போகின்றது என்பதை பிரபல விஞ்ஞானிகளின் கூற்றோடு நிரூபிக்க முயன்றார்.
மயர்ஸ் இது பற்றி பேசாமல் குர்ஆன் கூறும் சிசு வளரியல் (Embryology) பற்றி பேச தொடங்கினார் (இந்த துறையை சார்ந்தவர் மயர்ஸ்)
இந்த நேரத்தில் அட்னன் ரஷீதும் வாதத்தில் இணைந்து கொண்டார். உலக பிரசித்தி பெற்ற சிசு வளரியல் நிபுணரான டாக்டர் கீத்மூர் அவர்கள், குரானின் சிசு வளரியல் குறித்த கருத்துக்களை ஆமோதித்திருக்கின்றார் என்ற வாதத்தை முஸ்லிம்கள் முன்வைக்க, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் மயர்ஸ். மேலும் கீத்மூர் அவர்களின் கருத்தை ஏதோ ஒரு வார்த்தையில் மயர்ஸ் விமர்சிக்க அந்த வார்த்தை எடிட் செய்யப்பட்டு பீப் ஒலி கொடுக்கப்பட்டது.
குர்ஆன் கூறும் சிசு வளரியல் குறித்த தகவல்கள் அன்றைய கால மனிதர்களால் யூகிக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், அரிஸ்டாட்டிலிடமிருந்து முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த தகவல்களை நகல் எடுத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார் மயர்ஸ்.
அதற்கு ஹம்ஸா கேட்டார் "சிசு வளரியலுக்கு ஒத்துவராத பல விசயங்களை அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கின்றார். காப்பி அடித்திருந்தால் அனைத்தையும் தானே அடித்திருக்கவேண்டும்? அது எப்படி முஹம்மது (ஸல்) அவர்கள் சரியான ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு, தவறானவற்றை விலக்கியிருக்கின்றார்?'
மயர்ஸ் ஒப்புக்கொள்ளவில்லை. குர்ஆனில் கூறப்பட்டுள்ள சிசு வளரியல் குறித்த கருத்துக்கள், அன்றைய கால மனிதர்களால் யூகிக்க கூடிய ஒன்றுதான் என்பதில் உறுதியோடு இருந்தார். முஹம்மது (ஸல்) அவர்கள், அன்றைய கால அறிஞர்களுடன் கலந்துரையாடி இந்த தகவல்களை பெற்றிருக்கவேண்டும் என்று சொல்ல, அதற்கு ஹம்ஸா "அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?" என்று கேட்க, மயர்ஸ் சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தார்.
பின்னர், "இது ஒரு நியாயமான யூகம்" என்று தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டார் மயர்ஸ் .
மற்றொரு சுவாரசிய நிகழ்வும் நடந்தது.
"இதே போன்ற கருத்துக்களை தான் மத நம்பிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கின்றீர்கள்" என்று மயர்ஸ் கூற, திரும்ப அடித்தார் பாருங்கள் ஹம்ஸா.
"Professor Myers, உங்களுக்கு எப்படியிருக்கும்? நாத்திகர்கள் காலங்காலமாக இதே வாதங்களைதான் வைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இப்படிதான் நாத்திகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் என நானும் சொல்லலாமா?" என்று கேட்க, சற்று யோசனைக்கு பிறகு புன்முறுவலோடு மயர்ஸ் சொன்னார் "Go Ahead".
சிறிது நேரம் சென்று அறோன்ரா (AronRa) என்ற நாத்திகர் மயர்ஸ்சுடன் சேர்ந்து கொண்டார்.
அவர் சொன்னார், "உங்கள் குர்ஆன் பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவில்லை"
அதற்கு ரஷீத் சொன்னார், "பரிணாமத்தை பற்றி குர்ஆன் பேசவில்லை"
மறுபடியும் அறோன்ரா "உங்கள் குரான் மாபெரும் வெள்ளத்தை பற்றி பேசுகின்றது" (கிருத்துவம் சொல்லக்கூடிய நூஹ் (அலை) அவர்களது வரலாறு அப்படியே குர்ஆனில் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல. குரான் சொல்லக்கூடிய வெள்ளம் கிருத்துவத்தில் உள்ளது போல அல்ல)
அதற்கு ரஷீத், "இதுவும் குர்ஆனில் இல்லை"
மறுபடியும், மலைகளை பற்றியும், அதன் செயலாற்றங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர் முஸ்லிம்கள். எப்படி ஒரு பழங்கால புத்தகம் இவ்வளவு துல்லியமாக இந்த விசயத்தை கூறியிருக்க முடியும் என்று கேள்வி கேட்க, அதற்கு அறோன்ரா "நீங்கள் சொல்வது சிறு பகுதி மட்டுமே. மலைகள் விசயத்தில் இன்னும் பல செய்திகள் உள்ளன" என்று கூறினார். மொத்தத்தில், குரானின் மலைகள் பற்றிய தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.
பின்னர் பேசப்பட்டதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் வாதம்தான். அதாவது உணர்வுப்பூர்வமான வாதங்கள்
கடவுளை மறுக்க, இவர்களைப் போன்றவர்கள் கூட, அறிவியல் ஆதாரங்களை கொடுக்காமல், உணர்வுப்பூர்வமான வாதங்களை தான் வைக்கின்றனர். ம்ம்ம்...
உணர்வுரீதியாக கடவுளை மறுப்பது பற்றி பேசும்போது குர்ஆனின் பின்வரும் வசனம் நினைவுக்கு வருகின்றது,
இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன்" நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். --- Qur'an 2:30.
கடைசியாக மயர்ஸ்சிடம், "உங்கள் போக்குவரத்துக்கான செலவை நாங்களே ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஒரு முழுமையான இதுபோன்ற உரையாடலுக்கு வரச்சொல்லி அழைத்தால் தாங்கள் வருவீர்களா?" என்று ஹம்ஸா கேட்க, அதற்கு "பார்க்கலாம்" என்று கூறினார் மயர்ஸ்.
அதேநேரம், தன்னுடைய நிகழ்ச்சிக்கு (The Magic Sandwich Show) முஸ்லிம்களை அழைப்பதாக கூறினார் அறோன்ரா.
"அங்கு எனக்கு sandwich கிடைக்குமா? அது ஹலால் உணவுதானே" என்று ஹம்ஸா கேட்க அனைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்
பின்னர் டாகின்ஸ்சுடன் சிறிது நேரம் உரையாடினார் ஹம்ஸா. எடுத்த எடுப்பிலேயே டாகின்ஸ் கேட்ட முதல் கேள்வி "நீங்கள் பரிணாமத்தை நம்புகின்றீர்களா?"
அதற்கு ஹம்ஸா சொன்ன பதிலை நான் மிகவும் ரசித்தேன். மிக அழகாக கூறினார், "என்னை கேட்கின்றீர்களா? நான் அந்த முடிவை எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இன்னும் இல்லை"
Wowwwww....
இந்த பதிலை கேட்ட டாகின்ஸ், "இது ஒரு அறிவார்ந்த பதில். நான் உங்களுக்கு ஆதாரங்கள் குறித்து விளக்குகின்றேன்" என்று ஆரம்பிக்க, அதற்கு மேல் நடந்த டாகின்ஸ்-ஹம்ஸா ஆகியோரது உரையாடலையும், நான் மேலே சொன்ன மயர்ஸ்-அறோன்ரா-ஹம்ஸா-ரஷீத் ஆகியோரது விவாதத்தையும் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
இந்த வீடியோ குறித்து பதிவெழுதியிருக்கின்றனர் டாகின்ஸ்சும், மயர்சும். அதில் இஸ்லாம் குறித்த அவர்களது அறியாமை தெள்ளத்தெளிவாக பளிச்சிடுகின்றது.
இவர்களது அறியாமையை உலகறியச்செய்யும் விதமாக அதிரடியான ஒரு வீடியோவை மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கின்றது IERA. அந்த வீடியோவை கீழே பார்க்கலாம்.
சுப்ஹானல்லாஹ்...எவ்வளவு பொறுமையாக, தெளிவாக விளக்குகின்றார் அட்னன் ரஷீத்.
இந்த மாநாட்டின்போது பல்வேறு சங்கடங்களை சந்தித்தபோதும் (கண்ணியமற்ற வார்த்தையை ஹம்ஸாவை நோக்கி பயன்படுத்தி தன்னை யாரென்று காட்டிக்கொடுத்திருக்கின்றார் டாகின்ஸ்), அவற்றையெல்லாம் இறைவனுக்காக பொறுத்து கொண்டு, இஸ்லாமை கொண்டு செல்வதில் மட்டுமே தங்களின் கவனத்தை செலுத்திய இந்த அற்புத உள்ளங்களுக்கு, இவ்வுலகிலும் மறுமையிலும் மிகச்சிறந்த கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.
இறுதியாக:
இந்த மாநாடு குறித்து மிக அருமையாக பின்வருவதை கூறினார் ரஷீத்,
இந்த மாநாட்டிலிருந்து வெளியே வந்த போது என்னுடைய இறைநம்பிக்கை மேலும் வலுவாகியிருப்பதை உணர்ந்தேன்.
இறைவா, எங்களை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவாயாக...ஆமீன்.
Please Note:
கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி, விவாதத்திற்கு வருமாறு டாகின்ஸ்சை அழைத்தாகிவிட்டது.
எனக்கு புரியாத விஷயம் இதுதான். நாத்திகத்தை மேலும் கொண்டு செல்ல வேண்டுமென்றுதானே மாநாடு நடத்தினார்கள்? அவர்கள் எதனை ஆணித்தரமாக நம்புகின்றார்களோ அதனைப்பற்றி விவாதிக்கதானே அழைக்கின்றோம்? கலந்து கொள்வதில் என்ன தயக்கம்? சமூகத்தில் நன்கு அறியப்பட்ட மற்ற சில நாத்திகர்கள் கலந்து கொள்ளும்போது டாகின்ஸ்சுக்கு மட்டும் என்ன பிரச்சனை?
அவருக்கே வெளிச்சம்.
இறைவா, நீ நாடுவோரில் டாகின்ஸ்சையும் சேர்த்து கொள்வாயாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
IERA's Official Website:
1. http://www.iera.org.uk. link
Brother Hamza's official website and blog:
1. http://www.hamzatzortzis.com. link
2. hamzatzortzis.blogspot.com. link
Br.Hamza's debate with Ed Bucker:
1. Islam or Atheism? You decide - youtube. link
References:
1. IERA DAWAH TEAM RESPONDS TO INTERNATIONAL ATHEISM - IERA website. link
2. IERA engages with PZ Myers, AronRa & Richard Dawkins at the World Atheist Convention - Youtube. link
5. The full Muslim monty - PZ Myers blog. link
நன்றி : தோழர் ஆஷிக் அஹமது